தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என்று சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட படங்களுக்கு நடன இயக்குநராகப் பணிபுரிந்திருக்கும் டான்ஸ்மாஸ்டர் சிவசங்கருக்கு ‘மகதீரா’ என்ற தெலுங்கு படத்திற்காக (22.10.2010) தேசிய விருது கிடைத்தது.
சிரஞ்சீவியின் மகன் ராம்சரண் தேஜாவும் காஜல் அகர்வாலும் ஜோடி சேர்ந்து ‘‘தீர… தீர… தீர… மனசாக லேதுரா…’’ என்ற பாட்டிற்கு ஆடும் பரபரப்பான, விறுவிறுப்பான வித்தியாசமான, டான்ஸ் கம்போசிங்குக்காகதான் இந்த விருது. ஒரு கலைஞன் விருது வாங்குகிற போது எத்தனை சந்தோஷத்திலிருக்க வேண்டும்? ஆனால் சிவசங்கர் விஷயத்தில் நடந்ததே வேறு. ரொம்பவே நொந்து போய் பேசினார் அவர் விருது வாங்க போன கதையை!
இந்த நடனத்தை மிகவும் கஷ்டப்பட்டு கம்போஸ் செய்தேன். அதற்கான பலன் கிடைத்து விட்டது. இதே பாட்டிற்காக ஏற்கனவே ஆந்திர மாநில நந்தி விருதும் எனக்குக் கிடைத்தது. அப்புறம் இந்த தேசிய விருதும் எனக்கு தரப்போவதாக அறிவித்தார்கள்.
டெல்லியில் விருதுக்குரியவர்களை அசோகா ஓட்டலில் தங்க வைத்தார்கள். ஒவ்வொருவரும் அவரவர்கள் குடும்பத்துடன் வந்திருந்தார்கள். என்னுடன் என் வயதான தாய் (வயது 88), மனைவி, மகன்களும் வந்திருந்தார்கள். அவர்களை என் செலவில் ரூம் எடுத்து தங்க வைத்திருந்தேன். விருது விழாவான 22.10.2010 அன்று மாலை சரியாக 4.45க்கு நாங்கள் அங்கு இருக்க வேண்டும். விழாவிற்கு எங்களை அழைத்துச் செல்லும் வாகனங்கள் முறைப்படி எங்களை அழைத்துச் செல்ல சரியான நேரத்திற்கு வரவில்லை. திடீரென்று மாலை 4.30க்கு இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. உடனே ஒரு டாக்சியை வைத்துக்கொண்டு விழா நடக்கும் அரங்கத்திற்குச் சென்றேன். அங்கு நாங்கள் செல்லும்போது சரியாக 5 மணி ஆகியிருந்தது. நேரம் தவறி வந்ததால் உள்ளே அனுப்ப மறுத்தார்கள்.
எனக்குப் பிறகு ‘பசங்க’ படத்தின் தயாரிப்பாளரும் டைரக்டருமான சசிகுமார், சமுத்திரக்கனி, விருது வாங்க வேண்டிய இரு சிறுவர்கள் மற்றும் தெலுங்கு, மலையாளப் படத்தைச் சேர்ந்தவர்கள் மழையில் நனைந்து கொண்டே எப்படியோ தங்கியிருந்த ஹோட்டலில் இருந்து வந்து சேர்ந்தார்கள். ஆனால் அங்கு வந்தவர்கள் யாரையும் உள்ளே அனுமதிக்காமல் அடம்பிடித்தார்கள் செக்யூரிடி அதிகாரிகள். இந்தியிலும், ஆங்கிலத்திலும் பேசி விருது வாங்க வேண்டிய எங்களை மட்டுமாவது அனுமதியுங்கள் என்று சண்டை போட்டோம். அதற்கும் அவர்கள் மசியவில்லை. சமுத்திரக்கனியும், சசிகுமாரும், என் மகன்களும் பயங்கரமாக சத்தம் போட்டார்கள். ஒரு வழியாக என்னையும், ‘பசங்க’ படத்தின் சிறுவர்களையும், சசிகுமாரையும் மட்டும் உள்ளே விட்டார்கள். சமுத்திரக்கனி உட்பட என்னோடு வந்த என் குடும்பத்தார்களும் கேட்டுக்கு வெளியே நின்றார்கள்.
நான் தேசிய விருது வாங்குவதை என் குடும்பத்தார்கள், குறிப்பாக என்னைப் பெற்றத் தாய் பார்த்து ரசிக்க வேண்டும் என்று மிகவும் ஆசையோடு என்னோடு வந்தார்கள். ஆனால் எதையும் பார்க்க முடியாமல் வேதனையோடு வெளியே நிற்கும்படி ஆனது.
விருதினை வழங்க ஜனாதிபதி மாலை 5.30 மணிக்குத்தான் வந்தார்கள். ஆனால் உள்ளே இடம் எல்லாம் நிரம்பிவிட்டது என்றும், சரியான நேரத்திற்கு நீங்கள் வரவில்லை என்றும் கூறி செக்யூரிட்டிகளும், விழாக்குழுவினர்களும் எங்களை மிகவும் வேதனைப் படுத்திவிட்டார்கள். உள்ளே வரமுடியாதவர்கள் அந்த நிகழ்ச்சியை பார்த்து ரசிப்பதற்கு வெளியே பெரிய டி.வி. ஸ்கீரினை வைத்து அதன் மூலம் ரசிப்பதற்காகவாவது ஏற்பாடுகள் செய்திருக்கலாம். அதையும் அவர்கள் செய்யவில்லை. எனக்கு தேசிய விருது கிடைத்த செய்தி எந்த தமிழ்ப் பத்திரிகைகளிலும் வெளிவரவேயில்லை. இதுவும் எனக்கு ஒரு பக்கம் வேதனைதான். வருடந்தோறும் தேசிய விருதுகள் வாங்கச் செல்லும் நம்ம சவுத் இந்தியன் ஆர்ட்டிஸ்டுகளை அங்குள்ள விருது விழாக் குழுவினர்கள் சரிவர உபசரித்து முறைப்படி அழைத்துச் செல்வது கிடையாது என்று அங்குள்ள நம்ம தமிழ்நாட்டைச் சேர்ந்த சிலர் என்னிடம் கூறினார்கள்.
எனக்கும், சசிகுமார், சமுத்திரக்கனி போன்றவர்களுக்கும் ஏற்பட்ட இந்த அவமதிப்பு போல் இனி எந்த ஒரு சவுத் இந்தியன் ஆர்ட்டிஸ்டுக்கும் தேசிய விருது வாங்கச் செல்லும்போது ஏற்படக் கூடாது என்றார் சிவசங்கர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி