செய்திகள்,திரையுலகம்,முதன்மை செய்திகள் ‘லிங்கா’ நஷ்டம்: உண்ணாவிரதத்திற்கு அனுமதி கோரி நீதிமன்றத்தில் மனு!…

‘லிங்கா’ நஷ்டம்: உண்ணாவிரதத்திற்கு அனுமதி கோரி நீதிமன்றத்தில் மனு!…

‘லிங்கா’ நஷ்டம்: உண்ணாவிரதத்திற்கு அனுமதி கோரி நீதிமன்றத்தில் மனு!… post thumbnail image
சென்னை:-ரஜினி நடிப்பில் வெளியான ‘லிங்கா’ திரைப்படம், கடந்த டிசம்பர் 12ம் தேதி வெளியானது. படம் வெளியாகி ஏறத்தாழ ஒரு மாதத்தை எட்டியுள்ள நிலையில் படத்தின் ஒட்டு மொத்த வசூல் 200 கோடியை தாண்டிவிட்டது என்று ஒரு புறம் செய்திகள் வருகின்றன. ஆனால் மற்றொரு புறம், ‘லிங்கா’ படத்தை வாங்கிய விநியோகஸ்தர்களோ படத்தை வாங்கி வெளியிட்டதில் தங்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுவிட்டதாக கூறி வருகின்றனர்.

45 கோடியில் தயாரிக்கப்பட்ட ‘லிங்கா’ படத்தை 220 கோடி வரைக்கும் வியாபாரம் செய்திருக்கிறார்கள். ரிலீஸ் ஆன 22 நாளில் 30 சதவிகிதத்தை மட்டுமே திரும்பப் பெற்றிருப்பதாக விநியோகஸ்தர்கள் தரப்பு தெரிவிக்கிறது. இதனாலேயே பெரும் நஷ்டம் ஏற்பட்டு விட்டதாக அவர்கள் கூறுகின்றனர். இந்த நஷ்டம் குறித்து யாரும் கண்டு கொள்ளவில்லை என்றும் இதைக் கண்டித்து, ஜனவரி 10ல் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் இருக்க விநியோகஸ்தர்கள் முடிவெடுத்தனர். இதற்கு மாநகர காவல்துறை இதுவரை அனுமதி தரவில்லை என்று கூறப்படுகிறது. எனவே உண்ணாவிரதம் இருக்க காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மெரினா பிக்சர்ஸ் நிறுவனத்தின் பங்குதாரரான சிங்காரவடிவேலன் மனு தாக்கல் செய்துள்ளார்.

தனது மனுவில் அவர் கூறியுள்ளதாவது; மெரினா பிக்சர்ஸ் என்ற தனது நிறுவனம் தியேட்டர் உரிமையாளர்களிடம் இருந்து 8 கோடி ரூபாய் பெற்று, திருச்சி மற்றும் தஞ்சாவூர் ஏரியாக்களுக்கான லிங்கா படத்தை விநியோகம் செய்யும் உரிமத்தை பெற்றது. பின்னர் இந்த ஏரியாக்களில் உள்ள தியேட்டர்களில் படம் திரையிடப்பட்டது. நல்ல வசூலை தரும் என்று எதிர்பார்ப்பு நிலவிய நிலையில், தியேட்டர்களில் படத்திற்கான வசூல் குறைவாகவே காணப்பட்டது. இதனால் நஷ்டம் ஏற்பட்டதால் தியேட்டர் உரிமையாளர்கள் கொடுத்த பணத்தை திரும்ப தருமாறு கேட்டனர். இதை தொடர்ந்து நஷ்டம் குறித்து படத்தின் தயாரிப்பாளர் மற்றும் நடிகர் ரஜினியிடம், நஷ்டம் குறித்த தகவலை கூறினேன். எனினும் யாரிடமிருந்தும் எவ்வித பதிலும் வரவில்லை. எனவே வரும் 10 ஆம் தேதி நஷ்ட ஈடு வழங்க வலியுறுத்தி உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்துள்ளோம். இதற்கு அனுமதி வழங்க காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிடவேண்டும் என்று தனது மனுவில் சிங்காரவடிவேலன் கூறியுள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி