‘சிந்துபைரவி’ படத்தில் வரும் ‘பாடறியேன் படிப்பறியேன்’ மற்றும் ‘நானொரு சிந்து காவடி சிந்து’ பாடல்கள் பட்டிதொட்டி எங்கும் ஒலித்தது. ‘பூவிலங்கு’ படத்தில் ‘ஆத்தாடி பாவாடை காத்தாட’, ராஜபார்வையில் ‘அந்திமழை பொழிகிறது ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது’, ‘மண்வாசனை’யில் ‘பொத்திவச்ச மல்லிகை மொட்டு’, ‘காதல் ஓவியம்’ படத்தில் ‘பூவில் வண்டு கூடும் கண்டு சங்கீத ஜாதிமுல்லை’, ‘கடலோர கவிதைகள்’ படத்தில் ‘அடி ஆத்தாடி, இளமனசொன்று’, ‘போகுதே போகுதே என் பைங்கிளிவானிலே’, முதல் மரியாதை படத்தில் ‘வெட்டிவேறு வாசம்’, ‘பூங்காத்து திரும்புமா’ என ஏராளமான இனிய பாடல்களை இருவரும் தந்தார்கள்.
வைரமுத்து எழுதிய பல பாடல்களை இளையராஜாவே பாடியும் இருந்தார். ‘புன்னகை மன்னன்’ படத்துக்கு பிறகு இருவரும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தார்கள். தற்போது சீனுராமசாமி இயக்கும் ‘இடம் பொருள் ஏவல்’ படத்தில் வைரமுத்து எழுதிய பாடல்களை இளையராஜா பாடுவதாக அப்படத்தின் இயக்குனர் சீனு ராமசாமி அறிவித்து உள்ளார்.
அவர் கூறும்போது, 28 வருடத்துக்கு பிறகு எனது படத்தில் வைரமுத்து எழுதிய பாடலை பாட இளையராஜா ஒப்புக்கொண்டுள்ளார். இப்படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். பாடல் பதிவு விரைவில் நடக்க உள்ளது என்றார். ஆனால் இளையராஜா தரப்பில் கேட்டபோது அவர் பாடுவதாக உறுதிபடுத்தவில்லை.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி