உடல்நிலை சரியானதும் ‘கோச்சடையான்’ படத்தில் நடித்தேன். சவுந்தர்யா டைரக்டு செய்தார். அந்த படம் நிறைய அனுபவங்களை அவருக்கு கற்றுக் கொடுத்தது. நான் பணம் சம்பாதிக்கிறேன். அந்த பணத்தை சவுந்தர்யா விரயம் செய்யாமல் இருந்தாலே போதும்.ஆனாலும் சினிமாவைப் பற்றி நிறைய விஷயங்களை அந்த படம் சவுந்தர்யாவுக்கு புரிய வைத்தது. படம் வெளியானதும் நிறைய பேர் உங்கள் முகத்தை ஒரு காட்சியிலாவது பார்க்க ஆசைப்பட்டோம். காட்டவில்லையே என்றனர். அதைக் கேட்டதும் உடனே படம் பண்ண வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது. அது எளிதல்ல என்பது தெரியும். அரசியலுக்கு வருவது எளிது. அதுபோல் படம் பண்ணி விடலாம். ஆனால் அதை மக்கள் ஏற்பது மாதிரி செய்ய வேண்டும். அப்போது கே.எஸ்.ரவிக்குமார் என்னை சந்தித்து ஒரு கதை இருக்கிறது என்றார். அந்த கதையை கேட்டேன். எனக்கு பிடித்தது.
40 வருட சினிமா அனுபவம் எனக்கு இருக்கிறது. ரோபோ, சிவாஜி என்று ஒவ்வொரு படத்துக்கும் பல வருடங்கள் இடைவெளி ஏற்பட்டது. இந்த படத்துக்கும் அதுபோல் இடைவெளி வருவதை நான் விரும்பவில்லை. கே.எஸ்.ரவிக்குமாரிடம் 6 மாதத்தில் இந்த படத்தை முடித்தால் நடிக்க தயார் என்றேன். அவருக்கும் சிரமங்கள் இருந்தன. அவரும் யோசித்து விட்டு சரி என்றார்.கஷ்டப்பட்டு படத்தை எடுத்தோம். அரங்குகள், சண்டை காட்சிகள், அணைப் பகுதியில் நடந்த படப்பிடிப்புகள், பெரிய டெக்னீஷியன்களை ஒருங்கிணைப்பது, படப்பிடிப்புக்கு அனுமதி பெறுவது என நிறைய சிரமங்கள் இருந்தன. அதை எல்லாம் சந்தித்து இந்த படத்தை எடுத்து முடித்துள்ளோம்.படப்பிடிப்பில் என்னை ஒரு குழந்தை மாதிரி பார்த்துக் கொண்டனர். பாதுகாப்புக்கு நிறைய ஆட்கள் இருந்தார்கள். இந்த அன்புக்கெல்லாம் என்ன கைமாறு செய்வது என்று புரியவில்லை.அரசியல் பற்றி அமீர், விஜயகுமார், வைரமுத்து உள்ளிட்ட பலரும் இங்கு பேசினார்கள். என் மனதில் இருப்பது யாருக்கும் தெரியாது என்று வைரமுத்து சொன்னார்.
என்னை பற்றி எனக்கு தெரியாது. நான் ஒரு சூழ்நிலையின் பொருள். சூழ்நிலை எப்படி இருக்கிறதோ அப்படி இருக்கிறேன். அரசியல் என்பது என்ன? அதன் ஆழம் என்ன? என்பது எனக்கு தெரியும்.
யார் தோளில் ஏறி போகவேண்டும் எத்தனை பேரை மிதித்து போக வேண்டும் என்பது தெரியும். அப்படி போகும்போது நாம் நினைத்ததை எல்லாம் செய்ய முடியுமா? என்ற சந்தேகம் ஏற்படுவதும் தெரியும். இதெல்லாம் ஒரு காற்றழுத்த தாழ்வுநிலை மாதிரி. ஒரு அலை மாதிரி. அதெல்லாம் ஏற்பட வேண்டும்.
அரசியல் ஆழம் எனக்கு தெரியும் என்பதால்தான் தயங்குகிறேன். இங்கு பேசியவர்கள் எல்லோரும் நான் அரசியலில் ஈடுபட வேண்டும் என்றனர். அதற்கெல்லாம் பதில் பேசாமல் போனால் திமிர் பிடித்தவன். தலைக்கனம் என்றெல்லாம் என்னை பற்றி நினைத்து விடுவார்கள். அதற்காகத்தான் என் மனதில் இருப்பதை சொன்னேன். இருந்தாலும் மக்களுக்கு ஏதேனும் செய்ய வேண்டும் என்ற எண்ணம் என் மனதில் இருக்கிறது. அதை நிச்சயம் செய்வேன்.இவ்வாறு ரஜினி பேசினார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி