மறுமுனையில் சாயாஜி ஷிண்டேவின் மகன் பிரகாஷ் ராஜ் தங்கையான டாப்சியை ஒரு தலையாக காதலிக்கிறான். அவளையே திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று ஆசைப்படுகிறான். தனது மகனின் ஆசையை நிறைவேற்ற வேறு வழியில்லாமல் பிரகாஷ் ராஜை எம்.எல்.ஏ.வாக்க முடிவு செய்கிறார் சாயாஜி.தனக்கு எம்.எல்.ஏ., பதவி கிடைக்கப்போகும் சந்தோஷத்தில் பிரகாஷ் ராஜும் தனது தங்கையை அவனுக்கு திருமணம் செய்து கொடுக்க சம்மதம் தெரிவிக்கிறார்.இருவருக்கும் திருமண ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேளையில் ஒருநாள் காந்தி சிலைக்கு கீழே விஷ்ணு மஞ்சுவும், டாப்சியும் தாங்கள் யாரென்றே தெரியாமல் அருகருகில் அமர்ந்து ஐஸ்கிரீம் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதை காரில் போகும் பிரகாஷ் ராஜ் பார்த்துவிட இருவரும் காதலிக்கிறார்கள் என்பதை தவறாக புரிந்து கொள்கிறார்.விஷ்ணு மஞ்சுவை தேடிச் சென்று மிரட்டுகிறார். பதிலுக்கு விஷ்ணுவும் அவரிடம் சண்டைக்கு வருகிறார். டாப்சியிடமும் தனது முரட்டு குணத்தை காண்பிக்கிறார் பிரகாஷ் ராஜ். டாப்சியும் உண்மையை பிரகாஷ்ராஜிடம் எடுத்துக்கூற முயல்கிறார். ஆனால் பிரகாஷ் ராஜ் எதையும் காதில் வாங்கிக் கொள்வதாக இல்லை.
கிக் பாக்சிங்கில் பங்கேற்க செல்லும் விஷ்ணுவை, பிரகாஷ் ராஜின் ஆட்கள் தொந்தரவு செய்வதால், அவனால் அதில் கலந்து கொள்ள முடியாமல் போகிறது. விஷ்ணு மஞ்சுவின் குடும்பத்தையும், அவரது வீட்டையும் அடித்து நொறுக்குகிறார்கள். விஷ்ணுவின் தங்கை திருமணமும் பாதியில் நின்று விடுகிறது.இதனால், கோபமடைந்த விஷ்ணு, பிரகாஷ் ராஜை கொலை செய்ய முடிவெடுத்து கிளம்புகிறார். அப்போது டாப்சி தற்கொலை செய்துகொள்ள ஆற்றில் குதிக்கிறாள். அவளைக் காப்பாற்றி விஷ்ணு பைக்கில் கூட்டிச் செல்கிறார்.இவர்களை நேருக்கு நேர் சந்திக்கும் பிரகாஷ் ராஜ், ஊரை விட்டுத்தான் ஓடிப் போகிறார்கள் என்று கருதி, விஷ்ணுவை அடித்து உதைக்கிறார். ஒரு கட்டத்தில் தனது துப்பாக்கியை எடுத்து அவனை சுட்டு வீழ்த்துகிறார். குண்டடிபட்ட விஷ்ணு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்புகிறார். பிரகாஷ் ராஜை பழிவாங்க துடிக்கிறார்.இதற்கு டாப்சியை கடத்தி வைத்துக் கொண்டு பிரகாஷ் ராஜிடம் சில நிபந்தனைகளை விதிக்கிறார். இது எதுவுமே உள்துறை மந்திரியின் கவனத்துக்கு செல்லவிடாமல் பார்த்துக் கொள்கிறார் பிரகாஷ் ராஜ்.இறுதியில், விஷ்ணுவின் மிரட்டலுக்கு பிரகாஷ் ராஜ் பணிந்தாரா? உள்துறை மந்திரிக்கு விஷ்ணுவின் கடத்தல் நாடகம் தெரிய வந்ததா? விஷ்ணு மஞ்சு-டாப்சிக்குள் காதல் உருவானதா? என்பதே மீதிக்கதை.
விஷ்ணு மஞ்சு, அதிரடி நாயகனுக்குண்டான தோற்றம் இல்லாவிட்டாலும் அதிரடியில் கலக்கியிருக்கிறார். காதல் காட்சிகளில் இன்னும் கொஞ்சம் ரொமான்ஸ் கூட்டியிருக்கலாம். டாப்சி ஒரு பொம்மை போல படத்தில் வலம் வந்திருக்கிறார். படத்தில் இவருக்கான வசனங்கள் மிகவும் குறைவு. படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு இருந்தும், இவரால் சரிவர நடிப்பை வெளிப்படுத்த முடியாமல் போனது ஏமாற்றமே.உள்துறை மந்திரியாக வரும் சாயாஜி ஷிண்டேவின் எடுபிடியான பிரம்மானந்தம் வரும் காட்சிகள் கலகலப்பூட்டுகிறது. அதுவும், சாயாஜி ஷிண்டேவின் மனைவியும், பிரம்மானந்தமும் தனிமையில் சந்தித்து காதலை வெளிப்படுத்தும் காட்சிகள் கலகலப்பு.பிரகாஷ் ராஜ், ரவுடி கெட்டப்புக்கு இவரை விட்டால் ஆளே இல்லை என்று சொல்ல வைத்திருக்கிறார். பாசம் காட்டுவதிலும், எதிரிகளை பந்தாடுவதில் ஆக்ரோஷம் காட்டுவதிலும் அசத்துகிறார்.மற்ற படங்களில் இருந்து முக்கியமான காட்சிகளை எடுத்து, புதிதாய் ஒரு படத்தை எடுத்தது போன்ற உணர்வை கொடுத்திருக்கிறார் ஹேமந்த் மதுகர். படத்தில் அடுத்தடுத்து என்னென்ன காட்சிகள் வரும் என்பதை முன்கூட்டியே கணிக்கும் அளவுக்கு காட்சிகளை வைத்தது படத்திற்கு சற்று தொய்வு தான். இருந்தும் சேசிங் காட்சிகள், பாக்சிங், சண்டைக் காட்சிகளை தூக்கலாக வைத்து படத்தை தூக்கி நிறுத்தியிருக்கிறார்.தெலுங்கு படத்தின் டப்பிங் என்பதால் தமிழ் ரசிகர்களால் சிலவற்றை ரசிக்க முடியாவிட்டாலும், தெலுங்கு ரசிகர்கள் கண்டிப்பாக அவற்றை ஏற்றுக் கொள்வார்கள் என்றுதான் நம்பவேண்டும்.மணிசர்மா இசையில் பாடல்களில் இசையே மேலோங்கியிருக்கிறது. பாடல் வரிகளை கேட்க முடியவில்லை. பின்னணி இசை பரவாயில்லை. கோபால் ரெட்டியின் ஒளிப்பதிவு படத்திற்கு பக்கபலமாக அமைந்துள்ளது.
மொத்தத்தில் ‘பொலிடிக்கல் ரவுடி’ அதிரடி…………..
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி