அரசியல்,செய்திகள்,முதன்மை செய்திகள் 2022ம் ஆண்டுக்குள் அனைவருக்கும் வீடு: ஜனாதிபதி உரையில் அறிவிப்பு!…

2022ம் ஆண்டுக்குள் அனைவருக்கும் வீடு: ஜனாதிபதி உரையில் அறிவிப்பு!…

2022ம் ஆண்டுக்குள் அனைவருக்கும் வீடு: ஜனாதிபதி உரையில் அறிவிப்பு!… post thumbnail image
புதுடெல்லி:-பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. சுமார் 1 மாதம் நடைபெற உள்ள இந்த கூட்டத்தொடரின் முதல் நிகழ்வாக பாராளுமன்ற இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி உரையாற்றினார்.முன்னதாக பாராளுமன்றத்துக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பாரம்பரிய மரபுப்படி குதிரைப்படை அணிவகுத்து அழைத்து வரப்பட்டார். பாராளுமன்ற வாசலில் அவரை துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரி, பிரதமர் நரேந்திர மோடி, சபாநாயகர் சுமித்ரா, பாராளுமன்ற விவகார மந்திரி வெங்கையா நாயுடு ஆகியோர் வரவேற்று அழைத்து சென்றனர். பாராளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி உரையாற்றியபோது கூறியதாவது:–

மத்திய அரசு நாட்டின் எதிர் காலத்துக்காக தனது வலுவான பணிகளை திறம்பட செய்யத்தொடங்கியுள்ளது. நாட்டின் வளர்ச்சிக்காக, ஏழை–எளிய மக்களின் நலனுக்காக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை, பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.மத்திய அரசின் நேரடி மானியத்திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இந்த திட்டத்துக்காக வங்கிகளில் ரூ.11 ஆயிரம் கோடி செலுத்தப்பட்டுள்ளது.கடந்த 6 மாதங்களில் இந்த அரசு சாதனையை செய்துள்ளது.நாடெங்கும் இந்த திட்டத்தை செம்மையாக செயல்படுத்த 13 ஆயிரம் கோடி புதிய வங்கி கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. இதனால் சமையல் கியாஸ் நேரடி திட்டத்தில் 75 சதவீதம் பூர்த்தியாகி உள்ளது.நாட்டில் உள்ள அனைவருக்கும் தேவையானதை இந்த அரசு செய்து கொடுத்து வருகிறது. அனைவருக்கும் வங்கிக்கணக்கு தொடங்கப்படும் திட்டமும் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. விரைவில் இது 100 சதவீதத்தை எட்டும்.

இந்தியாவை சுத்தமான நாடாக மாற்ற கடந்த அக்டோபர் மாதம் தூய்மை இந்தியா திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் நாட்டு மக்கள் அனைவரும் ஆர்வத்துடன் பங்கேற்க வேண்டியது அவசியமாகும்.பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொருவரும், தங்கள் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 50 சதவீதத்தை தூய்மை இந்தியா திட்டத்துக்காக செலவழிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் கிராம பகுதிகளில் ஏராளமானவர்கள் புதிய வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர்.எதிர்கால திட்டங்களை செயல்படுத்த வலுவான வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. அந்த வகையில் 2022–ம் ஆண்டுக்குள் அனைவருக்கும் வீடு கட்டி கொடுக்கப்படும். மிகவும் நவீன முறையில் இந்த வீடுகள் கட்டி வழங்கப்படும்.
நமது நாட்டை உற்பத்தி மையமாக மாற்ற தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. நாட்டின் ஒட்டு மொத்த வளர்ச்சிக்காகவும் புதிய திட்டங்கள் தீட்டப்படும். பொருளாதார வளர்ச்சியை உத்வேகப்படுத்த முன்னுரிமை கொடுக்கப்படும்.

பொருளாதாரத்தை உயர்த்த அரசால் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அதன் ஒரு பகுதியாக பணவீக்கம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அது போல அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வை தடுக்கவும் சிறப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.கல்வி கற்பதை ஊக்கப்படுத்தவும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. தாழ்த்தப்பட்டவர்கள், சிறுபான்மை இனத்தை சேர்ந்த மாணவர்களுக்கு கல்வி மேம்பாடு பெற உதவித்தொகைகள் அதிகமாக வழங்கப்பட்டு வருகின்றன.உலகிலேயே இந்தியாவில்தான் அதிக இளைஞர்கள் உள்ளனர். அவர்களை நல்வழிப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இளைஞர்களிடம் காணப்படும் போதைக்கு அடிமையாகும் பழக்கத்தை விரட்ட புதிய திட்டங்கள் செயல்படுத்தப்படும்.அதுபோல பெண்கள் பாதுகாப்பை உறுதிபடுத்தவும் சில புதிய திட்டங்கள் அறிமுகம் செய்யப்படும். பாலியல் ரீதியாக துன்புறுத்தலுக்கு உள்ளானவர்களுக்கு மருத்துவ வசதி செய்து கொடுக்கப்படும்.பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் திட்டங்கள் அமல்படுத்தப்படும். ஒவ்வொரு அரசுக்கும் பட்ஜெட் கூட்டத்தொடர் மிகவும் முக்கியமானதாகும். தற்போது சவாலான எதிர்காலத்தை நாடு எதிர் கொண்டுள்ளது. நாட்டு மக்களின் வாழ்க்கை தரம் உயர்வதை இந்த அரசு லட்சியமாகக்கொண்டுள்ளது.
எனவே வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது. நவீன தொழில் நுட்பங்களை பயன்படுத்தி உணவு பொருட்கள் உற்பத்தியை அதிகரிக்க புதிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

நாட்டின் வளர்ச்சியில் ஏழைகளையும் மேம்பாட்டுக்கு அழைத்து செல்ல அரசு முன்னுரிமை கொடுத்துள்ளது. நிலையான, சீரான பொருளாதார உரிய இழப்பீடு தொகை வழங்கப்படும்.
நாடெங்கும் நாட்டின் வளர்ச்சிக்காக நிலம் கையகப்படுத்த புதிய சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த திட்டத்தால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு தொகை வழங்கப்படும். விவசாயிகளின் நலனை பாதுகாப்பதே இந்த அரசின் கடமை.கருப்பு பணம் பதுக்கலை தடுக்க தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.தேசிய நிதி கமிஷன் அமைப்பது உள்ளிட்ட சட்ட சீர்திருத்தங்களை செய்ய அரசு முன்னுரிமை கொடுக்கும்.மேக் இன் இந்தியா திட்டம் தீவிரப்படுத்தப்படும். இது இந்தியாவை உலகிலேயே பொருளாதாரத்தில் வேகமாக வளரும் நாடாக மாற்றும். தற்போது நாட்டின் ஒட்டு மொத்த வளர்ச்சி விகிதம் 7.4 சதவீதமாக உள்ளது.தேசிய ஊரக மேம்பாட்டு இயக்கத்துக்கு இறுதி வடிவம் கொடுக்கப்படும். அது போல ஸ்மார்ட் சிட்டிகளை உருவாக்கும் திட்டமும் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது.ரெயில்வேயில் பல புதிய சீர்திருத்தங்கள் கொண்டு வரப்படும். வரி சீர்திருத்தங்களுக்கு அரசு முன்னுரிமை கொடுக்கப்படும். வளர்ச்சிக்கு தடையாக உள்ள சட்டங்கள் நீக்கப்படும்.

தொழில்நுட்பத்தை சர்வதேச தரத்துக்கு எடுத்துச்செல்லவும் புதிய திட்டங்கள் தீட்டப்பட்டு வருகிறது. கடலோர பாதுகாப்புக்கு மேலும் முக்கியத்துவம் கொடுக்கப்படும்.கப்பல் தொழில் மேம்படுத்தப்படும். திறன் மேம்பாட்டுக்காக புதிய அமைச்சகம் உருவாக்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் விதிமுறைகள் தயாரிக்கப்பட்டுள்ளன.நமது நாட்டின் உள்நாட்டு பாதுகாப்புக்கு தீவிரவாதம் பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. அந்த தீவிரவாதத்தை ஒடுக்க அரசு உறுதி பூண்டுள்ளது.தெற்காசிய நாடுகளுடன் ஒத்துழைப்பும், நட்பும் மேலும் மேம்படுத்தப்படும். காஷ்மீரில் சுமூகமான ஒரு சூழ்நிலை உருவாக்கப்படும்.காஷ்மீர் மாநிலத்தில் இருந்து வெளியேறிய 60 ஆயிரம் குடும்பங்கள், மீண்டும் அவர்களது சொந்த ஊரில் குடியமர்த்தப்படுவார்கள். அது போல வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களின் நலனுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படும்.நமது பாராளுமன்றம் ஜனநாயகத்தின் புனித பகுதியாக திகழ்கிறது. இந்திய மக்கள், குறிப்பாக ஏழை–எளிய மக்கள் பாராளுமன்றம் மீது முழு நம்பிக்கை வைத்துள்ளனர்.தங்களது நியாயமான எதிர் பார்ப்புகளை பாராளுமன்றம் நிறைவேற்றும் என்று நம்புகிறார்கள். அந்த நம்பிக்கைக்கு பாத்திரமாக இந்த அரசு செயல்படும். இவ்வாறு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி உரையாற்றினார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி