இந்த வழக்கில் தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் தொலைத்தொடர்பு துறை மந்திரி ஆ.ராசா. கனிமொழி எம்பி, தயாளு அம்மாள், கலைஞர் டி.வி. இயக்குனர் அமிர்தம் உள்ளிட்ட 10 பேர் மற்றும் சுவான் டெலிகாம் உள்ளிட்ட 9 நிறுவனங்கள் என மொத்தம் 19 பேருக்கு எதிராக 4 ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை கடந்த மே 25–ந் தேதி டெல்லியில் உள்ள சி.பி.ஐ, தனிக்கோர்ட்டில் மத்திய அமலாக்கப்பிரிவினர் தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கில் ஜாமின் கோரி ஆ.ராசா, கனிமொழி எம்.பி., தயாளு அம்மாள் உள்ளிட்ட 19 பேர் தாக்கல் செய்த மனுக்கள் மீதான விசாரணை தனிக்கோர்ட்டில் முடிவடைந்து விட்டது.
ஜாமின் மனுக்கள் மீதான தீர்ப்பு ஆகஸ்டு 6–ந் தேதி வழங்கப்படும் என்று நீதிபதி ஓ.பி.சைனி கடந்த ஜூலை 22–ந் தேதியன்று தெரிவித்து இருந்தார்.
இந்த ஜாமின் மனுக்களின் மீதான உத்தரவு தயாராகாததால், வருகிற 20–ந் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்றும் நீதிபதி ஓ.பி.சைனி கடந்த 6-ம் தேதி அறிவித்திருந்தார்.
இந்நிலையில், தயாளு அம்மாளுக்கு ஜாமின் வழங்கி நீதிபதி ஓ.பி.சைனி இன்று காலை உத்தரவிட்டார். ஆ.ராசா, கனிமொழி மற்றும் சிலரது ஜாமின் மனுக்கள் மீதான தீர்ப்பு பிற்பகலுக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
உணவு இடைவேளைக்கு பின்னர் கோர்ட் கூடியதும், தனது இருக்கையில் அமர்ந்த நீதிபதி, 2ஜி வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள ஆ.ராசா, கனிமொழி, சரத்குமார் உள்ளிட்ட 9 பேருக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட்டார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி