இந்நிலையில் 2-வது நாள் ஆட்டம் நேற்று நடந்தது. மேற்கொண்டு 10 பந்து விளையாடிய இந்திய அணி எஞ்சிய ஒரு விக்கெட்டையும் இழந்தது. முகமது ஷமி 19 ரன்னில், பென் ஸ்டோக்சின் பந்து வீச்சில் கேப்டன் அலஸ்டயர் குக்கிடம் கேட்ச் ஆனார். முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 91.4 ஓவர்களில் 295 ரன்கள் சேர்த்து ஆல்-அவுட் ஆனது. லார்ட்ஸ் மைதானத்தில் டெஸ்டின் முதலாவது இன்னிங்சில் இந்திய அணி எடுத்த அதிகபட்ச ரன் இது தான்.இங்கிலாந்து தரப்பில் ஆண்டர்சன் 4 விக்கெட்டுகளும், ஸ்டூவர்ட் பிராட், பென் ஸ்டோக்ஸ் தலா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர். இங்கிலாந்து கேப்டன் அலஸ்டயர் குக்குக்கு இது 100-வது கேட்ச் ஆகும். இந்த மைல்கல்லை எட்டிய 7-வது இங்கிலாந்து பீல்டர் என்ற சிறப்பும் அவர் வசம் ஒட்டிக்கொண்டது.பின்னர் இங்கிலாந்தின் முதல் இன்னிங்சை கேப்டன் அலஸ்டயர் குக்கும், சாம் ராப்சனும் மிகுந்த எச்சரிக்கையுடன் தொடங்கினர். முதல் 7 ஓவர்களில் அந்த அணி 10 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு பக்கபலமாக இருந்ததால், நமது வேகப்பந்து வீச்சாளர்கள் குறிப்பாக புவனேஷ்வர் குமார் இங்கிலாந்து பேட்ஸ்மேன்களுக்கு குடைச்சல் கொடுத்தார்.
முதல் விக்கெட்டுக்கு 22 ரன்கள் எடுத்த நிலையில் இங்கிலாந்தின் தொடக்க கூட்டணியை புவனேஷ்வர்குமார் தகர்த்தார். அவரது பந்தில் குக் (10 ரன், 29 பந்து), விக்கெட் கீப்பர் டோனியிடம் கேட்ச் ஆனார். குக், தனது கடைசி 26 இன்னிங்சில் ஒரு சதம் கூட அடிக்கவில்லை. பார்ம் இன்றி தவிக்கும் குக், மீண்டும் ஒரு முறை இலகுவாக விக்கெட்டை தாரைவார்த்து விட்டதால், மேலும் விமர்சனத்திற்குள்ளாகி இருக்கிறார்.அடுத்து கேரி பேலன்ஸ் ஆட வந்தார். இதற்கிடையே 8 ரன்னில் இருந்த போது கேட்ச் கண்டத்தில் இருந்து தப்பித்த ராப்சன் 17 ரன்னில் (42 பந்து) சிக்கினர். 3-வது விக்கெட்டுக்கு இறங்கிய இயான் பெல்லும் (16 ரன்) நீடிக்கவில்லை. முதல் 3 விக்கெட்டுகளையும் புவனேஷ்வர்குமாரே கபளீகரம் செய்தார்.இதைத் தொடர்ந்து 4-வது விக்கெட்டுக்கு கேரி பேலன்சும், ஜோ ரூட்டும் ஜோடி சேர்ந்து அணியை சரிவில் இருந்து மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இவர்களின் போராட்டத்திற்கு சுழற்பந்து வீச்சாளர் ஜடேஜா ‘வேட்டு’ வைத்தார்.44 ஓவர்களுக்கு பிறகு சுழற்பந்து வீச்சை கேப்டன் டோனி அறிமுகம் செய்ததற்கு கைமேல் பலன் கிடைத்தது. ஜடேஜாவின் சுழலில் ஜோ ரூட் (13 ரன், 50 பந்து) எல்.பி.டபிள்யூ. ஆனார். இருப்பினும் பேட்டில் உரசி அதன் பிறகு காலுறையில் பட்ட பந்துக்கு நடுவர் புருஸ் ஆக்சன்போர்டு தவறாக விரலை உயர்த்தியது, டி.வி. ரீப்ளேயில் தெரியவந்தது. அந்த அதிருப்தியுடன் ஜோ ரூட் நடையை கட்டினார்.
இதையடுத்து 113 ரன்னுக்குள் 4 விக்கெட்டுகளை பறிகொடுத்ததால் இங்கிலாந்து நெருக்கடிக்குள்ளானது. இந்த சிக்கலான கட்டத்தில் கேரி பேலன்சுடன், மொயீன் அலி கைகோர்த்தார். இருவரும் அவசரமின்றி நிதானமாக விளையாடினார்கள். இதனால் இங்கிலாந்து படிப்படியாக சரிவில் இருந்து மீண்டு வந்தது. அபாரமாக ஆடிய கேரி பேலன்ஸ் சதம் அடித்தார்.இரண்டு மணி நேரத்திற்கு மேலாக தொல்லை தந்த இந்த ஜோடிக்கு கடைசியில் பகுதி நேர பவுலராக பயன்படுத்தப்பட்ட விஜய் முடிவு கட்டினார். அவரது பந்தில் மொயீன் அலி (32 ரன், 106 பந்து) எல்.பி.டபிள்யூ. ஆனார். தொடர்ந்து கேரி பேலன்சும் (110 ரன், 203 பந்து, 15 பவுண்டரி) பெவிலியன் திரும்ப மறுபடியும் இந்தியாவின் கை ஓங்கியது.இரண்டாவது நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 86 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 219 ரன்கள் எடுத்துள்ளது. பிளங்கெட்(4 ரன்), மேத் பிரையர் (2 ரன்) ஆட்டம் இழக்காமல் உள்ளனர். இந்திய தரப்பில் புவனேஷ்வர்குமார் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.இங்கிலாந்து இன்னும் 76 ரன்கள் பின்தங்கி இருக்கிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி