இங்கிலாந்து அரசின் கடுமையான நடவடிக்கைகளை பொபிலி அரசர் ஆதரித்ததால், அவரை மக்கள் இங்கிலாந்து அரசின் கைக்கூலியாகக் கருதினர். நீதிக்கட்சி அரசின் பொருளாதாரக் கொள்கைகளும் மக்களின் கோபத்தை சம்பாதித்தன. ஜமீன்தார்களின் கட்டுப்பாட்டில் இல்லாத நிலங்களில் நில வரியை 12.5% குறைக்க பொபிலி அரசர் மறுத்தது, காங்கிரசு தலைமையில் விவசாயிகள் நடத்திய போராட்டத்தை ஜமீன்தாராகிய அவர் கடுமையாக ஒடுக்கியது போன்ற நிகழ்வுகள் நீதிக்கட்சியின் செல்வாக்கு மேலும் சரியக் காரணமாக அமைந்தது. 1934 சட்டமன்றத் தேர்தலில் நீதிக்கட்சி தோல்வியுற்றாலும் வெற்றி பெற்ற சுயாட்சிக் கட்சி (காங்கிரசின் தேர்தல் பிரிவு) அரசமைக்க மறுத்து விட்டதால், நீதிக்கட்சி சிறுபான்மை அரசமைத்தது.
நீதிக்கட்சி ஆட்சியில் இருந்த இறுதி ஆண்டுகளிலும் மக்களிடையே ஆதரவு தொடர்ந்து சரிந்து கொண்டே இருந்தது. அக்கட்சி அமைச்சர்கள் மாதச் சம்பளமாகப் பெருந்தொகை பெற்று வந்தனர் (அவர்களது மாத சம்பளம் ரூ. 4,333.60; இதோடு ஒப்பிடுகையில் அருகிலிருந்த மத்திய மாகாணங்களின் அமைச்சர்கள் பெற்ற ஊதியம் ரூ. 2,250). இது சென்னை மாகாண பத்திரிக்கைகளால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.
பொதுவாக நீதிக்கட்சிக்கு ஆதரவு அளித்துக் கொண்டிருந்த மெட்ராஸ் மெயில் இதழ் கூட பொபிலி அரசின் ஊழலையும் கையாலாகாத்தனத்தையும் சாடியது.
நீதிக்கட்சி அரசு மீது மக்கள் கொண்டிருந்த அதிருப்தியை ஜமீன் ரயாட் இதழில் வெளியான பின்வரும் கட்டுரையின் மூலம் அறியலாம்:
இந்த மாகாணத்தின் மக்களைப் பிடித்த பிளேக் நோய் போல் நீதிக்கட்சி செயல்படுகிறது; அதன் பால் மக்களின் நெஞ்சங்களில் நிரந்தர வெறுப்பு உருவாகிவிட்டது. சர்வாதிகார நீதிக்கட்சி அரசு எப்போது ஒழியும் காங்கிரசு அரசு எப்போது உருவாகுமென அனைவரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். கிராமங்களில் வாழும் கிழவிகள் கூட பொபிலி அரசரின் ஆட்சி எப்போது முடியும் என்று கேட்கிறார்கள்.
சென்னையின் ஆளுனர் எர்ஸ்கைன் பிரபு, இந்தியாவுக்கான செயலர் செட்லாந்து பிரபுவுக்கு பிப்ரவரி 1937 இல் எழுதிய கடிதத்தில் “கடந்த பதினைந்தாண்டுகளில் நடந்துள்ள அனைத்து தவறுகளுக்கும் மக்கள் பொபிலி அரசே காரணம் என்று கருதுகின்றனர்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
களமிறங்கிய காங்கிரஸ் கட்சி:-
1937 தேர்தலில் புது வேகத்துடன் களமிறங்கிய காங்கிரசிடம் நீதிக்கட்சி படுதோல்வி அடைந்தது. 1937க்குப் பின் சென்னை மாகாண அரசியல் களத்தில் அதன் ஆதிக்கம் குறைந்து போனது.நீதிக்கட்சியின் இறுதி வீழ்ச்சிக்கு ஆய்வாளர்களால் பல்வேறு காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன. அவை கட்சி இங்கிலாந்து அரசின் ஆதரவாளராகச் செயல்பட்டது, கட்சி உறுப்பினர்களின் மேட்டிமைத்தனம், தலித் மற்றும் முஸ்லிம் சமூகங்களின் ஆதரவை இழந்தது மற்றும் சமூக சீர்திருத்தவாதிகள் கட்சியை விட்டு விலகி சுய மரியாதை இயக்கத்தில் சேர்ந்தது. வரலாற்றாளர் பி. ராஜாராமன் “உட்கட்சிப் பூசல்கள், திறமையற்ற ஒருங்கமைப்பு, மக்கள் ஆதரவு பெற்ற தலைவர்கள் இன்மை மற்றும் செயலிழந்த நிலையே” கட்சி அழியக் காரணங்களாக குறிப்பிடுகிறார்.
…..( தொடரும் )…..
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி