அரசியல்,செய்திகள்,பரபரப்பு செய்திகள்,முதன்மை செய்திகள் பா.ஜனதா கூட்டணியில் இருந்து தேமுதிக விலக முடிவு!…

பா.ஜனதா கூட்டணியில் இருந்து தேமுதிக விலக முடிவு!…

பா.ஜனதா கூட்டணியில் இருந்து தேமுதிக விலக முடிவு!… post thumbnail image
சென்னை:-பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா கூட்டணியில் தே.மு.தி.க., ம.தி.மு.க., பா.ம.க., உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றது. கூட்டணியில் மற்ற கட்சிகளை விட தே.மு.தி.க. அதிக இடங்களில் போட்டியிட்டது. அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் தமிழ்நாடு முழுவதும் பிரசாரம் செய்தார்.ஆனால் தேர்தலில் தே.மு.தி.க., ம.தி.மு.க., கட்சிகளுக்கு ஒரு இடம் கூட கிடைக்கவில்லை. பா.ஜனதாவும், பா.ம.க.வும் தலா ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது.தேர்தலுக்குப்பின் பா.ஜனதா மந்திரி சபை பதவி ஏற்பு விழாவில் தமிழக கூட்டணி கட்சிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை. இதனால் பா.ஜனதா மீது அதிருப்தி அடைந்தன.இந்நிலையில், இலங்கை அதிபர் ராஜபக்சேக்கு தேர்தலில் வெற்றி பெற பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார். இதை கண்டித்து ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, பா.ஜனதா கூட்டணியில் இருந்து விலகினார்.

இதற்கிடையே பா.ஜனதா கூட்டணியில் தே.மு.தி.க., பா.ம.க.வும் அதிருப்தியில் உள்ளன. பா.ம.க. இளைஞர் அணி தலைவரும் எம்.பி.யுமான அன்புமணி 2016 சட்டமன்ற தேர்தலில் தன்னை முதல்–அமைச்சர் வேட்பாளராக அறிவித்து போட்டியிடுவோம் என்று கூறி இருந்தார்.இதே போல் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்தும் தன்னை முதல்–அமைச்சர் வேட்பாளராக முன்கூட்டியே அறிவித்தால் தான் கூட்டணியில் நீடிப்போம் என்று நிபந்தனை விதித்தார். ஆனால் இந்த இரு கட்சிகளின் நிபந்தனைகளுக்கு பா.ஜனதா தரப்பில் இருந்து எந்த பதிலும் இல்லை.இந்த நிலையில் சென்னைக்கு முதல் முறையாக வந்த பா.ஜனதா கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷாவை அன்புமணி, ஏ.சி.சண்முகம் உள்ளிட்ட கூட்டணி தலைவர்கள் மட்டும் சந்தித்தனர். விஜயகாந்த் அவரை சந்திக்காமல் புறக்கணிப்பு செய்தார்.முதல்–அமைச்சர் வேட்பாளராக தன்னை அறிவிக்காததால் அவர் அமித்ஷாவை சந்திக்க வில்லை என்று கூறப்பட்டது. இதற்கிடையே சென்னையில் பேட்டியளித்த அமித்ஷா, தமிழக சட்டமன்ற தேர்தலில் பா.ஜனதா முதல் – அமைச்சர் வேட்பாளரை அறிவித்து போட்டியிடும் என்று கூறினார்.

அமித்ஷாவின் இந்த அறிவிப்பால் கூட்டணி கட்சிகள் அதிருப்தியில் உள்ளன. இது பற்றி தே.மு.தி.க. எம்.எல்.ஏ. ஒருவர் கூறுகையில், பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா கூட்டணியில் தங்கள் கட்சி பிரதான இடம் விகித்தது. அதேபோல் சட்டமன்ற தேர்தலிலும் தங்களுக்கு பிரதான இடம் வேண்டும். விஜயகாந்த் முதல்–அமைச்சர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம்.ஆனால் பா.ஜனதா தரப்பில் உடனே முதல்–அமைச்சர் வேட்பாளரை அறிவிக்க முடியாது. அவ்வாறு அறிவித்தால் அதற்கு பா.ம.க. எதிர்ப்பு தெரிவிக்கும் என்று தெரிவித்து விட்டது. இப்போது ஆளுக்கு ஒரு பக்கமாக முதல்–அமைச்சர் வேட்பாளர் பற்றி பல்லவி பாடுகிறார்கள் என்றார்.மேலும் அவர் கூறும்போது, விஜயகாந்த் தான் கூட்டணி தலைவராக ஏற்றுக்கொள்ள வேண்டும். பா.ஜனதாவை விட எங்கள் கட்சிக்குத்தான் தமிழ்நாட்டில் செல்வாக்கு அதிகம் என்றார்.ஆனால் தே.மு.தி.க. கோரிக்கையை ஏற்காமல் பா.ஜனதா முதல்–அமைச்சர் வேட்பாளரை அறிவிக்கும் என்று அமித்ஷா கூறிவிட்டதால் அந்த கூட்டணியில் இருந்து தே.மு.தி.க. விலகும் முடிவு எடுக்கும் என்று அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.சமீபத்தில் விஜயகாந்த் நடத்திய கிறிஸ்துமஸ் விழாவில் பேசிய கிறிஸ்தவ பிரமுகர் பேராயர் எஸ்றா சற்குணம், அவரை மறைமுகமாக தி.மு.க.கூட்டணிக்கு அழைப்பு விடுத்தார். இதற்கு பதில் அளித்த விஜயகாந்த் இது பற்றி பின்னர் முடிவு செய்வேன் என்றார்.பா.ஜனதா கூட்டணியில் இருந்து விஜயகாந்த் விலகும் முடிவு எடுத்தால் தி.மு.க.கூட்டணியில் சேருவாரா?… அல்லது புதிய அணி அமையுமா?… என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி