செய்திகள்,விளையாட்டு 71 நாடுகள் பங்கேற்கும் காமன்வெல்த் விளையாட்டு இன்று தொடக்கம்!…

71 நாடுகள் பங்கேற்கும் காமன்வெல்த் விளையாட்டு இன்று தொடக்கம்!…

71 நாடுகள் பங்கேற்கும் காமன்வெல்த் விளையாட்டு இன்று தொடக்கம்!… post thumbnail image
கிளாஸ்கோ:-காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் இன்று கோலாகலமாக தொடங்குகிறது.இங்கிலாந்திடம் அடிமைப்பட்டு கிடந்த தேசங்கள் மற்றும் இங்கிலாந்தின் அதிகாரத்திற்கு கட்டுப்பட்ட நாடுகள் ஒன்றிணைந்து பங்கேற்கும் போட்டித் திருவிழா தான் காமன்வெல்த் விளையாட்டு.

நிறைய நாடுகள் களம் இறங்கி உலகின் கவனத்தை ஈர்ப்பதில் ஒலிம்பிக், ஆசிய விளையாட்டுகளுக்கு அடுத்து மிகப்பெரிய விளையாட்டாக இது கருதப்படுகிறது. இதுவும் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் நடத்தப்படுகிறது. 1930-ம் ஆண்டு தொடங்கிய இந்த போட்டி கடைசியாக 2010-ம் ஆண்டு டெல்லியில் அரங்கேறியது.இந்நிலையில் 20-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஸ்காட்லாந்து நாட்டின் கிளாஸ்கா நகரில் இன்று தொடங்கி ஆகஸ்டு 3ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா, இலங்கை உள்பட 71 நாடுகளை சேர்ந்த 4,500 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள். மொத்தம் 17 வகையான விளையாட்டுகளுக்கு 261 தங்கப்பதக்கங்கள் வழங்கப்படுகிறது.இந்திய தரப்பில் 215 பேர் கொண்ட விளையாட்டு குழுவினர் அனுப்பப்பட்டுள்ளனர். இவர்கள் தடகளம், ஆக்கி, நீச்சல், குத்துச்சண்டை, மல்யுத்தம், பேட்மிண்டன், சைக்கிளிங், ஜிம்னாஸ்டிக்ஸ், ஜூடோ, லான் பவ்ல்ஸ், ஸ்குவாஷ், டேபிள் டென்னிஸ், பளுதூக்குதல், துப்பாக்கி சுடுதல் ஆகிய 14 வகையான விளையாட்டுகளில் கலந்து கொள்கிறார்கள். நெட்பால், ரக்பி செவன்ஸ், டிரையத்லான் ஆகிய பிரிவுகளில் மட்டும் இந்தியா கலந்து கொள்ளவில்லை.

டெல்லி காமன்வெல்த்தில் ஊழல் பிரச்சினை தலைவிரித்தாடிய போதிலும் களத்தில் இந்திய வீரர்களின் செயல்பாடு பிரமிக்க வைத்தது. ஆஸ்திரேலியாவுக்கு அடுத்தபடியாக 39 தங்கம் உள்பட 101 பதக்கங்களை அள்ளி குவித்து வரலாறு படைத்தது. ஒரு காமன்வெல்த் விளையாட்டில் இந்தியா சேகரித்த அதிக பட்ச பதக்கங்கள் இது தான்.ஆனால் அதே போன்று இந்த தடவையும் பதக்கங்களை அள்ளுவது என்பது கடினமான விஷயம். ஏனெனில் இந்தியாவுக்கு சாதகமான சில பிரிவுகள் நீக்கப்பட்டுள்ளன. வில்வித்தை மற்றும் டென்னிஸ் போட்டி இந்த முறை கிடையாது. இவற்றின் மூலம் இந்தியா கடந்த காமன்வெல்த்தில் 12 பதக்கங்களை வென்றிருந்தது. மல்யுத்தம் விளையாட்டில் இந்தியர்கள் முத்திரை பதிக்கக்கூடிய ‘கிரீகோ-ரோமன்’ பிரிவு கழற்றிவிடப்பட்டுள்ளது.இதே போல் 2010-ம் ஆண்டு காமன்வெல்த்தில் துப்பாக்கி சுடுதலில் இந்தியா 30 பதக்கங்களை கைப்பற்றியது. இந்த முறை துப்பாக்கி சுடுதலில் 44-ல் இருந்து 19 பிரிவாக குறைக்கப்பட்டுள்ளது. தவிர பேட்மிண்டன் புயல் சாய்னா நேவால் காயத்தால் விலகி விட்டார். இதனால் இந்த தடவை இந்தியாவின் பதக்க எண்ணிக்கை முன்பு போல் இருக்காது. என்றாலும் பதக்கப்பட்டியலில் குறைந்தது 3-வது இடத்தையாவது பிடித்து விட வேண்டும் என்று இந்தியா இலக்காக கொண்டுள்ளது. ஆஸ்திரேலியா(417 பேர் அணி) அல்லது இங்கிலாந்து (416 பேர் அணி) ஆகிய நாடுகள் முதல் இரு இடங்களை பிடிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இந்திய தரப்பில் மல்யுத்த வீரர்கள் சுஷில்குமார், யோகேஷ்வர்தத், துப்பாக்கி சுடுதலில் ஒலிம்பிக்கில் பதக்கங்கள் வென்ற அபினவ் பிந்த்ரா, விஜய்குமார், ககன்நரங் மற்றும் மனவ்ஜித் சிங் சந்து, ரா சர்னோபாத், ஹீனா சித்து, ஸ்குவாஷ் போட்டியில் தீபிகா பலிக்கல், ஜோஷ்னா சின்னப்பா, சவுரவ் கோஷல், டேபிள் டென்னிசில் சரத் கமல், சவும்யாஜித் கோஷ், பேட்மிண்டனில் பி.வி.சிந்து, காஷ்யப், குத்துச்சண்டையில் விஜேந்தர் சிங், ஷிவ தாபா, மனோஜ்குமார், சரிதாதேவி, தினேஷ் குமார், பளுதூக்குதலில் நடப்பு சாம்பியன் ரவிகுமார், சஞ்சிதா சானு உள்ளிட்டோர் பதக்கங்கள் வெல்ல வாய்ப்புள்ளது.மற்றபடி உலக நட்சத்திரங்கள் என்று பார்த்தால், உலகின் அதிவேக ஓட்டப்பந்தய வீரர் ஜமைக்காவின் உசேன் போல்ட், இங்கிலாந்தின் நீண்டதூர ஓட்டப்பந்தய வீரர் மோ பாரா ஆகியோர் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளனர்.இந்திய நேரப்படி இன்று நள்ளிரவு 12.30 மணிக்கு வண்ணமயமான தொடக்க விழா நடைபெறுகிறது.

இதில் 288 நாட்களில் 1 லட்சத்து 90 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்திற்கு பயணித்த காமன்வெல்த் ஜோதி (குயின் பேட்டன்) இறுதிகட்ட தொடர் ஓட்டமாக தொடக்க விழா நடைபெறும் செல்டிக் பார்க் மைதானத்திற்குள் கொண்டுவரப்படும். இதன் பின்னர் இங்கிலாந்து ராணி எலிசபெத், வாழ்த்துரை செய்தியை வாசித்து போட்டியை அதிகாரப் பூர்வமாக தொடங்கி வைப்பார்.71 நாடுகளின் அணிவகுப்பும் தொடக்க விழாவில் இடம் பெறும். இதில் இந்திய அணிக்கு லண்டன் ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்றவரான துப்பாக்கி சுடுதல் வீரர் விஜய்குமார் தலைமை தாங்கி தேசிய கொடியை ஏந்தி செல்கிறார். தொடக்க நாள் அன்று போட்டி ஏதும் கிடையாது. நாளை முதல் (24-ந் தேதி) போட்டிகள் தொடர்ந்து நடைபெறும்.
போட்டியை டென்ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. தூர்தர்சனிலும் காணலாம்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி