அரசியல் தீர்வை ஏற்படுத்துவதற்கு தமிழர்களிடையே ஒற்றுமை இல்லை என்று காரணம் சொல்வதை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நிறுத்த வேண்டுமென தமிழக முதலமைச்சர் மு.கருணாநிதி தெரிவித்துள்ளார்
தமிழ் மக்கள் அமைதியான வாழ்க்கைச் சூழலை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உடனடியாக மேற்கொள்ள வேண்டும் எனவும் தமிழக முதல்வர் கருணாநிதி நேற்று திங்கட்கிழமை கூறியுள்ளார்.
‘ஜனாதிபதி மஹிந்தவுக்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் இருப்பதால் இலங்கைத் தமிழர்களின் கௌரவமான வாழ்க்கைக்கான அரசியலமைப்புத் திருத்தங்களை அவர் இலகுவாக நிறைவேற்ற முடியும்" எனவும் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
உள்நாட்டில் இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியேற்றுவது இலங்கை அரசாங்கத்தின் முன்னுள்ள முதல் பணியாகும் எனக்கூறியுள்ள கருணாநிதி, தமிழர்கள் பெரும்பான்மையாகவுள்ள பகுதிகளில் அதிகாரங்களை பரவலாக்குவதே அரசியல் தீர்வை ஏற்படுத்தும் எனவும் கூறியுள்ளார்.
இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்கு இதுவே பொருத்தமான தருணம் எனவும் இச்சந்தர்ப்பத்தை தவறவிடக்கூடாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி