என்னதான் அவமானப்பட்டாலும் இவர் தனது கணித திறமையை மட்டும் குறைத்துக் கொள்வதாயில்லை. நாளுக்கு நாள் இவரது கணித திறமை அதிகரிக்கிறது.
கணிதத்தில் மட்டுமே அதிகம் ஆர்வமுடன் இருப்பதால் இவருக்கு சொந்த ஊரில் ஒரு வேலைகூட கிடைக்கவில்லை. சென்னைக்கு செல்லும் ராமானுஜனுக்கு அங்கும் வேலை கிடைத்தபாடில்லை. இதனால் மீண்டும் சொந்த ஊருக்கே திரும்புகிறார்.வேலை கிடைக்காததால், கணித கண்டுபிடிப்புகளையே செய்து வரும் ராமானுஜத்துக்கு கல்யாணம் முடித்து வைத்தால் சரியாகி விடும் என்று அவரது பெற்றோர் ஜானகி என்ற பெண்ணை மணமுடித்து வைக்கின்றனர். கல்யாணம் முடித்துவைத்தாலும், இருவரையும் ஒன்றுசேர வைக்காமல் பிரித்தே வைக்கிறார் ராமானுஜத்தின் தாய்.
இந்நிலையில், ராமானுஜன் படித்த கல்லூரியில் பணிபுரியும் கணித ஆசிரியரான கிருஷ்ணா ராவ், சென்னையில் வசிக்கும் திவான் பகதூரை, ராமானுஜன் சந்திக்க ஏற்பாடு செய்கிறார். திவான், ராமானுஜனின் கணித குறிப்புகளை பார்த்து வியப்படைகிறார். அவருடைய சிபாரிசின் பேரில் சென்னை போர்ட் டிரஸ்ட்டில் பணியமர்த்தப்படுகிறார்.
அங்கு பணிபுரியும் வெளிநாட்டை சேர்ந்த ஒருவர், இவரது கணித திறமையை பார்த்து, அவருக்காக தனி அறை ஒதுக்கி கணிதத்தை பற்றிய ஆராய்ச்சிகளை மேற்கொள்ள வைக்கிறார். அவருடைய ஆராய்ச்சிகள் இந்தியாவோடு நின்றுவிடக்கூடாது என்று எண்ணும் அவர், ராமானுஜனின் கணித கண்டுபிடிப்புகளை தபால் மூலம் வெளிநாட்டுக்கு அனுப்பி வைக்க ஆலோசனை கூறுகிறார். அதன்படி ராமானுஜனும் தனது கண்டுபிடிப்புகளை வெளிநாட்டுக்கு அனுப்பி வைக்கிறார்.அதைப் பார்த்து வியந்துபோன இங்கிலாந்தின் கேம்பிரிஜ் பல்கலைக் கழகத்தை சேர்ந்த ஹார்டி, அவரை பாராட்டுவதோடு மட்டுமல்லாமல், இங்கிலாந்துக்கு வரவழைத்து அவரது கணித ஆராய்ச்சிக்கு மேலும் வழிவகுத்து தருகிறார்.
இந்நிலையில், ராமானுஜனுக்கு இருக்கும் நோய், நாளடைவில் டிபியாக மாறுகிறது. அதோடு, மனைவியை பிரிந்து தனிமையில் வசிக்கும் இவருக்கு ஆறுதல் கிடைக்காமல் மனஉளைச்சலும் ஏற்படுகிறது. இதனால், அவரது உடல்நிலை மேலும் மோசமடைகிறது.அதன்பின்னர், ராமானுஜனின் உடல் நிலை சரியானாதா? அவரது கணித கண்டுபிடிப்புகள் ஏற்றுக்கொள்ளப்பட்டதா? என்பதே கிளைமாக்ஸ்.ராமானுஜனாக அபினய் வட்டி, தன்னுடைய முதல் படத்திலேயே கனமான கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கிறார். அதையும் சிறப்பாக செய்து அனைவரின் பாராட்டுக்களையும் பெற்றுள்ளார். இவருக்கு இதுதான் முதல் படம் என்று சொல்ல முடியாத அளவுக்கு அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். தனது தாத்தா ஜெமினி கணேசனுக்கு நற்பெயரை பெற்றுக் கொடுத்துள்ளது இவரது நடிப்பு.
இவரது அப்பா, அம்மாவாக நிழல்கள் ரவி, சுஹாசினி. தனது மகனுடன் மருமகள் இணைந்தால் அவனுக்கு ஆயுள் கம்மி என்று ஜோசியத்தை நம்பி அவனுடன் இணையாமல் இருப்பதற்காக தான் ஒரு வில்லி போன்று சித்தரித்துக் கொள்ளும் கதாபாத்திரத்தில் சுஹாசினி மிளிர்கிறார். நீண்ட இடைவெளிக்கு பிறகு படம் முழுக்க வலம்வந்திருக்கும் இவருடைய நடிப்பு அபாராம். நிழல்கள் ரவியும் தன்னுடைய பங்குக்கு அவரது கதாபாத்திரத்தை வலுவேற்றியிருக்கிறார்.ராமானுஜன் மனைவி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பாமா அழகாக இருக்கிறார். நடிப்பிலும் இவரது அழகு பளிச்சிடுகிறது. திவானாக வரும் சரத்பாபு, கணித ஆசிரியராக வரும் மனோபாலா, இங்கிலாந்து கேம்பிரிட்ஜ் பல்கலை கழகத்தில் பணிபுரியும் ஹார்டி கதாபாத்திரத்தில் வரும் கெவின் மெக்கோவன், சேசு ஐயராக வரும் கிட்டு, அப்பாஸ், ஒய்.ஜி.மகேந்திரன், ராதாரவி, மதன்பாப் ஆகியோரது நடிப்பும் மெச்சும்படியாக இருக்கிறது.
கணிதமேதை ஸ்ரீனிவாச ராமானுஜனின் கண்டிபிடிப்புகளை மட்டுமே பற்றி தெரிந்திருந்த நமக்கு, அவரது வாழ்க்கை எப்படி இருந்தது என்பதை 3 மணி நேர படமாக தெளிவாக சொல்லியிருக்கிறார் இயக்குனர் ஞானராஜசேகரன். படத்தில் ராமானுஜனின் வாழ்க்கையில் ஏற்படும் சோகத்தை கண்ணீரும், கம்பலையுமாக சொல்லியிருக்கும் இயக்குனர், நிறைய இடங்களில் இதுமாதிரியான காட்சிகளை குறைத்து, படத்தின் நீளத்தையும் குறைத்திருந்தால் கொஞ்சம் நன்றாக இருந்திருக்கும். இந்த மாதிரி காட்சிகள் தொடர்ந்து வரும்போது அந்த கதாபாத்திரத்தோடு நம்மால் ஒன்ற முடியாமல் போகிறது. படத்தில் பிரிட்டிஷாரையே தமிழ் பேச வைத்திருக்கும் இவரது முயற்சி பாராட்டுக்குரியது.
கண்டிப்பாக ஒவ்வொரு மாணவ, மாணவியர் மட்டுமின்றி அவரது பெற்றோர்களும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம் இது. இப்படம் உங்கள் வாழ்க்கையிலும் ஒரு பாடமாக அமையும் என்பது மட்டும் உண்மை.ரமேஷ் விநாயகத்தின் இசையில் பாடல்கள் பரவாயில்லை ரகம். பின்னணி இசை கதையோடு ஒன்ற உதவியிருக்கிறது. சன்னி ஜோசப்பின் ஒளிப்பதிவு ராமானுஜனின் காலகட்டதோடு பயணிக்கிறது. படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது இவரது ஒளிப்பதிவு.
மொத்தத்தில் ‘ராமானுஜன்’ ஒரு தமிழனின் வெற்றி சரித்திரம்……….
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி