செய்திகள்,திரையுலகம் கோலி சோடா திரை விமர்சனம்…

கோலி சோடா திரை விமர்சனம்…

கோலி சோடா திரை விமர்சனம்… post thumbnail image
கோயம்பேடு மார்க்கெட்டில் ஆதரவற்ற நான்கு சிறுவர்களான கிஷோர், பாண்டி, முருகேஷ், ஸ்ரீராம் ஆகியோர் மூட்டை தூக்கி பிழைப்பு நடத்தி வருகிறார்கள். இவர்கள் மார்க்கெட்டில் சிறு வியாபாரம் செய்யும் சுஜாதாவிடம் வேலை செய்து வருகிறார்கள். இவர்களுக்கென்று எந்தவித குறிக்கோளும் இல்லாமல் பள்ளி மாணவிகளை கேலி-கிண்டல் செய்வதும் ஜாலியாக பொழுதை கழிப்பதுமாகவும் இருக்கிறார்கள்.

இந்நிலையில் ஒருநாள் சுஜாதாவின் மகள் சாந்தினியை தெரியாமல் கிண்டல் செய்ய, அதை பார்க்கும் சுஜாதா அவர்களை திட்டி தீர்த்து விடுகிறார். அதற்கு சிறுவர்கள், நாங்கள் அனாதையாக பொறந்தது தப்பா? என்று கேட்க, அதற்கு சுஜாதா நீங்கள் பொறந்தது தப்பில்லை, தனக்கென்று அடையாளம் இல்லாமல் வாழ்வதுதான் தப்பு என்று கூறுகிறார்.
இதனால் நான்கு சிறுவர்களும் நமக்கென்று ஒரு அடையாளம் வேண்டும் என்ற நோக்கத்தில் சுயதொழில் செய்ய முடிவெடுக்கிறார்கள். இவர்களின் ஆர்வத்தை பார்த்து சுஜாதா அதே மார்க்கெட்டில் கந்துவட்டி செய்பவரும் பெரிய தாதாவுமான நாயரிடம் அழைத்துச் சென்று இவர்களுக்கு உதவி செய்யுங்கள் என்று கூறுகிறார். அதற்கு நாயர் அதே மார்க்கெட்டில் உள்ள தனது கடையை எடுத்துக்கொள்ளுங்கள், 6 மாதத்திற்குப் பிறகு வாடகையை பற்றி பேசிக்கொள்ளலாம் என்று கூறுகிறார்.

அதன்படி, நான்கு பேரும் அங்கு ‘ஆச்சி மெஸ்’ என்னும் ஹோட்டலை ஆரம்பிக்கிறார்கள். அது அவர்களுக்கு ஆச்சி மெஸ் பசங்க என்று அடையாளமாக மாறுகிறது. இந்த சூழ்நிலையில் ஒரு நாள் இரவில் நாயரின் மச்சான் கடைக்கு வந்து குடித்தல், மற்றும் பெண்களை அழைத்து வந்து தவறு செய்தல் ஆகிய செயல்களில் ஈடுபடுகிறான். இதைப்பார்க்கும் நான்கு சிறுவர்களும் கோபம் அடைகிறார்கள். இதனால் அவருடன் சண்டை போடுகிறார்கள். இந்த சண்டையில் சிறுவர்கள் அவரை கடுமையாக தாக்கி விடுகிறார்கள்.
இதனை கண்டு கோபப்படும் நாயர், சிறுவர்களை தாக்கி அவர்களை வெவ்வெறு மாநிலங்களுக்கு செல்லும் லாரியில் போட்டு இவர்களை பிரித்து விடுகிறார். சிறுவர்களின் தோழியான சீதா ஒரு லாரி டிரைவரின் மூலம் நான்கு பேரையும் கண்டுபிடித்து சேர்த்து விடுகிறார்.ஒன்று சேர்ந்து மீண்டும் மார்க்கெட்டுக்கு வரும் இவர்கள் தங்களுக்கு அடையாளத்தை கொடுத்த ஆச்சி மெஸ்சை மீட்டார்களா? என்பதே மீதிக்கதை.

கிஷோர், பாண்டி, முருகேஷ், ஸ்ரீராம் ஆகிய நான்கு சிறுவர்களும் மூட்டை தூக்கும் தொழிலாளர்களாக திறமையாக நடித்திருக்கிறார்கள். கதாபாத்திரங்களுடன் ஒன்றியிருக்கும் அவர்கள், நாயரிடம் சண்டை போடும் காட்சியில் நடிப்பில் மிளிர்கிறார்கள்.
சுஜாதாவின் மகளாக வரும் நாயகி சாந்தினி, முதல் படம் என்று தெரியாத அளவிற்கு சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். ஏ.டி.எம்-ஆக வரும் சீதா படத்தின் முக்கிய கதாபாத்திரமாகும். தனது துடிப்பான நடிப்பால் அனைவரையும் கவர்ந்திருக்கிறார். ஆச்சியாக வரும் சுஜாதா, சிறுவர்களுக்கு ஆலோசனை கூறுவது, அவர்களுக்காக துடிப்பது என அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். குறிப்பாக நாயரிடம் அவமானப் பட்டு உருகும் காட்சிகளில் நடிப்பில் முதிர்ச்சி அடைந்தவர் என காட்டுகிறார்.
மார்க்கெட்டில் வண்டி ஓட்டிக்கொண்டும் நான்கு சிறுவர்களுக்கு நண்பனாகவும் வரும் இமான் அண்ணாச்சி படம் முழுக்க நகைச்சுவையோடு கொண்டு சென்றிருக்கிறார். குறிப்பாக போலீஸ் நிலையத்தில் குடித்துவிட்டு வசனம் பேசும் காட்சியில், திரையரங்குகளில் சிரிப்பலையை வரவைக்கிறார். நாயராக நடித்திருக்கும் விஜய்முருகன் படத்தின் முன் பகுதியில் சாதுவாகவும் பின்பகுதியில் வில்லத்தனத்தோடும் மிரட்டுகிறார்.

விஜய் மில்டன் கேமிரா திறனையும், இயக்குனர் திறனையும் எடுத்துக்கொண்டு அதில் வெற்றியையும் பெற்றியிருக்கிறார். இயல்பான கோயம்பேட்டை யதார்த்தமாகவும் கதையை அழுத்தமாகவும் சொல்லியிருப்பது சிறப்பு. காட்சிகளை தொய்வில்லாமல் விறுவிறுப்பாக நகர்த்திருப்பது படத்திற்கு மேலும் பலம். பாண்டிராஜின் வசனங்கள் படத்திற்கு கூடுதல் பலம்.மொத்தத்தில்கோலி சோடாவை கலகலப்பாக பருகலாம்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி