அரசியல்,செய்திகள்,முதன்மை செய்திகள் சேது சமுத்திர திட்டத்துக்காக ராமர் பாலத்தை இடிக்கும் பேச்சுக்கே இடமில்லை – நிதின் கட்காரி!…

சேது சமுத்திர திட்டத்துக்காக ராமர் பாலத்தை இடிக்கும் பேச்சுக்கே இடமில்லை – நிதின் கட்காரி!…

சேது சமுத்திர திட்டத்துக்காக ராமர் பாலத்தை இடிக்கும் பேச்சுக்கே இடமில்லை – நிதின் கட்காரி!… post thumbnail image
புதுடெல்லி:-இந்தியாவின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள சென்னை, தூத்துக்குடி, விசாகப்பட்டினம், பாரதீப் உள்ளிட்ட துறைமுகங்களுக்கு செல்வதற்காக மேற்கு கடற்பகுதியில் இருந்து வரும் கப்பல்கள், தற்போது மொத்த இலங்கைத்தீவையும் சுற்றி வர வேண்டியுள்ளது. இதனால் அதிக எரிபொருள் செலவும், நேர விரயமும் ஏற்படுகிறது.எனவே இதை தடுப்பதற்காக பாக் நீரிணை பகுதியில் சுமார் 80 கிலோ மீட்டர் தூரத்தில் கடலை ஆழப்படுத்தி பெரிய கப்பல்கள் செல்ல வழி ஏற்படுத்துவதற்கும், இந்த பகுதிகளில் மீன்பிடி மற்றும் வர்த்தக துறைமுகங்களை ஏற்படுத்தவும் சேது சமுத்திர திட்டத்தை மத்திய அரசு தொடங்கியது.

ஆனால் இந்த திட்டத்துக்காக கடலுக்கு அடியில் உள்ள ராமர் பாலத்தை இடிக்கக்கூடாது என ஏராளமான இந்து அமைப்புகள் போராட்டங்கள் நடத்தின. மேலும் இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கும் பதிவு செய்யப்பட்டு உள்ளது.எனினும் மத்தியில் புதிதாக பதவியேற்ற பா.ஜனதா அரசு, ராமர் பாலத்தை இடிக்காமல் மாற்றுப்பாதையில் சேது சமுத்திர திட்டத்தை செயல்படுத்த பரிசீலித்து வருகிறது. இது தொடர்பாக மத்திய கப்பல் மற்றும் நெடுஞ்சாலைத்துறை மந்திரி நிதின் கட்காரி பாராளுமன்றத்தில் அறிக்கையும் தாக்கல் செய்துள்ளார்.இந்த நிலையில் மத்திய அரசு பதவியேற்று 100 நாள் முடிவடைந்ததை தொடர்ந்து மத்திய மந்திரி நிதின் கட்காரி நேற்று டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்து மதத்தின் முக்கியத்துவம் கருதி, போக்குவரத்து மற்றும் கட்டமைப்பு துறைகளில் மாற்று வழிகள் குறித்து ஆலோசிப்பதற்காக நிறுவனம் ஒன்றை மத்திய அரசு அமைத்துள்ளது. அதன்படி நாங்கள் சேது சமுத்திர திட்டத்தை ‘ரைட்ஸ்’ நிறுவனத்திடம் ஒப்படைத்தோம்.இந்த திட்டம் தொடர்பாக அந்த நிறுவனம் அளித்துள்ள மாற்று வழிகள் அனைத்தும் பரிசீலனைக்காக மத்திய மந்திரிசபைக்கு ஒரு மாத காலத்துக்குள் அனுப்பிவைப்போம். சேது சமுத்திர திட்டத்துக்காக ராமர் பாலத்தை இடிக்கும் பேச்சுக்கே இடமில்லை.மேலும் தேசிய நீர்வழிகளை மேம்படுத்துவதற்காக ‘ஜல்மார்க் யோஜனா’ என்ற திட்டத்தை எதிர்காலத்தில் செயல்படுத்த மத்திய அரசு அரசு திட்டமிட்டுள்ளது.இவ்வாறு நிதின் கட்காரி கூறினார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி