ஆட்டோக்களை போலீஸார் தீவிரமாக கண்காணித்து, பேரம் பேசும் ஆட்டோ டிரைவர் மற்றும் புதிய கட்டணம் வசூலிக்காத டிரைவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதற்கு ஆட்டோ டிரைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் கடந்த சில நாள்களாக ஆட்டோ டிரைவர்கள் ஆர்ப்பாட்டம், மறியல், முற்றுகை உள்ளிட்ட போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் மெரினா உழைப்பாளர் சிலை அருகே ஆர்ப்பாட்டம் நடத்த அகில இந்திய ஆட்டோ ஓட்டுநர் முன்னேற்ற கழகத்தைச் சேர்ந்தவர்கள் திங்கள்கிழமை குவிந்தனர். இந்த சங்கத்தினர் குறைந்தபட்ச கட்டணத்தை ரூ. 30 ஆக நிர்ணயிக்க வேண்டும், கூடுதலாக இயக்கப்படும் ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் ரூ.15 நிர்ணயிக்க வேண்டும், எஸ்.எம்.எஸ். புகார்களுக்கு நடவடிக்கை எடுக்கக் கூடாது, ஆட்டோ டிரைவர்களை தரக்குறைவாக நடத்தக் கூடாது ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்த அங்கு கூடியிருந்தனர். ஆனால் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டிருந்ததால், அவர்களை அங்கிருந்து கலைந்துச் செல்லும்படி போலீஸார் எச்சரித்தனர்.
ஆனால், அவர்கள், அங்கு காமராஜர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். மேலும் ஊர்வலமாக போக்குவரத்து ஆணையர் அலுவலகத்தை நோக்கி சென்றனர். இதனால் அங்கு போக்குவரத்து ஸ்தம்பித்தது. இதற்கிடையே சிலர், அங்கு வந்த ஒரு ஆட்டோவையும், வாகனங்களையும் தாக்கிய உடைத்ததாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. இதையடுத்து அவர்களை போலீஸார் எச்சரித்தனர். ஆனால் ஆட்டோ டிரைவர்கள் மறியலை கைவிட மறுத்தனராம். இதைத் தொடர்ந்து போலீஸார் தடியடி நடத்தி அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இதில் ஆட்டோ டிரைவர்கள் சிலர் மெரினா கடற்கரையை நோக்கி சிதறி ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் 3 டிரைவர்களுக்கு காயம் ஏற்பட்டது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி