செய்திகள்,முதன்மை செய்திகள்,விளையாட்டு முடிவுக்கு வந்தது தென்ஆப்பிரிக்காவின் நாக்-அவுட் சாபம்!…

முடிவுக்கு வந்தது தென்ஆப்பிரிக்காவின் நாக்-அவுட் சாபம்!…

முடிவுக்கு வந்தது தென்ஆப்பிரிக்காவின் நாக்-அவுட் சாபம்!… post thumbnail image
தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 1992-ம் ஆண்டு உலக கோப்பையில் முதல்முறையாக அடியெடுத்து வைத்தது. அது முதல், முந்தைய 2011-ம் ஆண்டு உலக கோப்பை வரை அந்த அணிக்கு நாக்-அவுட் சுற்றை கண்டாலே உதறல் வந்து விடும். அதாவது லீக் சுற்றிலும், முந்தைய உலக கோப்பையில் கடைபிடிக்கப்பட்ட சூப்பர் சிக்ஸ், சூப்பர்-8 சுற்றுகளிலும் கணிசமான வெற்றிளை குவித்து விடுவார்கள். ஆனால் அதன் பிறகு வரும் ‘தோற்றால் வெளியேற்றப்படும்’ நாக்-அவுட் சுற்றுகளில் பதற்றத்தில் சமாளிக்க முடியாமல் வீழ்ந்து விடுவார்கள்.

முதல் முறையாக 1992-ம் ஆண்டு சிட்னியில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான அரைஇறுதியில், மழை பாதகமாக அமைய பரிதாபமாக தோற்க நேரிட்டது. 1996-ம் ஆண்டு உலக கோப்பையில் கால்இறுதியில் லாராவின் சதத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் வெஸ்ட் இண்டீசிடம் உதை வாங்கியது. 1999-ம் ஆண்டு உலக கோப்பையில் அரைஇறுதியில் ஆஸ்திரேலியாவுடன் சமன் (டை) ஆகி வெளியேறியது. அதைத் தொடர்ந்து 2003-ம் ஆண்டு முதல் சுற்றோடு நடையை கட்டிய அந்த அணி 2007-ம் ஆண்டு அரைஇறுதியில் ஆஸ்திரேலியாவிடமும், 2011-ம் ஆண்டு கால்இறுதியில் நியூசிலாந்திடமும் மண்ணை கவ்வியது.

இதனால் தென்ஆப்பிரிக்காவை ‘நாக்-அவுட் சுற்றில் கோட்டை விடும்’ அணி என்று அடிக்கடி கிண்டல் செய்வார்கள். நீண்ட காலமாக நிலவிய இந்த மோசமான அவப்பெயருக்கு நேற்றைய இலங்கைக்கு எதிரான கால்இறுதியில் வெற்றி பெற்றதன் மூலம் தென்ஆப்பிரிக்கா முடிவு கட்டியது. எந்த இடத்தில் முதல்முறையாக நாக்-அவுட்டில் தோற்றார்களோ அதே இடத்தில் விமோசனம் பெற்றிருக்கிறார்கள்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி