செய்திகள்,திரையுலகம் என் காதலுக்கு நானே வில்லன் (2014) திரை விமர்சனம்…

என் காதலுக்கு நானே வில்லன் (2014) திரை விமர்சனம்…

என் காதலுக்கு நானே வில்லன் (2014) திரை விமர்சனம்… post thumbnail image
சிறுவயதிலேயே தாய்-தந்தையை இழந்து அனாதை ஆஸ்ரமத்தில் வாழ்ந்து வருகிறார் நாயகன் ரோஹித். இவருக்கு சிறுவயதிலிருந்தே கூட்டுக் குடும்பத்துடன் இணைந்து வாழவேண்டும் என்ற ஆசை. ஆனால், அது நிறைவேறாத ஆசையாகவே இருந்து வருகிறது. இந்நிலையில் வளர்ந்து பெரியவனாகி, தனியார் தொலைபேசி கம்பெனியில் வேலை பார்த்து வருகிறான்.

கூட்டுக் குடும்பத்தில் ஒரு பெண்ணைப் பார்த்து திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் புரோக்கர் மூலமாக பெண் பார்க்கிறான். ஆனால், இவன் நினைக்கிற மாதிரி யாரும் இவருக்கு பெண் கொடுக்க முன்வருவதில்லை. இந்நிலையில்தான், டாக்டருக்கு படிக்கும் நாயகி நிஷா அகர்வாலை ஒருநாள் சந்திக்கிறான். பார்த்தவுடனேயே அவள்மீது இவருக்கு ஈர்ப்பு வந்துவிடுகிறது.அவள் ஒரு கூட்டுக் குடும்பத்தை சேர்ந்தவள் என்றால் அவளையே காதலித்து திருமணம் செய்துகொள்ள நினைக்கிறான். நண்பன் மூலமாக அவள் பெரிய கூட்டுக் குடும்பத்தை சேர்ந்தவள் என்பதை அறிந்ததும் அவள் பின்னாலேயே சுற்றுகிறான். இதற்காக வெளிநாடு செல்லும் வாய்ப்பையும் தட்டிக் கழிக்கிறார். ஆனால், நிஷா அகர்வாலோ அவனது காதலை ஏற்றுக் கொள்ளாமலேயே இருந்து வருகிறார்.

தனது தம்பி குடும்பத்துடன் ஒரே வீட்டில் வசித்து வரும் நிஷா அகர்வாலின் தந்தை பிரகாஷ் ராஜ் அவள்மீது மிகுந்த பாசம் வைத்திருக்கிறார். அவளது அக்காவான ஜெயசுதா, கணவரை பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார். தனது அக்கா சொந்தம், பந்தம் இல்லாத ஒருத்தரை கல்யாணம் செய்துகொண்டதால்தான் அவள் தனிமையில் விடப்பட்டாள் என்று எண்ணும் பிரகாஷ் ராஜ் தனது மகளை சொந்த, பந்தங்களுடன் வாழும் ஒருத்தனுக்குத்தான் திருமணம் செய்துகொடுப்பேன் என்ற லட்சியத்துடன் இருந்து வருகிறார். இதற்கு தனிமையில் இருக்கும் தனது அக்காவின் பையனாக இருந்தாலும் திருமணம் செய்துகொடுக்க மாட்டேன் என்று விடாபிடியாக இருக்கிறார்.

மறுமுனையில், தன்னை சுற்றிவரும் ரோஹித்தை தவிர்க்க முயற்சி செய்கிறார் நிஷா அகர்வால். அதற்கு ரோஹித், தன்னுடன் ஒருமுறை படத்துக்கு வந்தால் உன்னை விட்டு விலகிவிடுவேன் என்று கூறுகிறார். அதன்படி, நிஷா அகர்வாலும் அவனுடன் படத்துக்கு போகிறார். அங்கு ரவுடி ஒருவன் நிஷா அகர்வாலிடம் அத்துமீற அவனை அடித்து துவம்சம் செய்கிறார் ரோஹித்.இந்த பிரச்சினை போலீஸ் ஸ்டேஷன் வரை செல்ல, அங்கு நிஷா அகர்வாலுக்கு யாரும் இல்லை, நான்தான் எல்லாம் என்று பொய் சொல்லி அவளை அழைத்து வருகிறார் ரோஹித். அப்போதிலிருந்து ரோஹித் மீது நிஷா அகர்வாலுக்கு காதல் வந்துவிடுகிறது. இருவரும் காதலிக்க ஆரம்பிக்கிறார்கள். இவர்களுடைய காதல் ஒருநாள் பிரகாஷ் ராஜுக்கு தெரிய வருகிறது. ரோஹித் ஒரு அனாதை என்பது தெரிந்ததும் தனது மகளை கண்டிக்கிறார். படிப்பை நிறுத்திவிட்டு தனது வீட்டுக்கு அழைத்து செல்கிறார்.

ரோஹித்தையும் கூப்பிட்டு கண்டிக்கிறார். அப்போது, நிஷாவை திருமணம் செய்துகொண்டால் அவளை அனாதையாகத்தான் நீ அழைத்துச் செல்லவேண்டும். நீ நினைக்கிற மாதிரி எங்கள் குடும்பம் உன் பின்னால் வராது, உன்னைப் போல் அவளும் அனாதையாகத்தான் வாழவேண்டும் என்று கூறுகிறார்.கூட்டுக் குடும்பத்துடன் வாழவேண்டும் என்ற ஆசையில் தான், காதலித்த நிஷா அகர்வாலை கரம்பிடிக்க அவளுடைய அப்பா கூறிய நிபந்தனைகளுக்கு ரோஹித் என்ன முடிவெடுத்தார்? நிஷா அகர்வாலை கரம்பிடித்தாரா? இல்லையா? என்பதே மீதிக்கதை.ரோஹித் அழகாக இருக்கிறார். ரொமான்ஸ் காட்சிகளில் அழகாக நடித்திருக்கிறார். காதலை பறிகொடுத்த நிலையில் இவரது முகத்தில் தெரியும் சோகம் நம்மையும் அழ வைக்கிறது. சண்டைக் காட்சியிலும் ஆக்ரோஷம் காட்டியிருக்கிறார். டான்ஸ் ஆடுவதில் மட்டும்தான் கொஞ்சம் தடுமாறியிருக்கிறார்.

காஜல் அகர்வாலின் தங்கை நிஷா அகர்வால்தான் ஹீரோயின். தோற்றத்தில் தனது அக்கா காஜலையே நினைவுபடுத்துகிறார். அக்காவின் பாதிப்பு இவருடைய நடிப்பிலும் தெரிகிறது. ரொமான்ஸ் காட்சிகளிலும், ஆக்ரோஷமாக பேசும் காட்சிகளிலும் நடிக்க கொஞ்சம் திணறியிருக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும்.பிரகாஷ் ராஜ், பாசமுள்ள அப்பாவாக நடிப்பில் அழுத்தம் பதிக்கிறார். அவரது தங்கையாக வரும் ஜெயசுதா சில காட்சிகளே வந்தாலும் மனதில் நிற்கிறார். லண்டன் சம்பந்தியாக வரும் சாயாஜி ஷிண்டே வரும் காட்சிகள் கலகலப்பு. ரோஹித்தின் நண்பர்களாக வருபவர்களும் கலகலப்பை ஏற்படுத்தியிருக்கிறார்கள்.

தெலுங்கில் வெளியான ‘சோலோ’ படமே தமிழில் ‘என் காதலுக்கு நானே வில்லன்’ என்ற பெயரில் டப் செய்து வெளியிட்டுள்ளனர். முதல் பாதியை கலகலப்பாக கொண்டு சென்ற இயக்குனர் பரசுராம், பிற்பாதியில் கொஞ்சம் போரடிக்க வைத்திருக்கிறார். தெலுங்கு ரசிகர்களை கவர்ந்த அளவுக்கு தமிழ் ரசிகர்களை கவருமா? என்பது சந்தேகமே. அந்தளவுக்கு சுவாரஸ்யமான காட்சிகள் மிகமிக குறைவே.மணி சர்மா இசையில் பாடல்கள் பரவாயில்லை. பின்னணி இசையில் பட்டையை கிளப்பியிருக்கிறார். ஷிவேந்திரன் ஒளிப்பதிவில் இரவு-பகல் காட்சிகளை துல்லியமாக படமாக்கியிருக்கிறார். பாடல் காட்சிகளிலும் இவரது ஒளிப்பதிவு பளிச்சிடுகிறது.

மொத்தத்தில் ‘என் காதலுக்கு நானே வில்லன்’ அன்பு………

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி