இந்நிலையில், அந்த ஊர் மக்கள் குலதெய்வமாக வழிபடும் சாமி சிலையை திருட்டு கும்பல் ஒன்று களவாட வருகிறது. அவர்கள் அந்த சிலையை திருடிவிட்டு செல்லும்வேளையில் ஊர்மக்கள் அவர்களை சுற்றி வளைக்கின்றனர். அப்போது, வானத்தில் இருந்து ஒரு எரிகல் பூமியில் விழுந்து இவர்கள் குலதெய்வமாக வழிபடும் சாமி சிலை இருந்த இடத்தில் வந்து உட்காருகிறது.அதைப் பார்த்ததும் கொள்ளைக் கும்பல் தலைதெறிக்க ஓடிவிடுகிறது. நம்முடைய குலதெய்வம்தான் வானத்தில் இருந்து வந்து அந்த இடத்தில் கல்லாக உட்கார்ந்திருக்கிறது என்று எண்ணி அன்றுமுதல் அந்த கல்லை தெய்வமாக வணங்கி வருகின்றனர். அன்றை தேதியிலிருந்து அந்த ஊரில் நோய், நொடி எல்லாம் பறந்து போகிறது.
இதற்கிடையில், எரிகல் விழுந்ததை அறிந்த வெள்ளைக்காரர் மறுபடியும் முண்டாசுப்பட்டிக்கு வருகிறார். அவரை அந்த ஊர்மக்கள் மறுபடியும் போட்டோ எடுக்கத்தான் வந்திருக்கிறார் என்று நினைத்து அவரை அடித்து விரட்டுகிறார்கள். அவர்களிடமிருந்து தப்பித்துச் செல்லும் வெள்ளைக்காரர், போகும்போது அந்த எரிகல்லின் ஒரு சிறுதுகளை எடுத்துப் போகிறார்.அதைக் கொண்டுபோய் ஆராய்ச்சி செய்கிறார். அவருடைய ஆராய்ச்சியில் அந்த கல்லில் ஒருவிதமான அமிலம் இருப்பதை அறிகிறார். அந்த கல் விலைமதிக்க முடியாதது என கண்டறிகிறார்.இதன்பிறகு 1983 காலகட்டத்திற்கு கதை நகர்கிறது.
போட்டோக் கடை வைத்திருக்கும் நாயகன் விஷ்ணுவுக்கு ஒருநாள் பள்ளிக்கூடத்தில் குரூப் போட்டோ எடுக்கவேண்டும் என்ற ஆர்டர் வருகிறது. தனது நண்பன் காளியுடன் அங்கு போகும் விஷ்ணு, 12ம் வகுப்பு படிக்கும் நாயகி நந்திதாவை பார்க்கிறான்.
சிறுவயது முதலே போட்டோ என்றால் அலர்ஜியாக இருக்கும் நந்திதா குரூப் போட்டோவுக்கு வராமல் வகுப்பறையிலேயே தனியாக இருக்கிறாள். அவளிடம் சென்று விசாரிக்கும் விஷ்ணுவிடம் சாக்கு போக்கு சொல்லி போட்டோவுக்கு போஸ் கொடுக்காமல் தப்பிக்கிறாள் நாயகி.போட்டோ எடுத்து முடித்து மறுநாள் பிரிண்ட் போட்டு பள்ளிக்கூடத்துக்கு எடுத்து வரும் விஷ்ணு, அங்கு நாயகி நந்திதா இல்லாததை காண்கிறான். அவளுக்கு திருமணம் ஆகப்போகிறது. அதனால்தான் அவள் பள்ளிக்கு வரவில்லை என தோழிகள் சொல்வதை கேட்கும் விஷ்ணு அவளை பிரிந்த வேதனையில் துடிக்கிறான்.
இந்நிலையில், முண்டாசுப்பட்டி கிராமத்தில் இருந்து வரும் பெரியவர் ஒருவர், தங்கள் ஊர் தலைவர் இறக்கும் தருவாயில் இருப்பதால் அவரை போட்டோ எடுக்க வரும்படி விஷ்ணுவுடன் கேட்கிறார். எவ்வளவு பணம் வேண்டுமானாலும் கொடுக்கிறோம் என்று ஆசை காட்டுகிறார்.பணத்திற்கு ஆசைப்பட்டு விஷ்ணுவும் அதற்கு ஒப்புக்கொண்டு தன் நண்பன் காளியுடன் முண்டாசுப்பட்டி கிராமத்துக்கு வருகிறார். அங்கு நாயகி நந்திதாவை பார்க்கும் விஷ்ணு, அவள்தான் இறக்கப் போகும் ஊர் தலைவரின் பேத்தி என்பதையும் அறிகிறான்.ஊர் தலைவர் இறந்தபிறகுதான் அவரை போட்டோ எடுக்கவேண்டும் என்று சொல்லுகிறார்கள் ஊர் மக்கள். இதனால், அந்த ஊரிலேயே விஷ்ணுவும், காளியும் தங்குகின்றனர். இதற்கிடையில், விஷ்ணு தனது காதலை நந்திதாவிடம் சொல்கிறார். ஆனால் நந்திதாவே அதை ஏற்க மறுக்கிறாள். இருந்தும் அவளை ஒருதலையாக காதலித்து வருகிறார் விஷ்ணு.
ஒருநாள் நந்திதாவின் தாத்தா இறந்து போய்விடுகிறார். அவரை போட்டோ எடுத்துவிட்டு ஊருக்கு போகும் விஷ்ணு, அந்த போட்டோவை பிரிண்ட் போடுகிறார். ஆனால், அந்த போட்டோவில் நந்திதாவின் தாத்தா முகம் விழவில்லை.
என்ன செய்வதென்று முழித்துக் கொண்டிருக்கும் விஷ்ணுவுக்கு, தன்னுடைய போட்டோ கடைக்கு அடிக்கடி வந்துபோகும் முனீஸ்காந்த் நினைவு வருகிறது. அச்சு அசல் அந்த ஊர் தலைவர் போன்ற தோற்றத்தில் இருக்கும் முனீஸ்காந்திடம் படத்தில் நடிக்க ஆள் தேவை என ஆசை வார்த்தை கூறி, அவனை போட்டோ எடுத்து நந்திதாவின் வீட்டாரிடம் கொண்டுபோய் கொடுக்கிறார்.அதைப் பார்த்ததும் சந்தோஷமடையும் நந்திதாவின் வீட்டார், சாப்பிட்டு விட்டு போகும்படி கூறுகின்றனர். அப்போது, அங்கு வரும் முனீஸ்காந்தை பார்த்ததும் விஷ்ணுவும், காளியும் அதிர்ச்சியாகிறார்கள். அவர்தான் இறந்துபோன ஊர் தலைவரின் தம்பி மகன் என்பது அவர்களுக்கு தெரிய வருகிறது.இதன்பின்னர், அவர்கள் இருவரும் முனீஸ்காந்திடம் மாட்டிக் கொண்டார்களா? அல்லது தப்பித்தார்களா? என்பதே மீதிக்கதை.
படத்திற்கு படம் வித்தியாசமான கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடித்து வரும் விஷ்ணு, இப்படத்திலும் வித்தியாசமான கதாபாத்திரத்தை தேர்வு செய்து சிறப்பாக நடித்திருக்கிறார். 80களில் உள்ள கெட்டப்புக்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். இவருடைய பழைய படங்களின் பாதிப்பு இப்படத்திலும் தெரிகிறது. நகைச்சுவையான காட்சிகளில்கூட சீரியசாக வசனம் பேசியிருக்கிறார். ஒட்டுமொத்தமாக பார்த்தால் இவருடைய நடிப்பு ஓ.கே. ரகம்தான்.நாயகி நந்திதா, கிராமத்து பெண் வேடத்தில் பளிச்சிடுகிறார். கண்களாலேயே நடிப்பை வெளிப்படுத்தும் இவருடைய அழகே தனிதான். தனியாக வரும் காட்சிகளில் ரொம்பவும் அழகாக காட்டியிருக்கிறார்கள். கேமிராவுக்கு முகம் காட்டமாட்டேன் என்று பயப்படும் காட்சிகளில் அழகாக நடித்திருக்கிறார்.
குறும்படங்களில் காமெடி வேடத்தில் நடித்துவந்த காளி சமீபகாலமாக வெள்ளித்திரையிலும் காமெடியில் முத்திரை பதித்து வருகிறார். அதேபோல், இந்த படத்திலும் காமெடியில் களைகட்டியிருக்கிறார். விஷ்ணுவுடன் சேர்ந்து இவர் செய்யும் காமெடி கலகலக்க வைக்கிறது. படத்தை முழுவதும் ரசிக்க இவரது காமெடி உதவியிருக்கிறது.முனீஸ்காந்த் கதாபாத்திரத்தில் வரும் ராம்தாஸ் அறிமுகம் ஆவதிலிருந்து, கடைசி வரை படத்தை கலகலப்பாக கொண்டு போகிறார். சினிமா வெறியில் இவர் அடிக்கும் லூட்டி சிரிப்பால் வயிற்றை பதம் பார்க்கிறது. புதுமுகமான இவர் நகைச்சுவையில் ஒரு ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கலாம்.
காமெடி படம் என்பதால் விஷ்ணு-நந்திதா காதல் காட்சிகளை குறைவாகவே வைத்திருக்கிறார் இயக்குனர் ராம்குமார். இடைவேளையின்போதே எப்படித் தப்பிக்கப் போகிறார்கள் என்ற கேள்வியை நமக்குள் ஏற்பட வைத்திருக்கிறார். இறுதிக்கட்டத்தை நெருங்க நெருங்க காமெடி காட்சிகளை அதிகப்படுத்தி படம் முழுக்க நகைச்சுவையாக கொண்டுபோய், ரசிக்க வைத்திருக்கிறார்.பி.வி.குமார் ஒளிப்பதிவில் 40-80 காலகட்டங்களை படமாக்கிய விதம் அருமை. ஒவ்வொரு காட்சியிலும் இவரது கேமரா பளிச்சிடுகிறது. ஷான் ரோல்டன் இசையில் பாடல்கள் அனைத்தும் அசத்தல்.
மொத்தத்தில் ‘முண்டாசுப்பட்டி’ கலகலப்பு……..
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி