செய்திகள்,விளையாட்டு ஐ.பி.எல்: இறுதிப்போட்டிக்கு முன்னேறுமா சென்னை!…

ஐ.பி.எல்: இறுதிப்போட்டிக்கு முன்னேறுமா சென்னை!…

ஐ.பி.எல்: இறுதிப்போட்டிக்கு முன்னேறுமா சென்னை!… post thumbnail image
மும்பை:-ஐ.பி.எல். கிரிக்கெட்டில் லீக் சுற்று நிறைவடைந்து தற்போது பிளே ஆப் சுற்று ஆட்டங்கள் தொடங்குகின்றன. இதில் புள்ளி பட்டியலில் 3–வது இடத்தை பிடித்த முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்சும், 4–வது இடத்தை பெற்ற நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்சும் ‘எலிமினேட்டர்’ என்று அழைக்கப்படும் வெளியேற்றுதல் சுற்றில் இன்றிரவு மும்பை பிராபோர்ன் மைதானத்தில் மோதுகின்றன. வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டிக்கான 2வது தகுதி சுற்றில் விளையாடும்.

ஆரம்பத்தில் அசத்திய சென்னை அணி இறுதிகட்டத்தில் தொடர்ந்து 3 ஆட்டங்களில் தோற்றதால் பின்னடைவை சந்தித்தது. லீக் போட்டிகளில் 9ல் வெற்றியும், 5ல் தோல்வியையும் எதிர்கொண்ட சென்னை அணி கடைசி லீக்கில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்சை தோற்கடித்ததால் மீண்டும் புது நம்பிக்கையை பெற்றுள்ளது.சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர் நியூசிலாந்தை சேர்ந்த பிரன்டன் மெக்கல்லம் மீண்டும் அணியுடன் இணைந்து இருப்பது மகிழ்ச்சிகரமான தகவலாகும். மெக்கல்லம், வெய்ன் சுமித், பாப் டு பிளிஸ்சிஸ் மற்றும் சுரேஷ் ரெய்னா ஆகியோரைத் தான் சென்னை அணி மலைபோல் நம்பியுள்ளது. இவர்களில் யாராவது நிலைத்து நின்றால் மட்டுமே கணிசமான ஸ்கோரை குவிக்க முடியும். இதனால் இவர்கள் பொறுப்பை உணர்ந்து விளையாட வேண்டியது முக்கியமாகும். வேகப்பந்து வீச்சாளர் ஆஷிஷ் நெஹரா உடல்தகுதி பெற்றதுடன், பார்முக்கு திரும்பியிருப்பது அணிக்கு பலமாகும்.

அது மட்டுமின்றி லீக் சுற்றில் மும்பை அணியை இரண்டு முறையும் 7 விக்கெட் மற்றும் 4 விக்கெட் வித்தியாசங்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோற்கடித்திருந்தது. இதனால் சென்னை அணி கூடுதல் உத்வேகத்துடன் களம் காணும் என்பதில் சந்தேகமில்லை.அதே நேரத்தில் அரபு நாட்டில் நடந்த முதற்கட்ட போட்டிகளில் தொடர்ச்சியாக 5 ஆட்டங்களில் தோல்லி கண்ட மும்பை அணி, ஒரு கட்டத்தில் போட்டியை விட்டு வெளியேறிய வேண்டிய விளிம்பில் தொங்கி கொண்டிருந்தது.அப்போது தான் அவர்களின் மீது அதிர்ஷ்ட தேவதையின் கருணை பார்வை விழுந்தது. ராஜஸ்தான் அணி தங்களது கடைசி 3 ஆட்டங்களிலும் மடிய வேண்டும், ஐதராபாத் அணி கடைசி லீக்கில் மண்ணை கவ்வ வேண்டும், ரன்ரேட்டில் முன்னிலை பெற வேண்டும். இந்த மூன்று விஷயங்களுக்கு சாதகமாக அமைந்தால் மட்டுமே மும்பைக்கு அடுத்த சுற்று என்ற நிலை இருந்தது. சொல்லி வைத்தாற் போல் இவை எல்லாம் நடந்து மும்பை அணியும் 7 வெற்றி, 7 தோல்வியுடன் பிளே–ஆப் சுற்றுக்குள் அடியடுத்து வைத்து விட்டது.

குறிப்பாக ராஜஸ்தானுக்கு எதிரான இறுதி லீக்கில் 14.3 ஓவருக்குள் 190 ரன்களை ‘சேசிங்’ செய்ய வேண்டிய நெருக்கடிக்கு மத்தியில் இந்த இலக்கை மும்பை அணி எட்டிய விதம் உண்மையில் அனைவரையும் மயிர்கூச்செரிய வைத்து விட்டது. 44 பந்துகளில் 95 ரன்கள் விளாசிய கோரி ஆண்டர்சன் ஒரே நாளில் மும்பை ரசிகர்களின் மனதில் கதாநாயகன் அந்தஸ்துக்கு உயர்ந்து விட்டார். இதே ஆக்ரோஷத்துடன், சொந்த ஊர் ரசிகர்களின் முன்னிலையில் விளையாடுவதற்கு மும்பை வீரர்கள் வரிந்து கட்டி ஆயத்தமாவதால், இன்றைய ஆட்டத்திலும் அனல் பறக்கும் என்று நம்பலாம். லென்டில் சிமோன்ஸ், மைக் ஹஸ்சி, கேப்டன் ரோகித் ஷர்மா, கோரி ஆண்டர்சன், அம்பத்தி ராயுடு, பொல்லார்ட் சரியான நேரத்தில் பார்முக்கு வந்திருப்பது சென்னை பவுலர்களுக்கு நிச்சயம் ‘தலைவலி’யாக அமையும் என்பதை மறுக்க முடியாது.இரவு 8 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை சோனி சிக்ஸ் மற்றும் சோனி செட்மேக்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி