அரசியல்,செய்திகள்,முதன்மை செய்திகள் தேர்தல் கமிஷனில் ஆம் ஆத்மி, பா.ஜனதா மாறி, மாறி புகார்!…

தேர்தல் கமிஷனில் ஆம் ஆத்மி, பா.ஜனதா மாறி, மாறி புகார்!…

தேர்தல் கமிஷனில் ஆம் ஆத்மி, பா.ஜனதா மாறி, மாறி புகார்!… post thumbnail image
புதுடெல்லி:-டெல்லி சட்டசபைக்கு 7ம் தேதி தேர்தல் நடைபெற இருப்பதால் அரசியல் கட்சிகள் தேர்தல் விளம்பரங்கள் கொடுத்து வருகிறது. இதில் பாரதீய ஜனதா வெளியிட்டுள்ள ஒரு விளம்பரத்தில், நாட்டின் குடியரசு தினத்தை கோடிக்கணக்கான மக்கள் தேசிய விழாவாக கொண்டாடுகிறார்கள். இதனை பெருமையாக கருதுகிறார்கள். ஆனால் உங்கள் இடையூறு உண்டாக்கும் சமுதாயம் இதற்கு இடைஞ்சல் ஏற்படுத்த நினைக்கிறது என்று உள்ளது. இந்த விளம்பரம் தனது சாதியை தாக்கி பா.ஜனதா கொடுத்துள்ளதாக ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் புகார் கூறியுள்ளார். இதுபற்றி அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதாவது:-

பா.ஜனதா கடந்த சில நாட்களாக என்னை தனிப்பட்ட முறையில் தாக்கி விளம்பரங்கள் கொடுத்தது. பின்னர் எனது குழந்தைகளை தாக்கி விளம்பரம் கொடுத்தனர். சிலர் தனிப்பட்ட முறையில் தாக்குதல் தொடுத்தால் அதனை தாங்கிக்கொள்ளும் சக்தி உனக்கு வேண்டும் என்று அன்னா ஹசாரே வழக்கமாக கூறுவார். அதனாலேயே நான் அமைதியாக இருந்தேன். ஆனால் இப்போது அவர்கள் எல்லையை தாண்டிவிட்டனர். பா.ஜனதாவின் சண்டை என்னுடன் தான், அவர்கள் என்ன சொல்ல வேண்டுமோ அதனை எனக்கு எதிராகத்தான் சொல்ல வேண்டும். எனது ஒட்டுமொத்த இனத்தையும் அவர்கள் தாக்கியுள்ளனர்.இதனை ஏற்றுக்கொள்ள முடியாது. அவர்கள் எனது ஒட்டுமொத்த இனத்திடம் மன்னிப்பு கேட்க வேண்டும். பா.ஜனதா இனரீதியான தாக்குதல்களை நிறுத்த வேண்டும் என தேர்தல் கமிஷனிடம் புகார் செய்ய இருக்கிறோம். இத்தகைய பழிதூற்றும் அரசியலை டெல்லி மக்கள் விரும்பமாட்டார்கள். இவ்வாறு அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார். இந்த பிரச்சினை குறித்து அரவிந்த் கெஜ்ரிவால் தனது இல்லத்தில் கட்சியின் உயர்மட்ட தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

ஆம் ஆத்மி தேசிய செயலாளர் பங்கஜ் குப்தா இதுதொடர்பாக தேர்தல் கமிஷனில் புகார் செய்தார். புகாரில், இதுபோன்ற விளம்பரங்கள் வெளியிடுவதன் மூலம் அவர்கள் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியுள்ளனர். எனவே அவர்கள் மீது உறுதியான, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். ஆனால் இந்த குற்றச்சாட்டை மறுத்து பா.ஜனதா செய்தி தொடர்பாளர் நரசிம்மராவ் கூறும்போது, தேர்தல் அரசியலில் ஆம் ஆத்மி தலை தாழ்ந்து நிற்கிறது. அரவிந்த் கெஜ்ரிவால் அவரது இனத்தினருக்கு எப்படி வேண்டுகோள் விடுக்கிறார் என்பதை நீங்கள் பார்க்கிறீர்கள். தேர்தல் ஆதாயத்துக்காக ஒவ்வொரு முயற்சியிலும் சமுதாயத்தை இழுக்கிறார் என்றார். விளம்பரத்தை திசைதிருப்புவதாக ஆம் ஆத்மி மீது பா.ஜனதாவும் தேர்தல் கமிஷனில் புகார் கூறியுள்ளது. மத்திய மந்திரி பியூஷ் கோயல் தேர்தல் அதிகாரிகளை சந்தித்த பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது:-

ஆம் ஆத்மி தேர்தல் நடவடிக்கையில் சாதியை பற்றி கூறிய இந்த சம்பவம் குறித்து தேர்தல் கமிஷனிடம் கூறியிருக்கிறோம். பா.ஜனதாவின் விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டு இருப்பது கலக மனப்பான்மை சிந்தனை உள்ளவர்களை பற்றித்தான். ஆனால் ஆம் ஆத்மியின் நடவடிக்கை இதனை சாதி, மத ரீதியாக திசைதிருப்புவதாக உள்ளது. இத்தகைய நடவடிக்கைகளுக்காக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேர்தல் கமிஷனில் புகார் கூறியுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி