செய்திகள் சொகுசுக் கப்பல் விபத்தில் பலியான இந்தியரின் சடலம் 1025 நாட்களுக்கு பின்னர் மீட்பு!…

சொகுசுக் கப்பல் விபத்தில் பலியான இந்தியரின் சடலம் 1025 நாட்களுக்கு பின்னர் மீட்பு!…

சொகுசுக் கப்பல் விபத்தில் பலியான இந்தியரின் சடலம் 1025 நாட்களுக்கு பின்னர் மீட்பு!… post thumbnail image
ரோம்:-இத்தாலியைச் சேர்ந்த கோஸ்ட்டா கான்கார்டியா என்ற சொகுசுக் கப்பல் கடந்த 13-01-2012 அன்று இத்தாலியின் பிரபல சுற்றுலாத்தலமான ஐஸோலா டெல் கிக்லியோ தீவையொட்டிய கடற்பகுதியில் ஒரு பெரிய பாறையின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், அந்தக் கப்பலில் பயணித்த 32 பேர் பலியாகினர். நூற்றுக்கணக்கானவர்கள் காயமடைந்தனர். கடலில் மூழ்கி தத்தளித்தவர்களை காப்பாற்ற முயன்ற ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த மீட்புப் படை வீரர் ஒருவரும் பலியாக, இந்த விபத்தின் பலி எண்ணிக்கை 33 ஆக உயர்ந்தது.

பலியானவர்களில் 31-வது நபரின் பிரேதம் கடந்த ஆகஸ்ட் மாதம்தான் கிடைத்தது. இந்நிலையில், விபத்துக்குள்ளான கப்பலில் இருந்த உணவகத்தில் ‘வெயிட்டர்’ ஆக பணி புரிந்த இந்தியரான ருஸ்ஸெல் ரெபெல்லோ என்பவரின் பிரேதம் பற்றிய எந்த தகவலும் இதுவரை கிடைக்காததால், ‘அவர் என்ன ஆனார்?’ என்பது மர்மமாகவே இருந்து வந்தது. இதற்கிடையில், விபத்துக்குள்ளான கோஸ்ட்டா கான்கார்டியா கப்பல் இனி கடல் பயணத்துக்கு உதவாது என்பதால், அது ஏலத்தில் விடப்பட்டது. ஏலம் எடுத்த நிறுவனம் அந்த கப்பலை மற்றொரு கப்பல் மூலம் லிகுரியா தலைநகர் ஜெனோவா நகரின் துறைமுகப் பகுதிக்கு இழுத்துச் சென்றது.அங்கு அந்த கப்பலை உடைக்க முற்படுகையில், ஒரு சிறிய அறையினுள் (கேபின்) சிதிலமடைந்த நிலையில் ருஸ்ஸெல் ரெபெல்லோவின் பிரேதம் தற்போது கிடைத்துள்ளது.

இந்த தகவலை தனது ‘பேஸ்புக்’ நண்பர்களுடன் பரிமாறிக் கொண்ட ருஸ்ஸெல் ரெபெல்லோ-வின் சகோதரர் கெவின், எனது சகோதரரின் உடலை எப்படியாவது கண்டுபிடித்து ஒப்படைப்பேன் என்று குடும்பத்தாரிடம் வாக்குறுதி அளித்து இருந்தேன்.1025 நாட்களுக்குப் பிறகு என் சகோதரரின் உடல் கிடைத்த செய்தியை எனது பெற்றோருக்கு தெரிவித்தபோது எனது இதயம் மிகவும் கனத்தது. இதயத் துடிப்பு அதிகரித்து, உடல் நடுங்கியது. அவரது உடல் கிடைக்க வேண்டும் என்று கடவுளிடம் வேண்டிக் கொண்ட அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.இத்தாலியில் அவரது பிரேதப் பரிசோதனை முடிவடைந்து, இந்தியாவுக்கு கொண்டுவரும் அந்த நாளை எங்கள் குடும்பம் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து, காத்துக் கொண்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி