அதை தொடர்ந்து ஓ.பன்னீர் செல்வம் கிண்டியில் உள்ள கவர்னர் மாளிக்கைக்கு சென்று கவர்னர் ரோசைய்யாவை சந்தித்தார். அப்போது தன்னை சட்டமன்ற அ.தி.மு.க. தலைவராக தேர்ந்து எடுத்தற்கான தீர்மானத்தையும், புதிய அமைச்சரவை பட்டியலையும், ஆட்சி அமைப்பதற்கான கடிதத்தையும் கவர்னரிடம் கொடுத்தார்.இதையடுத்து, ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்களை பதவி ஏற்கும்படி அழைப்பு விடுத்தார். இதற்கான செய்திக்குறிப்பு கவர்னர் மாளிகையில் இருந்து நேற்று வெளியிடப்பட்டது.
ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள் பதவி ஏற்கும் நேரம் உடனடியாக முடிவு செய்யப்படவில்லை.
இன்று மாலை ஓ.பன்னீர் செல்வம் முதல் அமைச்சராக பதவி ஏற்பார் என்று தெரிகிறது. அப்போது 32 அமைச்சர்களும் பதவி ஏற்கிறார்கள்.புதிய முதல் அமைச்சராக பதவி ஏற்க உள்ள ஓ. பன்னீர்செல்வம் (வயது 63). பி.ஏ. படித்துள்ளார்.
தேனி மாவட்டம் பெரியகுளத்தில் 1951–ம் ஆண்டு ஜனவரி 14–ந் தேதி பிறந்தார். இவருக்கு விஜயலட்சுமி என்ற மனைவியும், மகன்கள் ரவீந்திரநாத்குமார், ஜெயபிரதீப், மகள் கவிதா ஆகியோர் உள்ளனர்.
கடந்த 1996–ம் ஆண்டு நடந்த உள்ளாட்சி தேர்தலில் பெரியகுளம் நகர்மன்ற தலைவராக தேர்வு செய்யப்பட்டார். 2001–ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் பெரியகுளம் தொகுதியில் போட்டியிட்டு முதல் முறையாக எம்.எல்.ஏ. ஆனார். அதன்பின்னர் மே 19–ந் தேதி ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவையில் வருவாய்த்துறை அமைச்சராக பதவி ஏற்றார்.முதல்வராக இருந்த ஜெயலலிதா டான்சி நில வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புப்படி பதவியில் இருந்து ராஜினாமா செய்தார். இதையடுத்து 2001–ம் ஆண்டு செப்டம்பர் 21–ந் தேதி முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் பதவி ஏற்றார்.அதனை தொடர்ந்து வழக்கில் வெற்றி பெற்றதையடுத்து மீண்டும் ஜெயலலிதா முதல்வரானார். அப்போது ஓ. பன்னீர்செல்வம் பொதுப்பணித்துறை அமைச்சராக பதவி வகித்தார்.2006–ம் சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. ஆட்சியை இழந்தது. இந்த தேர்தலில் பெரியகுளம் தொகுதியில் இருந்து மீண்டும் ஓ. பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ.வாக தேர்வானார். தமிழக சட்டசபை எதிர்க்கட்சி துணை தலைவராகவும் பதவி வகித்தார்.அ.தி.மு.க. பொருளாளராக இருக்கும் ஓ.பன்னீர் செல்வம் 2011–ம் சட்டமன்ற தேர்தலில் போடி தொகுதியில் எம்.எல்.ஏ.வாக தேர்வு செய்யப்பட்டு நிதி அமைச்சராக பொறுப்பேற்றார். இப்போது 2–வது முறையாக தமிழக முதல்-அமைச்சர் ஆகிறார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி