பா.ஜ.க. மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், தேசிய செயற்குழு உறுப்பினர்கள் இல.கணேசன், தமிழிசை சவுந்தர்ராஜன், அகில இந்திய இணை பொதுசெயலாளர் சத்தீஷ் உள்பட தமிழகம் முழுவதும் இருந்து தேர்தல் பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்:
தமிழகத்தில் ‘”வீடு தோறும் மோடி,உள்ளம் தோறும் தாமரை”,என்ற நிகழ்ச்சி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சி வருகிற 12ந்தேதிக்குள் முடிவடைந்து விடும். குஜராத் முதல்வர் நரேந்திரமோடி தலைமையில் சர்தார் வல்லபாய் படேல் இரும்பு சிலை 597 அடியில் அமைக்கப்பட உள்ளது. இதற்காக தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களில் இருந்தும் இரும்பு சேகரிக்கும் பணி வருகிற 28ந்தேதிக்குள் முடிவடைகிறது.
வருகிற 31ந்தேதி தமிழகத்தில் மீனவர்களின் துயர் தீர்க்கும் வகையில் இலங்கை அதிபர் ராஜபக்சேவை கண்டித்து ராமேசுவரம் பாம்பனில் கடல் தாமரை போராட்டம் நடைபெற உள்ளது. இந்த போராட்டத்தில் சுஷ்மா சுவராஜ் கலந்து கொள்கிறார்.
இந்திய அளவில் மோடி அலை நன்றாக உள்ளது. தமிழகத்திலும் அந்த அலை முழுமையாக உள்ளது. பிப்ரவரி மாதம் 15ந் தேதிக்குள் குஜராத் முதல்வரும், பா.ஜ.க. பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடியை தமிழத்திற்கு மீண்டும் வருகை தருமாறு அழைத்துள்ளோம். அவர் வருகை தேதி ஓரிரு தினங்களில் அறிவிக்கப்படும் என்றார்.
காங்கிரஸ் கட்சி வருகிற பாராளுமன்ற தேர்தலில் தோல்வி அடையும். 100 தொகுதிகளில் கூட கண்டிப்பாக அவர்களால் வெற்றி பெற முடியாது. இதன் காரணமாகவே பிரதமர் மன்மோகன்சிங், இளைய தலைமுறைக்கு வழிவிட்டு பிரதமர் பதவிக்கு போட்டியிடப்போவதில்லை எனக் கூறினார். அவரின் விலகல் நாட்டிற்கு நல்லது தான். ஏனென்றால் அவர் காங்கிரஸ் அரசின் கைப்பாவையாக தான் இருந்துள்ளார். அவர் நல்ல மனிதர், திறமை படைத்தவர் தான். ஆனால் செயல்பட முடியாமல் இருந்து விட்டார்.
பா.ஜ.க. கூட்டணியில் சேர்ப்பது தொடர்பாக பா.ம.க.வுடன் ஏற்கனவே பேசி உள்ளோம். ம.தி.மு.க.வுடன் பேச்சுவார்த்தை முடிந்து விட்டது. தே.மு.தி.க.வுடன் கூட்டணி குறித்து பேசிவருகிறோம். தே.மு.தி.க. எங்கள் கூட்டணிக்கு வரும் என நம்பிக்கை உள்ளது.
மேலும் நடிகர் ரஜினி காந்த் உட்பட தமிழத்தில் உள்ள முக்கிய பிரமுகர்கள் மற்றும் தலைவர்களிடம் ஆதரவு கேட்க உள்ளோம். இதனால் பலமான அணியாக தமிழகத்தில் பாரதிய ஜனதா தேர்தலை எதிர்கொள்ளும் எனக் கூறினார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி