கோடம்பாக்கத்துல எப்பவும் எதையாவது செய்துகிட்டே இருக்கணும்… ஓய்ஞ்சி போய் படுத்தா மண்ணைப் போட்டு மூடிடுவாங்க, என்றார் இயக்குநர் எஸ்ஏ சந்திரசேகரன்.
விஜய் நடித்த ஏராளமான படங்களுக்கு கலை இயக்குனராக இருந்தவர் எஸ்.ஏ.சி ராம்கி. எஸ்ஏ சந்திரசேகரனிடம் உதவியாளராகப் பணியாற்றியுள்ளார்.
50 படங்களில் பணியாற்றிய பிறகு இவர் முதல் முறையாக இயக்குநராகியிருக்கிறார், நானும் என் காதலும் படம் முலம்.
தனக்கு திரையுலகில் அடையாளம் தந்த எஸ்ஏ சந்திரசேகரனுக்கு நன்றி செலுத்தும் விதத்தில், தனது பெயருக்கு முன்னாள் எஸ்ஏசி என்றே இனிஷியல் போட்டுக் கொண்டுள்ளார் ராம்கி.
இந்த படத்தின் தயாரிப்பாளர் ஜெ.பி., எஸ்.ஏ.சந்திரசேகரனிடம் கார் டிரைவராக இருந்து, பின்னர் அவர் படங்களுக்கு தயாரிப்பு நிர்வாகியாக பிரமோஷன் ஆகி, இப்போது தயாரிப்பாளராகவும் ஆகியுள்ளார்.
தனது உதவியாளர்களாக இருந்து உயர்ந்துள்ள இந்த இருவரையும் கவுரவிக்கும் பொருட்டு ‘நானும் என் காதலும்’ படத்தின் பாடல் வெளியீட்டு விழாவுக்கு சிறப்பு விருந்தினர்களாக வந்திருந்தனர் எஸ்.ஏ.சந்திரசேகரும் அவரது மனைவி ஷோபாவும்.
இசைத் தட்டை வெளியிட்ட பின்னர் எஸ்ஏ சந்திரசேகர் பேசுகையில், “எங்கிட்ட வேலை பார்த்தவங்க இன்னைக்கு பெரிய நிலையில் இருக்காங்க. பெருமையா இருக்கு.
ஷங்கர், பவித்ரன், ஏ.வெங்கடேஷ், ராஜேஷ் எம் என்று சுமார் இருபது பேர் இன்னைக்கு சினிமாவில் முக்கியமான இடத்தில் இருக்காங்க.
எஸ்.ஏ.சி ராம்கி, ஜெ.பி க்கும் அந்த இடம் கிடைக்கணும். பொதுவா எங்கிட்ட யாரு வேலை பார்த்தாலும் இரண்டு மூணு படம் தாண்டுச்சுன்னா போயி எங்காவது படம் பண்ணுன்னு விரட்டி விட்டுருவேன்.
மனுஷன்னா ஓடிக்கிட்டே இருக்கணும். ஓட முடியலைன்னா நடந்துகிட்டாவது இருக்கணும். நடக்கவும் முடியலையா, நிற்கணும். ஆனா உட்கார்ந்துட மட்டும் கூடாது. உட்கார்ந்தா படுக்கணும்னு தோணும். படுத்தா… அவ்வளவுதான். கோடம்பாக்கத்துல மண் தள்ளி மூடிருவாங்க. அதுக்குதான் இங்க காலாட்டிக்கிட்டே தூங்கணும்னு பழமொழியே இருக்கு.
இந்த வயசுலயும் நீங்கதான் டைரக்ட் பண்ணனுமான்னு என் மகன் விஜய் கேட்பார்.
நானும் விஜய்யும் டிஸ்கஸ் பண்ணுவோம். ஏகப்பட்ட விவாதம் நடக்கும். கடைசில நான்தான் இயக்குவேன் என்ற முடிவில் உறுதியா இருப்பேன். காரணம் என்னால சும்மா உட்கார முடியாது. நான் எடுக்கிற படத்தால லாபமோ நஷ்டமோ… அது இரண்டாம் பட்சம்தான். நான் உழைக்கணும். என் பிள்ளை சம்பாதிக்கிற பணம் அவருக்குதான். ஆனா நான் சாப்பிடுற காசு நான் சம்பாசித்தா இருக்கணும்,” என்றார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி