நான் பாடிய பாடல்களை ரீமிக்ஸ் செய்கிறேன் என்ற போர்வையில் கேவலப்படுத்தினால், அந்தப் பாவம் அவர்களை சும்மா விடாது என்று ஆவேசமாக கூறியுள்ளார் பழம்பெரும் பாடகரான டி.எம்.செளந்தரராஜன்.
பழம்பெரும் பாடகி பி.சுசீலாவின் அறக்கட்டளை சார்பில் சாதனை படைத்த பாடகர்களுக்கு விருது வழங்கப்பட்டது.
இதில், ஜேசுதாசுக்கு பி.சுசீலா அறக்கட்டளை விருதும், டி.எம்.சவுந்தரராஜன், பி.பி.சீனிவாஸ் ஆகிய இருவருக்கும் வாழ்நாள் சாதனையாளர்களுக்கான விருதுகளும் வழங்கப்பட்டன.
விழாவில் டி.எம்.எஸ்., பி.சுசீலா பாடிய பழைய பாடல்களை இக்காலத்துப் பாடகர்கள் இணைந்து பாடினர். மனோ, ஹரிஹரன், உன்னி மேனன், ஹரீஷ் ராகவேந்திரா உள்ளிட்டோர் இப்பாடல்களைப் பாடினர்.
டி.எம்.எஸ். பாடிய பாடல் வரிகளை சிலர் உச்சரிக்கத் தடுமாறினர். இதைப் பார்த்து கோபமடைந்தார் டிஎம்எஸ்.
மைக்கைப் பிடித்த அவர், அந்தக்காலத்தில் நாங்கள் உணர்ச்சிகளை கொட்டி பாடினோம். அதே பாடல்களை உணர்ச்சியே இல்லாமல் திரும்பப்பாடி, சிலர் கேவலப்படுத்துகிறார்கள். மனசுக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கிறது. இந்த பாவம், சும்மா விடாது என்றார். இதனால் விழாவில் சலசலப்பு ஏற்பட்டது.
இதையடுத்து பி.சுசீலா குறுக்கிட்டு, உங்க அளவு திறமையான பாடகர்கள் யாரும் கிடையாது. மிக உயரத்தில் இருக்கிறீர்கள். இப்போது உள்ள பாடகர்கள் எல்லோருமே உங்களை வணங்குகிறார்கள் என்று டிஎம்எஸ்ஸை சமாதானப்படுத்தினார்.
இதனால் சற்று சாந்தமடைந்த டிஎம்எஸ், புதுப் பாடகர்களிலும் திறமையானவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள், அவர்களை வாழ்த்துகிறேன் என்று பாராட்டி பிரச்சினைக்கு முடிவு கட்டினார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி