இதர பிரிவுகள்,முதன்மை செய்திகள் தென்னாட்டின் மொழியினம்-பாகம்4(மலையாளம்)

தென்னாட்டின் மொழியினம்-பாகம்4(மலையாளம்)

தென்னாட்டின் மொழியினம்-பாகம்4(மலையாளம்) post thumbnail image

மலையாளம்:

தமிழ் நாட்டின் மேற்கு பகுதியாகிய சேர நாட்டில் பேசப்படும் மொழி இது. திராவிட மொழிகளின் வினைகளில் உள்ள பால் காட்டும் விகுதிகள் மலையாள வினைகளில் இல்லை. இது ஏனைய திராவிட மொழிகளுக்கும் மலையாளத்திற்கும் உள்ள பெரிய வேறுபாடாகும்

இதனைத் தமிழோடு ஒத்த இன மொழி என்பதை விட , தமிழின்(மிகத்திரிந்த) கிளை மொழி என்று கொள்வது பொருந்தும் என்பார் கால்டுவெல்.

இம்மொழி தொடக்கத்தில் தமிழின் தங்கையாக அல்லாமல் , மகளாக இருந்த மொழி என அவர் கூறுகிறார். தொடக்கத்தில் சேரநாட்டில் தமிழே பேச்சு மொழியாகவும் இலக்கிய மொழியாகவும் இருந்தது.பின்னர் இப்பகுதிக்குத் தமிழ்நாட்டுடன் உறவு குறைந்தமையாலும் வட மொழிச்சார்பு மிகுந்தமையாலும் மிகமித்திரிந்து வேறொரு மொழியாக வளர்ந்தது. அவ்வாறு வளர்ந்த மொழியே மலையாளம் .இது புதிதாக வந்த வேற்று மொழியன்று , அந்நாட்டுத் தமிழ் திரிந்த திரிபே ஆதலின் கிளைமொழி என்பர் கால்டுவெல்.

இதனால் நாம் தெரிந்து கொள்ளும் உண்மை ஒன்றுண்டு . பழந்தமிழ் வேங்கடத்திற்கு வடக்கே ஒரு வகையாகத் திரிந்து தெலுங்கு மொழியாயிற்று . மேற்கே மற்றொரு வகையாகத்திரிந்து கன்னட மொழியாயிற்று, சேர நாட்டில் பிரிதொரு வகையாகத்திரிந்து மலையாள மொழியாயிற்று.இதுவே மொழியியல் கொள்கைக்குப் பொருந்தியதாகும்.

காலப்போக்கில் வட மொழிக்கலப்பால் மலையாளம் மிகவும் வேறுபட்டுவிட்டது . மலையாளத்தின் பழைய இலக்கியம் தமிழ் இலக்கியம் போன்றதே .தமிழர்களுக்கு விளங்கும் மொழியாகவே பழைய மலையாளம் உள்ளது.

மலையாளத்தின் முதல் இலக்கியம் இராமசரிதம் ,இது தமிழ் ஒலியாலாகிய தமிழ் இலக்கியம் போலவே உள்ளது. பழைய மலையாள இலக்கியத்தில் தமிழ் மொழியில் உள்ள 12 உயிரும் 18 மெய்யும் மிகுதியாக உள்ளன. கிரந்த எழுத்தையொட்டி மலையாளத்திற்கு எழுத்துக்கள் அமைந்ததால் பிற்காலத்தில் மற்ற ஒலிகளும் மிகப் பயின்று கலந்தன. வடசொற்கலப்பும் மிகுந்தது. இம்மாறுதல்கள் 18, 19ஆம் நூற்றாண்டுகளில் ஏற்பட்டவையாகும்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி