ஒரு ‘ஆர்ட்’ படத்தை இசைஞானி இளையராஜாவின் இசைத் துணையுடன் கொடுத்திருக்கிறார் மிஷ்கின்.சின்ன வயதில் தாயைப் பிரிந்து பாட்டியுடன் வசிக்கும் ஒரு சிறுவன் தாயைத் தேடிப் புறப்படுகிறான். தாயை அடையாளம் காண ஒரு புகைப்படத்தையும் அவள் இருக்கும் இடத்தின் முகவரியையும் எடுத்துச் செல்லும் அவன், வழியில் மனநிலை பாதிக்கப்பட்ட பாஸ்கரமணியைச் சந்திக்கிறான் (மிஷ்கின்).
இருவரும் ஒருவருக்கொருவர் துணையாக உணர்கிறார்கள். பயணத்தைத் தொடர்கிறார்கள். வழியில் போலீஸ்காரர்கள் தொடங்கி ஜப்பானிய ஸ்டைல் பைக்கர்ஸ் வரை பல மனிதர்களைச் சந்திக்கிறார்கள். வெறுப்பாய் தொடங்கி அன்பில் முடிகிற சந்திப்புகள் அவை. அப்படி ஒரு சந்திப்பில், அவர்களுடன் சேர்ந்து கொள்கிறார் ஒரு செக்ஸ் தொழிலாளி (ஸ்னிக்தா).
சிறுவனின் தாய் இருக்கும் கிராமத்துக்குப் போய் ஆளுக்கொரு பக்கம் வீட்டைத் தேடுகிறார்கள். ஒரு வீட்டில் அந்தப் பெண்ணைப் பார்த்து விடுகிறான் பாஸ்கரமணி. அவளோ ஒரு பெண் குழந்தை, புதிய கணவன், வசதியான வாழ்க்கை என செட்டிலாகி விட்டிருக்கிறாள்.
பாஸ்கரமணி தான் வந்த விஷயத்தை சொன்னதும், அவன் காலில் விழுந்து கதறும் அந்தப் பெண், எக்காரணத்தைக் கொண்டும் தான் இருக்கும் இடத்தை சிறுவனுக்கு சொல்ல வேண்டாம் என்றும், அதற்காக எவ்வளவு பணம் நகையும் தரத் தயாராக இருப்பதாகவும் கெஞ்சுகிறாள்.
அங்கிருந்து வேகமாக வெளியேறும் பாஸ்கரமணி, ‘அம்மா அங்கே இல்லை வேறு ஊரில் இருக்கிறாள் வா…’ என்று கூறி தனது சொந்த ஊருக்கு சிறுவனை கூட்டிப் போகிறான். அங்கு மனநிலை பாதிக்கப்பட்ட தனது தாயை கொடுமையான கோலத்தில் பார்க்கிறான். அவளை முதுகிலேயே சுமந்து கொண்டுபோய் ஒரு ஹோமில் சேர்க்கிறான்.
அப்போது என் அம்மா எங்கே என்று சிறுவன் கேட்க, உன் அம்மா செத்துப் போய் விட்டாள் என்று கூறிவிடுகிறான் பாஸ்கரமணி.சிறுவனும் தாயும் மீண்டும் சந்திருக்கிறார்களா… பாஸ்கரமணி என்னவாகிறான் என்பது மீதியிருக்கும் ஒரு வரி க்ளைமாக்ஸ்.கிகுஜிரோவின் தமிழ்ப் பதிப்பு இது. இல்லை என்கிறார் மிஷ்கின். அது ஒரு பக்கம் இருக்கட்டும்.இந்தப் படம் காப்பியடிக்கப்பட்டது என்பதையெல்லாம் மறந்துவிட்டுப் பார்த்தால், காட்சியமைப்புளில் உள்ள தரம் அபாரமானது.
ஒவ்வொரு மனிதரும் பலா மாதிரி மேலுக்கு முரடாகத் தெரிந்தாலும், உள்ளுக்குள் சுவையான, அன்பு மிக்கவர்களாக இருப்பதை உணர்த்தும் காட்சிகள் நிறைய. குறிப்பாக அந்த ஜப்பானிய சுமோ ஸ்டைல் பைக்கர்ஸ் மற்றும் லாரி டிரைவர் சம்பந்தப்பட்ட காட்சிகள்.ஒரு காட்சியில் மனிதர்கள் ஒரு சிறு பாலத்துக்குக் கீழே படுத்து அயர்ந்து தூங்கிக் கொண்டிருக்க, ஒரு பெரிய மலைப்பாம்பு அவர்களின் தலைமாட்டை, தன் பாட்டுக்குக் கடந்து போவதாகக் காட்டியிருப்பது சுற்றுச் சூழல் ஆர்வலர்களை சிலிர்க்க வைக்கும்!
அதேபோல அந்த பீர் இளைஞர்களுக்கு பாஸ்கர மணி தரும் ‘ட்ரீட்மெண்ட்’, சட்டென்று சிரிக்க வைத்துவிடுகிறது.படத்தின் ஹீரோ சாட்சாத் இளையராஜாதான் என்பதில் மாற்றுக் கருத்தே இருக்காது. அவரது இசையைத் தவிர்த்துவிட்டு இந்தப் படத்தை 10 நிமிடம் கூட முழுசாகப் பார்க்க முடியாது!எங்கே வாத்தியங்கள் பேச வேண்டும், எங்கே மவுனங்கள் பேச வேண்டும் என்பதில் இசைஞானிக்கு உள்ள தெளிவு வேறு எவருக்கும் கிடையாது. காட்சிகள் வெகு சாதாரணமாக தெரியும் இடங்களில், வயலின்களை மெலிதாக அழவிட்டு, நம்மை ஈரப்படுத்துகிறார் இசைஞானி. குறிப்பாக அந்த பள்ளிச் சிறுமி, சைக்கிளில் பறந்து போய் ட்ராக்டர் கொண்டு வரும் காட்சி.
‘ஒண்ணுக்கொன்னு துணையிருக்கு உலகத்திலே… அன்பு மட்டும்தான் அனாதையா’ என்ற பாடல்… விருதுகள், பாராட்டுக்களுக்கு அப்பாற்றபட்ட இசை, மெட்டு! மைனஸ் என்று பார்த்தால் அதுவும் நிறையவே இருக்கிறது. மனநிலை பிறழ்ந்த பாஸ்கரமணிக்கு எல்லாம் நன்றாகத்தான் தெரிகிறது… பேச மட்டும் தெரியாதா? வித்தியாசம் என்பதற்காக இப்படியா.. திணிக்கப்பட்ட முயற்சியாக தெரிகிறது.ஒரு மனநிலை பாதிக்கப்பட்டவனுடன் பள்ளிச் சீருடையில் சிறுவன்… முன்னுக்குப் பின் முரணாகப் பேசுகிறார்கள். ஆனால் போலீசுக்கு சந்தேகமே வரவில்லை!
மற்றபடி படத்தில் இளையராஜாவுக்கு அடுத்து பேசப்படும் வேலைக்குச் சொந்தக்காரர் ஒளிப்பதிவாளர் மகேஷ் முத்துச்சாமி. அழகு… துல்லியம். பொள்ளாச்சி, கோயமுத்தூர் பகுதிகளில் இப்படியெல்லாம் கூட இடங்கள் உள்ளனவா என கேட்க வைக்கிறது அவரது ஒளிப்பதிவு.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி