இந்த தொடர் தோல்வி காங்கிரஸ் மூத்த தலைவர்களிடம் கடும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. மராட்டியம், அரியானா, காஷ்மீர், ஜார்க்கண்ட் ஆகிய 4 மாநிலங்களை பா.ஜ.க.விடம் இழந்துள்ளதோடு, அதிக அளவில் ஓட்டு சதவீத சரிவும் ஏற்பட்டிருப்பதுதான் காங்கிரஸ் மூத்த தலைவர்களிடம் மிகுந்த கவலையை ஏற்படுத்தி உள்ளது. காங்கிரஸ் தலைவர் சோனியா உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய செவ்வாய்க்கிழமை அன்று வெளியான காஷ்மீர், ஜார்க்கண்ட் மாநில தேர்தல் முடிவுகள் அவரை மேலும் தளர்வடையச் செய்தது. அன்று முழுவதும் மிகுந்த அதிருப்தியுடன் காணப்பட்ட சோனியா நேற்று காங்கிரஸ் மூத்த தலைவர்களை அழைத்து தேர்தல் தோல்வி குறித்து ஆலோசனை நடத்தினார். அப்போது அவர், காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்டுள்ள தொடர் தோல்வி மற்ற மாநில காங்கிரஸ் தொண்டர்களிடம் மனதை பாதிக்க செய்து விடக்கூடாது. எனவே காங்கிரசை அமைப்பு ரீதியில் மாற்றி அமைப்பது பற்றி முடிவுகள் எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இதையடுத்து எல்லா மாநிலங்களிலும் நிர்வாகிகளை மாற்ற காங்கிரஸ் தலைவர்கள் தீவிரமாகியுள்ளனர்.
காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி சமீப காலமாக மிகவும் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளார். அவரால் நீண்ட தொலைவுக்கு பயணம் செய்ய முடியாத நிலை உள்ளது. எனவே காங்கிரஸ் தலைவர் பொறுப்பை அவர் ராகுலுக்கு விட்டுக் கொடுப்பார் என்று தெரிகிறது. அகில இந்திய அளவில் காங்கிரஸ் கட்சியின் அமைப்புகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்படும் போது, ராகுல் தலைமைப் பொறுப்பை ஏற்பார் என்று கூறப்படுகிறது. ராகுல் தலைமையில் இளைஞர்களுக்கு கட்சியில் அதிக வாய்ப்பு கிடைக்கும் என்று தெரிய வந்துள்ளது.இதற்கிடையே காங்கிரஸ் கட்சியை ராகுல்காந்தியால் முழுமையான ஆற்றலுடன் வழி நடத்தி செல்ல முடியுமா?… என்ற சந்தேகம் காங்கிரஸ் மூத்த தலைவர்களிடம் ஏற்பட்டுள்ளது. மக்கள் மத்தியில் இன்னமும் நம்பிக்கை ஏற்படவில்லை என்று அவர்கள் கருதுகிறார்க்ள.
ஜார்க்கண்ட்டில் ராகுல் பிரசாரம் செய்த 8 தொகுதிகளில் 7 தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர்கள் படுதோல்வி அடைந்து விட்டதை அதற்கு உதாரணமாக அவர்கள் கூறுகிறார்கள். மேலும் ராகுல் கட்சி தலைவர் பதவியை ஏற்றால் தங்களுக்குரிய அங்கீகாரமும், அந்தஸ்தும் இல்லாமல் போய் விடும் என்ற பயமும் காங்கிரஸ் மூத்த தலைவர்களிடம் ஏற்பட்டுள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி