‘மிஸ்’ ஆன ‘மிஸ்’ ஒருத்தியை தேடிக் கண்டுபிடிக்க கிளம்புகிற காதலன் அவளை கண்டுபிடித்தானா என்பதுதான் மெயின், சைடு, மற்றும் சகலமுமான கதை. படத்தின் தலைப்பு குறிக்கிற நேரம், இந்த படத்தின் முக்கியமான நேரம் என்பதால் ‘ஒன்’ மற்றும் ‘தம்’முக்காக வெளியே செல்லும் ரசிகர்கள் படத்தின் மெயின் விஷயத்தையே ‘மிஸ்’ பண்ணக் கூடும் என்பதால் உஷார்!
வீட்டைவிட்டு வெளியேறி காதலன் சரத்துடன் ஓடிப்போக நினைக்கும் மாலினி, சொன்னபடி கிளம்புகிறார். பழனி செல்லும் பஸ்சில் ஏறும் அவர் வழியிலேயே தொலைந்து போக, தேடோ தேடென்று தேடித் திரிகிறார்கள் பெண் வீட்டாரும், காதலன் சரத்தும். கடைசியில் அவள் தனது தோழியின் வீட்டுக்கு போக நேரிடுகிறது. அந்த நேரத்தில் அங்கு நடக்கும் ஒரு சம்பவம்தான் க்ளைமாக்ஸ். காதலி கிடைத்தாளா என்பது இருக்கட்டும்… அந்த சேசிங் ராஜேஷ்குமாரின் நூறு நாவல்களுக்கு சமம்.
படத்தின் முதல் அட்ராக்ஷனே திகில் கிளப்பும் அந்த லொகேஷன்கள்தான். ஹீரோவும் நண்பனும் ஒரு டீக்கடையில் விசாரிக்கிறார்கள். என்னவோ நடக்கப் போகிறது என்பது மாதிரியே ‘உம்’ என்றிருக்கிறது அந்த ஏரியா. அந்த ஊர் மட்டும் என்னவாம்? அதே திகில். ஒரு காட்சியில் மலையுச்சியில் இருந்து இறந்து போன சடலத்தை தூக்கி வருகிறார்கள். பயங்கரம்ம்ம்ம்ம்… ஜேலியின் பின்னணி இசையும் இதற்கு துணை போயிருப்பது விசேஷம்.
புதுமுகங்களே நீக்கமற நிறைந்திருக்கிறார்கள் படத்தில். ஹீரோ சரத்துக்கு ஆறடியை தாண்டிய உயரம். அழகான முகம். கொஞ்சம் மெனக்கட்டால் தமிழ்நாட்டில் ஆயிரம் ரசிகர் மன்றங்களுக்கு உத்தரவாதம் இருக்கிறது. நடிப்பு…? போக போக மெருகேற்றி கொள்வார் என்று நம்பலாம்.
கேமிராமேனுக்கு சவால் விடுகிறார் ஹீரோயின் மாலினி. எந்த கோணத்தில் காட்டினாலும் ஐயே…! ஆனால் நிமிடத்திற்கு நிமிடம் என்ன ஆனாரோ என்ற பதற்றத்தை ஏற்படுத்துகிறது இந்த கேரக்டர்.மிகவும் குறிப்பிட்டு சொல்ல வேண்டியவர் அந்த இன்ஸ்பெக்டர். மனுஷன் அபாரமாக நடித்திருக்கிறார். டிபார்ட்மென்ட் ஆட்களின் ராத்து£க்கம் தொலைத்த ஆயாசமும் அப்படியே வெளிப்படுகிறது அவரது கண்களில். தப்பா அடிச்சுட்டோமோ என்கிற குற்றவுணர்ச்சியை மறைத்துக் கொண்டு, உனக்கு என்ன ஹெல்ப் வேணுமோ நான் பண்றேன் என்கிற போது நம்மாளுப்பா இவரு என்கிற அந்நியோன்யம் வருகிறது.
காமெடிக்காக கண்ணாடி கோபி என்ற ஆளை உள்ளே நுழைத்திருக்கிறார்கள். ஸாரி… திணித்திருக்கிறார்கள். ஏமாற்றம்! தோழியாக வரும் தனம், ஆறுதல் தரும் அழகு. இவரது அம்மாதான் சூழ்நிலைக்கு பொருந்தாத மேக்கப்புடன் படுத்தி எடுக்கிறார்.எச்.டி.எஸ்.எல்.ஆர் என்ற புதிய தொழில் நுட்ப கேமிராவை பயன்படுத்தியிருக்கிறார்களாம். பாத்திரம் எதுவாகவும் இருந்துவிட்டு போகட்டும். கொழுக்கட்டை முக்கியம் அண்ணாச்சிங்களா…ஒரு பஸ் ரூட்டுக்குள் முடிந்து போகிற கதை என்பதால் பர்மிட் இல்லாத ஏரியாக்களில் பயணம் செய்ய முடியாதளவுக்கு கையை கட்டி போட்ட மாதிரிதான். எப்படியோ சமாளித்திருக்கிறார் திரைக்கதையாளர் ரதிபாலா. பாராட்டுகள். மீண்டும் ஒரு முறை இசையமைப்பாளர் ஜேவியை பாராட்டலாம் அந்த பாடல்களுக்காகவும்.பயணம் திகில். அதற்காகவே அடிக்கலாம் விசில்
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி