வடகொரியாவின் நண்பனாக காட்டிக் கொள்ளும் சீனா, உண்மையில் அதன் அழிவையே விரும்பியது. தென்கொரியாவின் தலைமையில் ஒருங்கிணைந்த கொரிய தீபகற்பத்தை உருவாக்க சீனா நினைத்தது உள்ளிட்ட பல அதிர்ச்சிகரமான தகவல்கள், “விக்கிலீக்ஸ்’ வெளியிட்ட ஆவணங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
கடந்த 1953ல், இரு கொரிய நாடுகளுக்கு இடையில் போர் நடந்து முடிந்த பின், வடகொரியாவின் தீவிர நண்பனாகவும், பாதுகாவலனாகவும் சீனா தன்னை காட்டி கொண்டது. தற்போது கொரிய தீபகற்பத்தில் ஏற்பட்டுள்ள பதட்டத்தின் போது கூட, அவ்வாறே தன்னை முன்னிறுத்தி வருகிறது. ஆனால், உண்மையில் சீனா தென்கொரியாவை தான் தனது நட்பு நாடாக கருதியிருக்கிறது என்பது “விக்கிலீக்ஸ்’ வெளியிட்ட ஆவணங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
வடகொரியா குறித்து சீன வெளியுறவு அமைச்சர், தூதரக அதிகாரிகளுக்கும், கஜகஸ்தான் மற்றும் அமெரிக்க தூதரக அதிகாரிகளுக்கும் கடந்தாண்டிலும், இந்தாண்டிலும் நடந்த பேச்சுவார்த்தைகளில் குறிப்பிடப்பட்டிருப்பதன் சுருக்கம் இதுதான்: வடகொரியா, அணு ஆயுத தயாரிப்பில் ஈடுபட்டிருப்பது சீனாவுக்கு தலைவலி தான். விரைவில் இரு கொரியாக்களும் அமைதியான முறையில் இணைய வேண்டும். ஆனால், இன்னும் சில காலத்திற்காவது அவை பிரிந்திருக்க தான் வேண்டும். வடகொரியாவின் போக்கு கொஞ்சம் “ஓவர்’ ஆக தான் இருக்கிறது. (இது வடகொரியா, இரண்டாம் முறை அணு ஆயுத சோதனையில் ஈடுபட்ட போது பேசி கொண்டது). வடகொரியாவை, அணு ஆயுத பரவல் தடைக்காக பேச்சுவார்த்தைக்கு வற்புறுத்தி வருகிறோம். இந்த உலகில் வடகொரியாவுடன் கொண்டுள்ள உறவில் முன்னேற்றம் கண்டிருப்பது, அமெரிக்கா மட்டும் தான். நாங்கள் விரும்பாவிட்டாலும், வடகொரியா எங்கள் அண்டை நாடாக இருக்கிறது. இவ்வாறு அவர்கள் பேசி கொண்டனர்.
இந்தாண்டு பிப்ரவரி, ஒரு நாள் மதிய உணவின் போது, தென்கொரிய முன்னாள் வெளியுறவு அமைச்சர் சுன் யுங் வூ மற்றும் தென்கொரியாவுக்கான அமெரிக்க தூதர் காதலீன் ஸ்டீபன்ஸ் இருவரும் பேசிய போது, சுன் குறிப்பிட்டதாக, காதலீன், நியூயார்க்குக்கு அனுப்பிய தகவலில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: சீனாவின் புதிய இளைய தலைமுறை தலைவர்கள், வடகொரியாவை தங்கள் நம்பகமான, பயன்தரக்கூடிய நண்பனாக கருதவில்லை. மேலும் கொரிய தீபகற்பத்தில் ஏற்பட இருக்கும் சண்டையில் “ரிஸ்க்’ எடுக்கவும் தயாராக இல்லை. ஏற்கனவே பொருளாதார ரீதியில் நிலை குலைந்து கொண்டிருக்கும் வடகொரியா, அதன் வயதான அதிபர் கிம் ஜாங் இன் மரணத்துக்குப் பின் மூன்று ஆண்டுகளுக்குள் அரசியல் ரீதியாகவும் குலைந்து விடும். தென்கொரியாவின் தலைமையில், உருவாக இருக்கும் ஒன்றிணைந்த கொரிய தீபகற்பம் மட்டுமே தனக்கு நம்பகமாக இருக்கும் என, சீனா நம்புகிறது. இவ்வாறு காதலீன் செய்தி அனுப்பியுள்ளார்.
அவர் மட்டுமல்ல, பல அமெரிக்க அதிகாரிகளும், “வடகொரியாவில் தற்போதைய நிலை தொடர சீனா விரும்பும். அதனால் அங்கு பீதி ஏற்பட்டு, மக்கள் தென்கொரியாவுக்கு அகதிகளாக வருவர். பின் வடகொரியா கவிழ்ந்த பின் ஒன்றிணைந்த தீபகற்பம் உருவாகும்’ என நம்பிக் கொண்டிருந்தனர் என்பதும் இந்த ரகசிய ஆவணங்கள் மூலம் தெரியவந்துள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி