செய்திகள்,விளையாட்டு உலக செஸ் போட்டி: 7-வது சுற்று டிரா!…

உலக செஸ் போட்டி: 7-வது சுற்று டிரா!…

உலக செஸ் போட்டி: 7-வது சுற்று டிரா!… post thumbnail image
சோச்சி:-நடப்பு சாம்பியன் மாக்னஸ் கார்ல்சன் – விஸ்வநாதன் ஆனந்த் இடையிலான உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி ரஷியாவின் சோச்சி நகரில் நடந்து வருகிறது. 7-வது சுற்று ஆட்டம் நேற்று நடந்தது. வெள்ளை நிற காயுடன் ஆடிய கார்ல்சன் தனது ராஜாவுக்கு முன் இருந்த சிப்பாயை இரண்டு கட்டம் நகர்த்தி ஆட்டத்தை ஆரம்பித்தார். கருப்பு நிற காயுடன் விளையாடிய ஆனந்த் தன்னுடைய ராஜாவுக்கு முன் இருந்த சிப்பாயை 2 கட்டம் நகர்த்தி ஆட்டத்தை தொடங்கினார். கார்ல்சன் ரய்லோபஸ் முறையில் ஆட்டத்தை நகர்த்தினார்.

இந்த முறையில் தான் கார்ல்சன் 2-வது சுற்றில் வெற்றி பெற்று இருந்தார். ஆனால் ஆனந்த் மாற்றி ரய்லோபஸ் பெர்லின் முறையில் தாக்குதல் தொடுத்தார். இருவரும் மின்னல் வேக ஆட்டத்தை கடைப்பிடித்தனர். 8 நகர்த்தலுக்குள் ராணிகள் வெட்டுப்பட்டன. 32 நிமிடங்களில் இருவரும் 22 நகர்த்தலை மேற்கொண்டனர்.இதனால் ஆட்டம் மிக விரைவில் முடிந்து சாதனை படைக்குமோ என்ற எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால் அதன் பிறகு ஆனந்த் தனது பாணிக்கு மாறாக நிதானத்தை கையில் எடுத்தார். திடீரென யாரும் எதிர்பாராத வகையில் ஆனந்த் தனது பிஷப்பை பலி கொடுத்து கார்ல்சனின் இரண்டு சிப்பாய்களை கபளீகரம் செய்தார்.இது ஆட்டத்தில் திருப்பு முனையாக இருந்ததுடன், ஆனந்துக்கு பின்னடைவாகவும் அமைந்தது. ஒரு கட்டத்தில் ஆனந்துக்கு 4 சிப்பாய்களும், ஒரு யானை மற்றும் ராஜா இருந்தது. கார்ல்சனுக்கு இரண்டு சிப்பாய், ஒரு யானை, ராஜா ஆகியவற்றுடன் கூடுதலாக ஒரு குதிரை இருந்தது.

இதனால் யானைக்கு, யானை வெட்டுப்பட்டாலும் டிரா ஏற்படும் சூழ்நிலை நிலவியது. யானைக்கு, யானை வெட்டலாம் என்ற நிலை 29-வது காய்நகர்த்தலில் வந்த போது கார்ல்சன் சாமர்த்தியமாக தனது யானையை வைத்து ஆடி ஆனந்தின் சிப்பாயை காவு கொண்டார். ஆனந்துக்கு வெற்றி வாய்ப்பு இல்லை என்றாலும், கார்ல்சனுக்கும் வெற்றி திரிசங்கு நிலையாக தான் இருந்தது.71-வது மற்றும் 72-வது காய் நகர்த்தலில் இருவரும் ஒரு சிப்பாயை அடுத்தடுத்து பறிகொடுத்தனர். 77-வது காய்நகர்த்தலில் கார்ல்சனிடம் எஞ்சி இருந்த ஒரு சிப்பாயையும் ஆனந்த் வீழ்த்தினார். 92-வது காய் நகர்த்தலில் கார்ல்சன், ஆனந்திடம் மீதமிருந்த ஒரு சிப்பாயை பறித்தார்.121-வது காய் நகர்த்தலில் ஆனந்த், யானைக்கு, யானையை வாங்கினார். அத்துடன் ஆட்டம் டிராவில் முடிந்தது. இந்த ஆட்டம் 6 மணி 26 நிமிடம் நீடித்தது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி