இதற்காக சுப்ரீம் கோர்ட்டு ஒரு குழுவை நியமித்து உத்தரவிட்டு இருந்தது. அந்த குழுவினர் இந்த தங்கபுதையலை மதிப்பீடு செய்தனர். இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டு பத்மநாபசாமி கோவில் தங்கபுதையல் பற்றி முழு விவரங்களையும் தெரிந்து கொள்வதற்காக வக்கீல் பாலகிருஷ்ணன் என்பவரை நியமித்தது.இதைத்தொடர்ந்து அவரும் திருவனந்தபுரம் வந்து கடந்த 2 மாதங்களாக பத்மநாபசாமி கோவிலில் ஆய்வு நடத்தினார். திருவிதாங்கோடு மன்னர் குடும்பத்தினரையும் அவர் சந்தித்து கோவிலில் உள்ள பொக்கிஷங்கள் பற்றி விவரம் சேகரித்தார்.இதன் இடிப்படையில் வக்கீல் கோபாலகிருஷ்ணன் சுப்ரீம் கோர்ட்டில் தனது அறிக்கையை தாக்கல் செய்தார். 550 பக்கங்கள் கொண்ட அந்த அறிக்கையில் பல திடுக்கிடும் தகவல்களை அவர் தெரிவித்துள்ளார். பத்மநாபசாமி கோவிலில் உள்ள தங்கபுதையல்கள் கொள்ளையடிக்கப்பட்டு உள்ளதாகவும், தங்கமுலாம் பூசப்பட்ட நகைகளை மாற்றி வைத்து இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தனது ஆய்வின் போது பத்மநாபசாமி கோவிலுக்குள் தங்கமுலாம் பூசும் கருவி ஒன்று மறைத்து வைக்கப்பட்டு இருந்ததை தான் கண்டுபிடித்தாகவும் அவர் தெரிவித்துள்ளார். மன்னர் குடும்பத்தினர் பத்மநாபபுரம் கோவில் சொத்துகளை தங்கள் சொத்துக்களாக கருதி செய்யக்கூடாத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.கோவில் ஊழியர்கள் சிலருடன் சேர்ந்து மன்னர் குடும்பத்தை சேர்ந்தவர்கள் ரகசிய அறைகளில் இருந்த பொக்கிஷங்களை கடத்தி இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டு உள்ளதாகவும் அந்த வக்கீல் குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த கோவிலில் உள்ள இதுவரை திறக்கப்படாத 2 ரகசிய அறைகளை திறந்து சோதனை செய்ய வேண்டும்.மன்னர் குடும்பத்தினர் கோவில் விவரங்களில் இனி தலையிடக்கூடாது. கோவில் நிர்வாகத்தை கவனிக்க புதிய கமிட்டி ஒன்றை நியமிக்க வேண்டும். பத்மநாபசாமி கோவில் விவகாரத்தில் கேரள அரசு மெத்தனப்போக்கை கடைபிடிப்பதால் கோவில் பாதுகாப்பிற்கு மத்திய போலீஸ் படை நியமிக்க வேண்டும்.
தங்கபுதையலை கடத்த முயன்றதை தடுத்த சில ஊழியர்களை கொலை செய்ய முயற்சி நடந்துள்ளது. கோவில் குளத்தில் ஒரு ஆண் பிணம் மர்மமான முறையில் மிதந்து உள்ளது. மேலும் கோவிலில் பணிபுரியும் ஒரு பெண் ஊழியரை கோவிலுக்குள்ளேயே பாலியல் பலாத்காரம் செய்யவும் முயற்சி நடந்துள்ளது என்பது உள்பட பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் அந்த வக்கீலின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த அறிக்கை தொடர்பாக வருகிற 23–ந் தேதி சுப்ரீம் கோர்ட்டு விசாரணை நடைபெற உள்ளது. அப்போது சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவுகளை பிறப்பிக்கும் என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக கேரள தேவசம்போர்டு மந்திரி சிவகுமாரிடம் கேட்ட போது வக்கீல் கோபால கிருஷ்ணனின் அறிக்கையை படித்து பார்த்த பிறகு அதுபற்றி சுப்ரீம் கோர்ட்டில் கேரள அரசு மனு தாக்கல் செய்யும்.இந்த சம்பவத்தில் அரசு சார்பில் தவறு நடந்திருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி