செய்திகள்,விளையாட்டு முதலாவது அரை இறுதியில் தென் ஆப்பிரிக்கா 281 ரன்கள் குவிப்பு!…

முதலாவது அரை இறுதியில் தென் ஆப்பிரிக்கா 281 ரன்கள் குவிப்பு!…

முதலாவது அரை இறுதியில் தென் ஆப்பிரிக்கா 281 ரன்கள் குவிப்பு!… post thumbnail image
ஆக்லாந்து:-உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெறும் முதலாவது அரை இறுதி ஆட்டத்தில் நியூசிலாந்து-தென் ஆப்பிரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. ஆக்லாந்தில் நடைபெற்று வரும் இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி துவக்க ஆட்டக்காரர்களாக டி காக்கும், அம்லாவும் களமிறங்கினர். இருவரும் அதிரடியாக விளையாடிய நிலையில், அம்லாவை 10 ரன்னில் போல்டாக்கினார் பவுல்ட். இதையடுத்து 3வது விக்கெட்டுக்கு டு பிளிஸ்சிஸ் களமிறங்கினார். சிறிது நேரத்தில் அடித்து ஆட முயன்ற டி காக்கும் பவுல்ட் பந்தில் சவுத்தியிடம் கேட்ச் கொடுத்து 14 ரன்னில் ஆட்டமிழந்தார்.

இதையடுத்து ரூஸ்சோ, டு பிளிஸ்சிஸ்சுடன் ஜோடி சேர்ந்தார். இருவரும் இணைந்து மிக நிதானமாக ஆடி ஒன்றிரண்டு ரன்களாக அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதனால் 14வது ஓவரில் தென் ஆப்பிரிக்க அணி 50 ரன்களை கடக்க முடிந்தது. தொடர்ந்து இருவரும் பொறுமையை கடைபிடித்து 25வது ஓவரில் அணியின் ஸ்கோரை 100 ஆக உயர்த்தினர். ஆனால் நன்றாக விளையாடி கொண்டிருந்த ருஸ்சோ எதிர்பாராத விதமாக ஆண்டர்சன் பந்தில் குப்தில்லிடம் கேட்ச் கொடுத்து 39 ரன்னில் அவுட்டானார்.
இதையடுத்து கேப்டன் டி வில்லியர்ஸ், டு பிளிஸ்சிஸ்சுடன் ஜோடி சேர்ந்தார். 30 ஓவர் முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 3 விக்கெட்டுகளை இழந்து 129 ரன்களை எடுத்திருந்தது. 31வது ஓவரிலிருந்து டி வில்லியர்சும், டு பிளிஸ்சிஸ்சும் அதிரடியாக ஆட தொடங்கினர். அந்த ஓவரிலேயே தனது அரை சதத்தை பூர்த்தி செய்த டு பிளிஸ்சிஸ் சிக்சர் அடித்தும் அசத்தினார். அதன் பிறகு வீசப்பட்ட 4 ஓவர்களிலும் பவுண்டரிகள் விளாசப்பட்டதில் 35வது ஓவரின் போது அணியின் ஸ்கோர் 184-ஐ தொட்டது. 36வது ஓவரில் சிக்சர் மற்றும் 2 பவுண்டரிகள் விளாசப்பட்டன. 38வது ஓவரில் 2 பவுண்டரிகள் விளாசப்பட்ட நிலையில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தடைபட்டது. அப்போது அணியின் ஸ்கோர் 216 ஆக இருந்தது.

மழை நின்ற பின் மீண்டும் ஆட்டம் தொடங்கிய போது போட்டிக்கான ஓவர்கள் 43 ஆக குறைக்கப்பட்டது. மீண்டும் ஆட்டம் தொடங்கிய போது வீசப்பட்ட 39வது ஓவரின் 2வது பந்தில் டு பிளிஸ்சிஸ் 82 ரன்னில் அவுட்டானார். இதையடுத்து மில்லர் களமிறங்கினார். அவரது ஆட்டம் மிரட்டல் அடியாக அமைந்தது. 40வது ஓவரில் 4 பவுண்டரிகளை விரட்டிய மில்லர், 41வது ஓவரில் 2 சிக்சர்கள் மற்றும் 1 பவுண்டரியை விளாசினார். அதிரடியாக விளையாடி 18 பந்துகளில் 49 ரன்கள் குவித்த மில்லர் 43வது ஓவரில் ஆண்டர்சன் பந்தில் ரோஞ்சியிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். இதையடுத்து நிர்ணயிக்கப்பட்ட 43 ஒவரில் தென் ஆப்பிரிக்க அணி 5 விக்கெட் இழப்புக்கு 281 ரன்கள் எடுத்தது. கேப்டன் டி வில்லியர்ஸ் 65 ரன்களுடனும், டுமினி 8 ரன்களுடனும் அவுட்டாகாமல் களத்தில் இருந்தனர். 30வது ஓவரின் போது 129 ரன்களை மட்டுமே எடுத்திருந்த தென் ஆப்பிரிக்க அணி அடுத்த 13 ஓவர்களில் 152 ரன்களை குவித்தது குறிப்பிடத்தக்கது. நியூசிலாந்து அணிக்கு வெற்றி இலக்காக 298 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி