செய்திகள்,முதன்மை செய்திகள்,விளையாட்டு இன்று முதல் ஐ.பி.எல். திருவிழா ஆரம்பம்!…

இன்று முதல் ஐ.பி.எல். திருவிழா ஆரம்பம்!…

இன்று முதல் ஐ.பி.எல். திருவிழா ஆரம்பம்!… post thumbnail image
அபுதாபி:-7-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா அபுதாபியில் இன்று தொடங்குகிறது. இந்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், பெங்களூர் ராயல் சேலஞ்சர், ஐதராபாத் சன் ரைசர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், டெல்லி டேர்டெவில்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் ஆகிய 8 அணிகள் கலந்து கொள்கின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். லீக் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே-ஆப் என்ற அடுத்த சுற்றுக்குள் அடியெடுத்து வைக்கும்.

இன்றைய தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ரோகித் ஷர்மா தலைமையிலான மும்பை இந்தியன்சும், 2012-ம் ஆண்டு சாம்பியன் கவுதம் கம்பீர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்சும் பலப்பரீட்சை நடத்துகின்றன.கடந்த ஆண்டு கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற சச்சின் தெண்டுல்கர், மும்பை இந்தியன்ஸ் அணியின் ‘அடையாளம்’ என்ற சிறப்பு அந்தஸ்துடன் அந்த அணியில் தொடருகிறார். வீரர்களுக்கு பல்வேறு யுக்திகளை கற்று கொடுத்து வரும் அவர், நேற்றைய பயிற்சியின் போது சிறிது நேரம் பேட்டிங் செய்தார்.

கடந்த ஆண்டில் தடுமாறிய கொல்கத்தா அணி மீண்டும் பழைய நிலைக்கு திரும்பும் முனைப்புடன் தயாராகி வருகிறது. பந்து வீச்சு ஆலோசகர் வாசிம் அக்ரம் மறுபடியும் இணைந்திருப்பது கொல்கத்தா அணிக்கு கூடுதல் தெம்பை அளிக்கிறது.இவ்விரு அணிகளும் இதுவரை 12 முறை நேருக்கு நேர் சந்தித்துள்ளன. இதில் 10-ல் மும்பையும், 2-ல் கொல்கத்தாவும் வெற்றி பெற்றுள்ளன. இருப்பினும் தற்போது இவ்விரு அணிகளும் சரிசம பலத்துடன் மல்லுகட்டுவதால் ஆட்டத்தில் பரபரப்புக்கு குறைவிருக்காது.இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை சோனி சிக்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி