செய்திகள்,முதன்மை செய்திகள்,விளையாட்டு உலகின் மதிப்புமிக்க வீரர்களின் பட்டியலில் டோனிக்கு 5வது இடம்!…

உலகின் மதிப்புமிக்க வீரர்களின் பட்டியலில் டோனிக்கு 5வது இடம்!…

உலகின் மதிப்புமிக்க வீரர்களின் பட்டியலில் டோனிக்கு 5வது இடம்!… post thumbnail image
நியூயார்க்:-விளையாட்டு உலகில் வெற்றிகளை குவித்து கொடிகட்டி பறக்கும் வீரர், வீராங்கனைகளின் புகழை தாங்கள் உற்பத்தி செய்யும் பொருட்களின் விற்பனைக்காக நிறுவனங்கள் பயன்படுத்துகின்றன. அதாவது அவர்களுக்கு கோடிக்கணக்கில் பணத்தை கொட்டி கொடுத்து தங்கள் நிறுவனத்தின் விளம்பர மாடலாக தோன்ற வைக்கிறார்கள்.இப்படி விளம்பர ஒப்பந்தத்தின் மூலம் கிடைக்கும் அதிக வருவாயின் அடிப்படையில் வீரர்களின் மதிப்பை ‘போர்ப்ஸ்’ பத்திரிகை வரிசைப்படுத்தி இருக்கிறது. அந்த பத்திரிகை வெளியிட்டுள்ள உலகின் மதிப்பு மிக்க வீரர்களின் 10 பேர் கொண்ட பட்டியலில் அமெரிக்காவின் பிரபல கூடைப்பந்து வீரர் லெப்ரான் ஜேம்ஸ் முதலிடம் வகிக்கிறார்.

29 வயதான ஜேம்ஸ், அமெரிக்காவின் எம்.பி.ஏ. கூடைப்பந்து தொடரில் கிளைவெலான்ட் கவாலியர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். நைக், மெக்டொனால்டு உள்ளிட்ட சில நிறுவனங்களின் புதிய ஒப்பந்தத்தின் மூலம் அவரது வருவாய் தாறுமாறாக எகிறியுள்ளது. 2014–ம் ஆண்டில் அவரது விளம்பர வருவாய் மதிப்பு ரூ.225 கோடியாகும். இந்த பட்டியலில் இந்திய தரப்பில் கிரிக்கெட் அணியின் கேப்டன் டோனி மட்டுமே இடம் பெற்றுள்ளார். 20 ஓவர் உலக கோப்பை, ஒரு நாள் போட்டி உலக கோப்பை, ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை ஆகிய மூன்று கோப்பைகளையும் வென்றுத்தந்த ஒரே கேப்டனான டோனியின் மதிப்பு ரூ.121 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இறுதியில் அவர் பேட் ஸ்பான்சர்ஷிப்புக்காக ஸ்பார்ட்டான் ஸ்போர்ட்ஸ் மற்றும் அமிதி பல்கலைக்கழகத்துடன் செய்துள்ள ஒப்பந்தம் மூலம் மட்டும் ஆண்டுக்கு ரூ.25 கோடி பெறுகிறார். ஆனாலும் ஒட்டுமொத்தத்தில் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது இது ரூ.6 கோடி குறைவு தான்.

7 ஆண்டுகளுக்கு பிறகும் ‘நம்பர் ஒன்’ இடத்தை பறிகொடுத்துள்ள அமெரிக்க கோல்ப் மன்னன் டைகர் வுட்ஸ் 2–வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். அவரது வருவாய் மதிப்பு ரூ.219 கோடியாகும். இந்த ஆண்டில் இரண்டு முறை காயத்தில் சிக்கியது அவருக்கு பின்னடைவாகி போனது.கடந்த இரண்டு ஆண்டுகளாக டென்னிசில் எந்தவித கிராண்ட்ஸ்லாம் பட்டம் வெல்லாவிட்டாலும், சுவிட்சர்லாந்து வீரர் ரோஜர் பெடரருக்கு மவுசு குறையவில்லை. அவர் ரூ.195 கோடியுடன் 3–வது இடமும், அமெரிக்க கோல்ப் வீரர் பில் மைக்ஹெல்சன் ரூ.177 கோடியுடன் 4–வது இடத்திலும் இருக்கிறார்கள்.6 முதல் 10–வது இடங்களை முறையே ஓட்டப்பந்தய வீரர் உசேன் போல்ட் (ஜமைக்கா), கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ (போர்ச்சுகல்), கூடைப்பந்து வீரர் கோப் பிர்யாந்த் (அமெரிக்கா), கால்பந்து வீரர் லயோனல் மெஸ்சி (அர்ஜென்டினா), டென்னிஸ் நட்சத்திரம் ரபெல் நடால் (ஸ்பெயின்) ஆகியோர் பிடித்துள்ளனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி