முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் முதல்வருக்கு நினைவிடப் பொறுப்பாளர்கள் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்குள்ள தேவர் சிலைக்கு 4.5 கோடி ரூபாய் மதிப்புள்ள 13 கிலோ எடை கொண்ட தங்கக்கவசம் அணிவித்த பின் மாலை அணிவித்து ஜெயலலிதா மரியாதை செலுத்தினார்.
பின்னர் ஜெயலலிதா பேசுகையில், ‘’தேசியத்தையும், தெய்வீகத்தையும் இரு கண்களாக கொண்டு செயல்பட்டவர் முத்துராமலிங்க தேவர். பார்வர்ட் பிளாக் கட்சியின் தலைவராக இருந்தவர். இந்தியாவின் சுதந்திரத்திற்காக பாடுபட்டவர். மக்கள் நலனுக்காகவும், தொழிலாளர்களுக்காகவும் அயராது பாடுபட்டவர். வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம், விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம் என்று முழங்கியவர். அவரது பொன்மொழிகள் இக்காலத்திற் கும் பொருத்தமாக உள்ளது. ஆன்மிகம், தேசியம், பொதுவுடமை, ஏகாதிபத்திய எதிர்ப்பு, காங்கிரஸ் அல்லாத ஆட்சி ஆகியவை இவரது முக்கிய கொள்கையாக இருந்தது. இந்த கொள்கைகளைத் தான் நாங்கள் பின்பற்றி வருகிறோம். உங்கள் ஆதரவுடன் தேவருடைய கொள்கைளை வென்றெடுக்கும் நாள் வெகு தூரத்தில் இல்லை. அதற்கான காலம் கனிந்து விட்டது. அந்த லட்சியத்தை அடைய நீங்கள் துணை நிற்கவேண்டும்,’’ என்றார்.
பின்னர் தேவர் வாழ்ந்த வீட்டையும், தேவரின் வாழ்க்கை வரலாற்று புகைப்பட கண்காட்சியையும் பார்த்தார். முதல்வர் வருகையை முன்னிட்டு பசும்பொன் பகுதியில் பாதுகாப்பு பணியில் 5 ஆயிரம் போலீசார் ஈடுபடுத்தப்பட்டனர். விழாவில் அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன், செல்லூர் ராஜூ மற்றும் அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் பசும்பொன்னில் குவிந்தனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி