பின்னர், 287 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களம் இறங்கியது. தொடக்க வீரர் ரகானே 2 ரன்னும், கடந்த போட்டியில் 264 ரன்கள் குவித்து சாதனைப் படைத்த ரோகித் சர்மா 9 ரன்னிலும் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தனர்.3-வது விக்கெட்டுக்கு கேப்டன் வீராட் கோலி- அம்பதி ராயுடு ஜோடி சேர்ந்தனர். இந்த ஜோடி சிறப்பாக விளையாடி இந்திய அணியை வெற்றி நோக்கி இழுத்துச் சென்றது. சிறப்பாக விளையாடி வந்த ராயுடு 59 ரன்னில் துரதிர்ஷ்டவசமாக 59 ரன்னில் ரன் அவுட் ஆகி வெளியேறினார். அதன்பின் வந்த வீரர்கள் சீரான இடைவெளியில் அவுட் ஆனதால் இந்திய அணி வெற்றி பெறுமா? என்ற சந்தேகம் ஏற்பட்டது.
ஆனால், வீராட் கோலி களத்தில் இருந்ததால் கடைசி வரை அவர் நிலைத்து நின்றால் அணியை வெற்றிபெற வைத்துவிடுவார் என்று ரசிகர்கள் நம்பிக்கையுடன் இருந்தனர். அதனை பூர்த்தி செய்யும் வகையில் அக்சார் பட்டேலுடன் சேர்ந்து வீராட் கோலி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.அக்சார் பட்டேல் களம் இறங்கும்போது இந்திய அணி வெற்றிக்கு 40 பந்தில் 56 ரன் தேவைப்பட்டது. அப்போது வீராட் கோலி சதம் அடித்து களத்தில் இருந்தார். 45-வது ஓவரில் அக்சார் பட்டேல் ஒரு பவுண்டரி அடித்தார். அந்த ஓவரில் இந்தியாவிற்கு 7 ரன் கிடைத்தது. 46-வது ஓவரை மெண்டிஸ் வீசினார். இந்த ஓவரில் வீராட் கோலி ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர் விளாசினார். இதனால் இந்த ஓவரில் 13 ரன்கள் கிடைத்தது.
அதன்பின் இந்திய அணியின் வெற்றிக்கு 24 பந்தில் 34 ரன் தேவைப்பட்டது. 47-வது ஓவரை எரங்கா வீசினார். இந்த ஓவரில் அக்சார், கோலி தலா ஒரு பவுண்டரி விரட்ட 13 ரன் கிடைத்தது. இதனால் கடைசி 3 ஓவரில் 21 ரன் தேவைப்பட்டது. 48-வது ஓவரை மாத்யூஸ் வீசினார். இந்த ஓவரில் 8 ரன் எடுக்கப்பட்டது.கடைசி இரண்டு ஓவரில் 13 ரன் தேவைப்பட்டது. 49-வது ஓவர் முதல் பந்தில் வீராட் கோலி யாரும் எதிர்பார்க்காத வகையில் ஹெலிகாப்டர் ஷாட் மூலம் இமாலய சிக்ஸ் விலாசினார். இந்த ஓவரின் 4-வது பந்தில் மேலும் ஒரு சிக்சர் விளாசி போட்டியை முடிவுக்கு கொண்டு வந்தார் கோலி.இதனால் இந்தியா 48.4 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 288 ரன்கள் குவித்து 3 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. வீராட் கோலி 126 பந்தில் 12 பவண்டரி, 3 சிக்சருடன் 139 ரன்களும், அக்சார் பட்டேல் 14 பந்தில் 2 பவுண்டரியுடன் 17 ரன்களும் எடுத்து கடைசி வரை அவுட்டாகாமல் இருந்தனர். இந்த வெற்றியின் மூலம் இந்தியா 5-0 என்ற கணக்கில் இலங்கை அணியை ஒயிட்வாஷ் செய்தது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி