செய்திகள்,திரையுலகம் வேலையில்லா பட்டதாரி (2014) திரை விமர்சனம்…

வேலையில்லா பட்டதாரி (2014) திரை விமர்சனம்…

வேலையில்லா பட்டதாரி (2014) திரை விமர்சனம்… post thumbnail image
என்ஜினியரிங் முடித்துவிட்டு வேலை கிடைக்காமல் தன்னுடைய அப்பாவான சமுத்திரக்கனியிடம் திட்டு வாங்கிக் கொண்டே எப்போதும் சும்மாவே சுற்றித் திரிகிறார் நாயகன் தனுஷ்.அவருக்கும் பக்கத்து வீட்டில் குடியிருக்கும் அமலாபாலுக்கும் காதல் வருகிறது. திடீரென ஒரு நாள் தனுஷின் அம்மா சரண்யா பொன்வண்ணன் மாரடைப்பில் இறந்துவிட, அவரின் உடலுறுப்புக்களைப் பொருத்தி வாழ்க்கை பெறுகிறார் சுரபி. அதனால் தனுஷிற்கு சுரபியின் அப்பா வைத்திருக்கும் கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனியில் இன்ஜினியர் வேலை கிடைக்கிறது.

கம்பெனியில் சேர்ந்து நல்ல பெயரெடுக்கும் தனுஷிடம் அரசாங்க சம்பந்தப்பட்ட புராஜெக்ட் ஒன்றை தனியாகப் பார்த்துக் கொள்ளும் பொறுப்பு ஒப்படைக்கப்படுகிறது. தங்களுக்கு வரவேண்டிய டென்டரை தனுஷ் தட்டிப் பறிப்பதால் அவர்மீது கோபம் கொள்கிறது போட்டி கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனி. தன் அப்பாவிடமிருந்து பொறுப்பை வாங்கி கம்பெனியை நடத்த ஆரம்பித்த முதல் புராஜெக்ட்டிலேயே தோல்வி கிடைப்பதால் தனுஷை பழிவாங்க நினைக்கிறார் போட்டி கம்பெனியின் புது எம்.டி. அமிதேஷ்.இறுதியில் இந்த அரசாங்க டெண்டரை முடித்துக் கொடுத்தாரா? போட்டி கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனியின் புது எம்.டியான அமிதேஷ் தனுஷை பழிவாங்கினாரா? தனுஷ் அமலா பாலை கரம்பிடித்தாரா? என்பதை சுவாரஸ்யமாகவும், விறுவிறுப்பாகவும் கூறியிருப்பதே படத்தின் மீதிக்கதை…படத்தின் முதல் பாதி முழுக்க முழுக்க சுவாரஸ்யமாகவும், விறுவிறுப்பாகவும் செல்கிறது. குறிப்பாக முதல் இரண்டு பாடல்களான ‘வாட் ஏ கருவாடு’, ‘ஊதுங்கடா சங்கு’ பாடல்களுக்கு தியேட்டரில் தனுஷ் ரசிகர்கள் ஆடித் தீர்த்து விடுகின்றனர். ஜாலியாக பயணித்துக் கொண்டிருந்த கதையில் திடீர் திருப்பமாக சரண்யா பொன்வண்ணனின் மரணத்தோடு முடிகிறது ‘இடைவேளை’. வேலையில்லாமல் திரியும் நாயகனுக்கு ஒரு வேலை கிடைத்து அதில் எப்படி தன் சவாலை முடிக்கிறார் என்பதே படத்தின் இரண்டாம்பாதியாக கூறியிருக்கிறார் இயக்குனர் வேல்ராஜ்.

தன் முதல் படத்தில் எப்படியும் தனுஷ் ரசிகர்களைத் திருப்திப்படுத்திவிட வேண்டும் என்பதிலேயே கண்ணும் கருத்துமாக இருந்திருக்கிறார் இயக்குனர். ஒவ்வொரு காட்சியிலும் ரசிகர்களிடமிருந்து விசில் பறக்க வேண்டும் என்பதற்காக தனுஷிற்கான காட்சி, வசனம் என பார்த்துப் பார்த்து செதுக்கியிருக்கிறார்.‘ரகுவரன்’ கதாப்பாத்திரத்தில் வலம் வந்த தனுஷ் உடலமைப்பு, நடனம் மற்றும் அதிரடி சண்டைக்காட்சிகள் என அனைத்திலும் வெளுத்து வாங்கியிருக்கிறார். அமலாபால் தனக்கு கொடுத்த கதாப்பாத்திரத்தை திறம்படச் செய்துள்ளார். சுரபிக்கேற்ற சரியான கதாப்பாத்திரத்திற்கான கதையை இயக்குனர் தவற விட்டிருக்கிறார். தனுஷிற்கு இணையாக நடிப்பை சமுத்திரக்கனி மற்றும் சரண்யா பொன்வண்ணன் ஆகிய இருவரும் கொண்டு செல்கிறார்கள். இரண்டாம் பாதியை திறம்பட கொண்டு செல்வதே விவேக்கின் சின்னச் சின்ன காமெடிகள்தான். பணக்கார வில்லன் கேரக்டரில் அமிதேஷ் மிரட்டுகிறார்.
அருண் பாபுவின் ஒளிப்பதிவு, எம். வி. ராஜேஷ் குமாரின் எடிட்டிங் மற்றும் சண்டைக்காட்சிகள் மைத்திருக்கும் விதம் அற்புதம். மேலும் அனிருத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசையில் கலக்கியுள்ளார்.

ஆக மொத்தத்தில் ‘வேலையில்லா பட்டதாரி’ ரசிகர்களுக்கு தீனி………..

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி