செய்திகள்,முதன்மை செய்திகள்,விளையாட்டு வெளிநாட்டு பயணங்களில் மனைவியை அழைத்து செல்ல கிரிக்கெட் வீரர்களுக்கு கட்டுப்பாடு!…

வெளிநாட்டு பயணங்களில் மனைவியை அழைத்து செல்ல கிரிக்கெட் வீரர்களுக்கு கட்டுப்பாடு!…

வெளிநாட்டு பயணங்களில் மனைவியை அழைத்து செல்ல கிரிக்கெட் வீரர்களுக்கு கட்டுப்பாடு!… post thumbnail image
புதுடெல்லி:-இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் 4–வது மற்றும் 5–வது டெஸ்டில் இந்திய அணி துளியும் போராடாமல் இன்னிங்ஸ் தோல்வி அடைந்தது கிரிக்கெட் வாரியத்திற்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இந்திய வீரர்கள் ஆடிய விதத்தை பார்த்து ரசிகர்கள் வெறுத்தே போய் விட்டனர். முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் ஒரு படி மேலே போய், டெஸ்ட் கிரிக்கெட் விளையாட ஆசை இல்லை என்றால், விலகி ஓடுங்கள் என்று வீரர்கள் மீது தாக்குதல் தொடுத்தார். இதன் எதிரொலியாக பயிற்சியாளர் அமைப்பில் சில மாற்றங்களை இந்திய கிரிக்கெட் வாரியம் கொண்டு வந்துள்ளது.

இந்திய அணியின் சரிவுக்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டாலும், வீரர்கள் தங்களுடன் இல்லத்தரசிகள் மற்றும் காதலிகளை அழைத்து சென்றதும் மோசமான ஆட்டத்திற்கு முக்கியமான ஒரு காரணம் என்று இப்போது தகவல் வெளியாகியுள்ளது. பொதுவாக நீண்ட வெளிநாட்டு பயணங்களின் போது வீரர்களுடன் அவர்களின் மனைவியரையும் அழைத்து செல்ல அனுமதிக்கப்படுவது உண்டு.சில வீரர்கள் தங்களின் காதலிகளையும் கூட்டிச் செல்வார்கள். நடப்பு இங்கிலாந்து பயணத்தின் போது கிரிக்கெட் வாரியத்தின் அனுமதியுடன் இந்திய நட்சத்திர வீரர் விராட் கோலி தனது காதலியும், இந்தி நடிகையுமான அனுஷ்கா ஷர்மாவையும் இங்கிலாந்துக்கு வரவழைத்து இருந்தார்.முதல் இரு டெஸ்டுகளின் போது அவர்கள் ஜோடியாக சில இடங்களில் உற்சாகமாக வலம் வந்ததை காண முடிந்தது. ஆனால் எதிர்பாராத விதமாக இந்த தொடரில் துணை கேப்டன் விராட் கோலி 10 இன்னிங்சில் 2 டக்–அவுட் உள்பட வெறும் 134 ரன்கள் மட்டுமே எடுத்து திணறி போனதால், இந்திய அணியின் வலுவான பேட்டிங் அஸ்திவாரமும் ஒரேயடியாக ‘ஆட்டம்’ கண்டு விட்டது.

கோலி, காதலியுடன் ஜாலியாக சுற்றி திரிந்ததால் அவரது கவனம் சிதறி ஆட்டத்திறன் பாதிக்கப்பட்டு விட்டதாக இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு புகார்கள் சென்றுள்ளன. இதே போல் புஜாரா, அஸ்வின், முரளிவிஜய், ஸ்டூவர்ட் பின்னி, கவுதம் கம்பீர் உள்ளிட்டோர் தங்களது மனைவிகளை கிரிக்கெட் வாரியத்தின் ஒப்புதலுடன் அழைத்துச் சென்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் இந்த விவகாரத்தில் இந்திய கிரிக்கெட் வாரியம் புதிய கட்டுப்பாடுகளை கொண்டு வர முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகி ஒருவர் கூறுகையில், இந்த இங்கிலாந்து தொடர் ஒவ்வொருவரையும் விழிப்படைய வைத்துள்ளது. வீரர்கள் கிரிக்கெட்டில் கவனம் செலுத்த விரும்பினால் கூட, அதற்கு அவர்களின் மனைவி மார்கள் இடையூறாக இருந்திருப்பது தெரியவந்துள்ளது. சில வீரர்கள் உடற்பயிற்சி செய்ய ஜிம்முக்கு போகலாம் அல்லது வலை பயிற்சிக்கு செல்லலாம் என்று நினைத்தாலும் இவர்கள் விடுவதில்லை.ஊர் சுற்ற போகலாம் என்று அழைத்துள்ளனர். பிறகு எப்படி கிரிக்கெட்டில் கவனம் செலுத்த முடியும்? எனவே இந்த இங்கிலாந்து தொடர் முடிந்ததும் சில கட்டுப்பாடுகளை கொண்டு வர திட்டமிட்டுள்ளோம்.இதன்படி ஒரு தொடரின் போது வீரர்களுடன் அவர்களின் மனைவிகள் குறிப்பிட்ட நாட்கள் மட்டுமே தங்கியிருக்க அனுமதிப்பது என்று முடிவு செய்துள்ளோம். காதலிகளுக்கும் இந்த நடவடிக்கை பொருந்தும் என்றார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி