ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்களுக்கு ரஷியா நேரடியாகவும், மறைமுகமாகவும் உதவுவதாக மேற்கத்திய நாடுகள் குற்றம் சாட்டின. இதை ரஷியா மறுத்தாலும், அந்த நாட்டின் மீது அமெரிக்காவும், மேற்கத்திய நாடுகளும் பொருளாதார தடைகளை விதித்தன.இந்நிலையில், உக்ரைனுக்கும், ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே போர் நிறுத்தம் செய்வது தொடர்பாக பெலாரஸ் நாட்டின் தலைநகரான மின்ஸ்க் நகரில் கடந்த செப்டம்பர் மாதம் பேச்சு வார்த்தை நடந்தது. அதில் உடன்பாடு ஏற்பட்டது. இதையடுத்து கிழக்கு உக்ரைனில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் நடந்து வந்த சண்டை முடிவுக்கு வந்தது.இதற்கிடையே ரஷிய படைகள் உக்ரைன் எல்லையில் குவிக்கப்பட்டிருந்தன. அவை போர்ப்பயிற்சியில் ஈடுபட்டு வந்தன. எனவே அந்தப் பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவி வந்தது.இந்த நிலையில், உக்ரைன் எலலையில் இருந்த ரஷிய படைகளை வாபஸ் பெற அதிபர் விளாடிமிர் புதின் முடிவு செய்து, அதற்கான உத்தரவினை பிறப்பித்துள்ளதாக அதிபர் மாளிகை தகவல்கள் கூறுகின்றன.முன்னதாக அதிபர் புதின், தனது ராணுவ மந்திரி செர்கெய் சோய்குவுடன் பேச்சு வார்த்தை நடத்தினார்.
அதைத் தொடர்ந்தே உக்ரைன் எல்லையில் குவிக்கப்பட்டிருந்த 17 ஆயிரத்து 600 வீரர்களை தங்களது நிலையான தளங்களுக்கு திரும்பும்படி புதின் உத்தரவிட்டுள்ளார். இதை அதிபர் மாளிகை செய்தி தொடர்பாளர் திமித்ரி பெஸ்காவ் உறுதி செய்தார்.இத்தாலி நாட்டில் உள்ள மிலன் நகரில் வரும் 16,17 தேதிகளில் நடக்கவுள்ள ஆசிய, ஐரோப்பிய தலைவர்கள் உச்சி மாநாட்டின் இடையே புதினும், உக்ரைன் அதிபர் பெட்ரோ போரோஷெங்கோவும் பேச்சு வார்த்தை நடத்த உள்ளனர். இந்நிலையில், உக்ரைன் எல்லையில் இருந்து படைகளை வாபஸ் பெற புதின் உத்தரவிட்டிருப்பது முக்கியத்துவம் பெற்றிருக்கிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி