சென்னை செங்குன்றத்தைச் சேர்ந்தவர் கணேசன். லாரி அதிபர். அதோடு, பல பிசினஸ் செய்துவருகிறார். கடந்த 2-ந் தேதி இரவு கணேசன் வீட்டுக்கு 4 பேர் வந்தனர். அவர்களில் ஒருவர், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சீருடையில் இருந்தார். போலீஸ் சீருடையில் இருந்த நபர், `தன்னை எஸ்.ஐ., பாண்டியன் என்று கணேசனிடம் அறிமுகம்செய்துகொண்டார். பிறகு, உங்கள் லாரிகளில் மணல் கடத்தப்படுகிறது. அதுதொடர்பாக விசாரிக்க வேண்டும்’ என்று கூறி காரில் அவரை அழைத்துச்சென்றனர்.
போலீஸ் நிலையத்துக்குச் செல்லாமல் கார் வேறு இடத்துக்குச் சென்றது. இதனால் கணேசன், காரில் இருந்தவர்களிடம் வாக்குவாதம் செய்தார். உடனே, காரில் இருந்தவர்கள் கணேசனின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டினர். வீட்டை விட்டுச் சென்ற கணேசனைக் காணவில்லை என்று அவரின் உறவினர்கள் செங்குன்றம் போலீஸில் புகார் கொடுத்தனர். அதன்பேரில், போலீஸார் விசாரித்தனர். இந்த நிலையில், கணேசனின் செல்போனிலிருந்து அவரின் வீட்டுக்கு ஒரு போன் அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர், நாங்கள்தான் கணேசனைக் கடத்தியுள்ளோம். 25 லட்ச ரூபாய் பணத்தைக் கொடுக்கவில்லை என்றால், கணேசனைக் கொலைசெய்து தலையை வீட்டின் வாசலில் போட்டுவிட்டுச் சென்றுவிடுவோம் என்று மிரட்டினர். இதைக்கேட்ட கணேசனின் உறவினர்கள் பீதியடைந்தனர்.
இந்தத் தகவலை போலீஸாரிடம் அவர்கள் தெரிவித்தனர். உடனடியாக கடத்தல் கும்பலை பொறி வைத்துப் பிடிக்க போலீஸார் திட்டமிட்டனர். கடத்தல்காரர்கள் கேட்ட பணத்தைக் கொடுக்க கணேசனின் உறவினர்கள் சம்மதித்தனர். அதன்படி கடத்தல்காரர்கள் கூறிய இடத்துக்கு பணத்துடன் சென்றனர். அப்போது, அங்கு வந்த நான்கு பேரை போலீஸார் துப்பாக்கி முனையில் மடக்கிப்பிடித்தனர். அதோடு, இந்த கடத்தல் வழக்கில் தொடர்புடைய மேலும் நான்கு பேரையும் போலீஸார் பிடித்தனர். அவர்களிடமிருந்து கணேசனையும் போலீஸார் மீட்டனர். பிடிப்பட்டவர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தி, அவர்களைக் கைதுசெய்தனர்.
இதுகுறித்து போலீஸார் கூறுகையில், “கணேசனின் வீட்டுக்கு போலீஸ் சீருடையில் சென்றவர் திருப்போரூரைச் சேர்ந்த சுமன். 9-ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளார். இவர்தான் இந்த கடத்தலுக்குத் திட்டம் வகுத்தவர். கடத்தலுக்கு தலைவனாகச் செயல்பட்டது, செங்குன்றம் அருகே உள்ள வடகரையைச் சேர்ந்த வடகரை சக்தி, கடத்தலுக்கு ஸ்கெட்ச் போட்டுக் கொடுத்தவர். செங்குன்றத்தைச் சேர்ந்த சிவா, எண்ணூரைச் சேர்ந்த மதன்குமார், ஆந்திராவைச் சேர்ந்த கணேஷ், குரோம்பேட்டையைச் சேர்ந்த அசோக், செங்குன்றத்தைச் சேர்ந்த ராஜேஷ், சதீஷ்குமார். இவர்கள் எல்லோரும் கூலிப்படையினர். இந்த வழக்கில் எட்டுப் பேரை கைதுசெய்துள்ளோம். இந்த வழக்கில் கந்தன் என்பவர் தலைமறைவாக உள்ளார். போலீஸ் சீருடையில் சென்று கணேசனைக் கடத்தியதுகுறித்து விசாரித்துவருகிறோம். மேலும் சுமன், சிறுவயதில் கணேசனிடம் வேலைபார்த்துள்ளார். இதனால், அவரிடம் லட்சக்கணக்கில் பணம் இருப்பதைப் பார்த்த சுமன்தான் கடத்தலுக்குத் திட்டம் போட்டுள்ளார். கடத்தல் கும்பலிடமிருந்து கத்தி, போலீஸ் சீருடை, கார் ஆகியவற்றைப் பறிமுதல் செய்துள்ளோம்” என்றனர்.
போலீஸ் சீருடையில் லாரி அதிபர் கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்ரபை ஏற்படுத்தியுள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி