சூப்பர் ஸ்டார் ரஜினியின் எந்திரன் படத்தை திரையிட்ட திரையரங்குகள் கேளிக்கை வரியாக மட்டும் ரூ 3.38 கோடிக்கு மேல் செலுத்தியுள்ளதாக கர்நாடக மாநில அரசு தெரிவித்துள்ளது.
கர்நாடக மாநில சரித்திரித்தில் இதுவரை எந்தப் படம் மூலமும் கிடைக்காத கேளிக்கை வரி இது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன் ரஜினியின் சிவாஜிக்கு மட்டுமே ரூ 1.3 கோடி வரியாகக் கிடைத்தது.
எந்திரன் படம் பெங்களூர் நகரில் மட்டும் 30 திரையரங்குகளில் திரையிடப்பட்டது. புறநகர்களிலும் சேர்த்து 58 திரையரங்குகள். இவை தவிர மைசூர், மாண்டியா உள்ளிட்ட பகுதிகளிலும் இந்தப் படம் வெளியானது. அனைத்து இடங்களிலும் பெரும் வரவேற்பு கிடைத்தது.
பெங்களூரில் எந்திரனுக்கு கட்டணமாக ரூ 750 முதல் 1500 வரை கவுன்டர்களிலேயே விற்கப்பட்டது.
இதுகுறித்து கர்நாடக மாநில வணிக வரித்துறை இணை ஆணையர் ஜைபுன்னிசா கூறுகையில், “டிக்கெட் கட்டணத்தை அதிகமாக வைத்து விற்றதால் வணிக வரித்துறை பெங்களூர் தியேட்டர்களை சோதனையிட்டதாகக் கூறப்பட்டதில் உண்மையில்லை. வேறு வழக்கமான சோதனைகளுக்காகவே சில திரையரங்குகளுக்கு அதிகாரிகள் சென்றார்கள்.
எந்திரன் படத்தைப் பொறுத்தவரை, கர்நாடக அரசுக்கு நல்ல வருவாயைத் தந்துள்ளது. இந்தப் படம் ரிலீஸான முதல்வாரம் மட்டும் பெங்களூர் திரையரங்குகள் மூலம் ரூ 1.67 கோடி கேளிக்கை வரி கிடைத்தது. இரண்டாவது வாரம் இது ரூ 81 லட்சம். உண்மையில் தியேட்டர்களில் அதிக கட்டணம் வைத்து விற்பதை அரசே அனுமதித்தது. இதன் மூலம் ஒரு டிக்கெட்டுக்கு ரூ 118 வரை கேளிக்கை வரியாகக் கிடைத்துள்ளது.
கர்நாடகத்தின் பிற பகுதிகளில் இந்தப் படம் மூலம் ரூ 90 லட்சம் வரை வரை அரசுக்கு வருவாய் கிடைத்துள்ளது. இது இதுவரை வேறு எந்தப் படம் மூலமும் கிடைக்காதது”, என்றார்.
இதற்கு முன் ரஜினியின் சிவாஜி படம் மூலம் ரூ 1.3 கோடி வரை அரசுக்கு கேளிக்கை வரியாகக் கிடைத்ததாக ஜைபுன்னிசா கூறினார்.
எந்திரன் பட கர்நாடக வெளியீட்டு உரிமை ரூ 9.5 கோடிக்கு விற்கப்பட்டது. இந்தத் தொகையை முதல் வாரத்திலேயே அந்த விநியோகஸ்தர் எடுத்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி