கருப்பசாமி குத்தகைதாரரில் அறிமுகமாவர் மீனாட்சி. ஹோம்லியாக அறிமுகமாகி கவர்ச்சியில் கொடிகட்டியவர். அவரை முற்றிலுமாக மாற்றியிருக்கிறது கரு.பழனியப்பனின் மந்திரப்புன்னகை. இதில் மீனாட்சிதான் நாயகி.
“மந்திரப்புன்னகை எனக்கு ரொம்ப முக்கியமான படம். என்னுடைய சினிமா கேரியரில் பெஸ்ட் படமாக இது இருக்கும். உணர்ச்சிகளைக் காட்டி நடிக்க ஏற்ற வேடம். நந்தினி என்கிற நவநாகரிக பெண்ணாக இதில் நடித்திருக்கிறேன்.”
மீனாட்சி அறிமுகமான கருப்பசாமி குத்தகைதாரரில் அசலான கிராமத்துப் பெண்ணாக நடித்தார். இரண்டாவது படம் ராஜாதிராஜாவிலும் அப்படியே. கிராமத்து பெண்ணாக நடிப்பதற்கும் நகரத்து யுவதியாக நடிப்பதற்கும் என்ன வித்தியாசம்?
“பெரிய வித்தியாசம் இருப்பதா நான் நினைக்கலை. அந்தந்த கேரக்டருக்கு ஏற்றாற்போல் மாறினால் போதும். போடுகிற ட்ரெஸ்ஸிலும், வசன உச்சரிப்பிலும் வித்தியாசம் இருக்கும்.”
மீனாட்சி என்று தமிழ்ப் பெயர் இருந்தாலும் மீனாட்சியின் பூர்வீகம் தமிழ்நாடு அல்ல. தமிழும் தெரியாது. ஆங்கிலத்தில் எழுதி வைத்துதான் வசனங்கள் பேசுகிறார். பல வருடங்களாக ஃபீல்டில் இருக்கும் அவரது தமிழ் இப்போது எப்படியிருக்கிறது?
இப்போதும் தமிழ் அவ்வளவா தெரியாது. ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக படித்து வருகிறேன். யாராவது தமிழில் பேசினால் என்னால் புரிந்து கொள்ள முடியும். ஆனால் பேச வராது. விரைவில் உங்களைப் போல் சரளமாக தமிழில் பேசுவேன் என்று நம்புகிறேன்.
மீனாட்சிக்கு ரோல் மாடல் என்று யாரும் இல்லை. ஒருவரை சொன்னால் இன்னொருவருக்கு வருத்தமாகிவிடும் கழுவுகிற மீனில் நழுவுகிற மீனாக இருக்கிறார். ஆனால் பிடித்த நடிகர்கள் உண்டு.
“ரஜினி சார், கமல் சார் இரண்டு பேருமே எனக்குப் பிடித்தமான நடிகர்கள். கமல் சாரின் மூன்றாம் பிறை எனக்குப் பிடித்தமான படம். அதில் வரும் ஸ்ரீதேவி கதாபாத்திரம் எனது கனவு ரோல் என்று சொல்லலாம்.”
கதாநாயகியாகதான் நடிப்பேன் என்றெல்லாம் மீனாட்சி அடம்பிடிப்பதில்லை. கேரக்டர் நன்றாக இருக்க வேண்டும் என்பதுதான் அவரது ஒரே நிபந்தனை.
“என்னைப் பொறுத்தவரை படத்தில் நான் ஹீரோயினா இல்லை வில்லியா கெஸ்ட் ரோலா என்றெல்லாம் பார்ப்பதில்லை. கேரக்டர் நன்றாக இருக்க வேண்டும். பவர்ஃபுல்லான வேடம் என்றால் வில்லியாக நடிக்கவும் எனக்கு ஓகே தான்.”
மீனாட்சியை தமிழ் சினிமா அவ்வளவாக கண்டு கொள்ளவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். தற்போது வெளியாகியிருக்கும் மந்திரப்புன்னகை தவிர்த்து ஷாமுடன் அகம்புறம் படத்தில் மட்டுமே நடித்து வருகிறார். அந்தப் படமும் ரிலீஸுக்கு தயாராகிவிட்டது. இன்றைய தேதியில் மீனாட்சி கைவசம் வேறு தமிழ்ப் படங்கள் எதுவும் இல்லை. என்றாலும் தமிழ் சினிமா மீது அவருக்கு அபிரிதமான மரியாதை உள்ளது.
“எனக்கு நடிப்பு கற்றுத் தந்தது தமிழ் சினிமா தான். இங்குதான் நான் பங்சுவாலிட்டியையும் கற்றுக் கொண்டேன். இதுவரை நான் நேரம் தவறியதே இல்லை. இதற்கு காரணமும் தமிழ் சினிமாதான். இங்கு மட்டும்தான் நேரத்துக்கு உரிய மரியாதை தருகிறார்கள்.”
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி