தமிழகத்தில் வீட்டு வசதி வாரிய மனைகள் ஒதுக்கீடு முறைகேடு தொடர்பாக முதல்வர் கருணாநிதி மீது வழக்குத்தொடர கவர்னரிடம் மனு கொடுத்துள்ளேன். 3 மாதத்தில் அனுமதி கிடைக்கவில்லை என்றால் கவர்னர் மீதே வழக்கு தொடர்வேன் என்று ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சாமி கூறினார்.
திருமண நிகழ்ச்சியில் பேசிய அவர், தமிழகத்தில் 45,000 கோவில்கள் அரசிடம் உள்ளன. அதை எல்லாம் மீட்போம். திருச்செந்தூர் கோவிலையும் அரசு தனது கட்டுப்பாட்டில் எடுத்துள்ளது. இதை எதிர்த்து வழக்கு தொடர்வேன். திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் நகைகள் உள்ள பெட்டக சாவியை அரசிடம் தர வேண்டும் என்ற மதுரை உயர் நீதிமன்றக் கிளையின் தீர்ப்பை எதிர்த்து இந்து தர்ம ஆச்சாரிய சபா அமைப்பிற்காக உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்யவுள்ளேன்.
சிதம்பரம் நடராஜர் கோவில் வழக்கு தீர்ப்பு இந்த மாதம் 17ம் தேதி வருகிறது. இதில் கட்டாயம் ஜெயிப்போம். தமிழகத்தில் 45,000 கோயில்கள் அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது சட்டத்துக்கு புறம்பானது. இது தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் இந்த ஆண்டு இறுதிக்குள் தீர்ப்பு எங்களுக்கு சாதகமாக வரும். அப்போது தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில்களும் அரசின் கட்டுப்பாட்டில் இருந்து வெளிவரும்.
வரும் சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டால் 10 அல்லது 15 தொகுதிகளில் போட்டியிடுவோம். டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் ஸ்பெக்ட்ரம் வழக்கு வரும் 22ம் தேதி விசாரணைக்கு வருகிறது. அப்போது இந்த வழக்கை யார் முன்னின்று நடத்துவது (சி.பி.ஐயா அல்லது சுப்பிரமணிய சுவாமியா) என்பது தெரியவரும்.
ஸ்பெக்ட்ரம் இட ஒதுக்கீட்டில் மறு ஏலம் விடுவது தொடர்பான வழக்கின் தீர்ப்பு மார்ச் 1ம் வெளியாகிறது. ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ஊழல் நடந்திருப்பதை நிரூபிப்பேன்.
தமிழகத்தில் வீட்டு வசதி வாரிய மனைகள் ஒதுக்கீடு முறைகேடு தொடர்பாக வழக்கு தொடர கவர்னருக்கு மனு கொடுத்துள்ளேன். 3 மாதத்தில் அனுமதி கிடைக்கவில்லை என்றால் கவர்னர் மீதே வழக்கு தொடருவேன்.
இஸ்லாமிய வங்கி வரக் கூடாது என நான் போட்ட வழக்கு கேரளத்தில் தோல்வி அடைந்ததாக தவறாக செய்தி பரவியுள்ளது. இந்திய சட்டப்படி இஸ்லாமிய வங்கியை ஏற்படுத்த முடியாது என்ற எனது கோரிக்கையை கேரள உயர் நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது. நாட்டின் சட்டவிதிகளின்படி இஸ்லாமிய வங்கி நடத்த முடியாது என்பதை ரிசர்வ் வங்கி ஏற்றுக் கொண்டதை அடுத்தே வழக்கு தள்ளுபடி ஆனது என்றார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
Comments are closed.