‘ஆடி போயி ஆவணி வந்தா சீனு டாப்பா வந்திருவான்’ என்று இயக்குனர் தாமிரா சொல்ல, மேடையில் இருந்த சரண்யா முகத்தில் அப்படியொரு வெட்கம்! சீனு ராமசாமி இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘தென்மேற்கு பருவக்காற்று’ படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில்தான் இப்படியொரு சுவாரஸ்யமான காட்சி. இந்த விழாவில் அதிகம் பாராட்டப்பட்டது கவிப்பேரரசு வைரமுத்துவும், அம்மாவாக நடித்திருக்கும் சரண்யாவும்தான்.
“நான் இந்த படத்துல நல்லா நடிச்சிருக்கறதா டைரக்டர் சீனு ராமசாமியிடம் கவிப்பேரரசு வைரமுத்து சொன்னாராம். நான் அவரை பல மேடைகளில் பார்த்திருக்கேன். ஆனால் பேசியதில்லை. அவருடைய இந்த பாராட்டு உண்மைதானா? இல்ல, சீனுவே சொல்றாரான்னு கூட நெனச்சேன். ஆனால் இந்த விழாவில் என்னை பார்த்த கவிஞர், நீங்க நல்லா நடிச்சிருக்கீங்கன்னு சொன்னதும் என்னால என்னையே நம்ப முடியல. என் வாழ்நாளில் எனக்கு கிடைச்ச பெரிய பாக்யமாக இந்த பாராட்டை கருதுகிறேன்” என்றார் சரண்யா.
ஒரு ஏழை தாய் தன் மகனை எப்படியெல்லாம் கஷ்டப்பட்டு உருவாக்குகிறாள் என்பதை விளக்கும் ஒரு பாடலை இப்படத்திற்காக எழுதியிருக்கிறார் வைரமுத்து. வார்த்தைகள் ஒவ்வொன்றிலும் அத்தனை வலியும் ஈரமும் கசிந்தது! இப் பாடலை குறிப்பிட்டுதான் அத்தனை பேரும் பேசினார்கள். “இந்த படத்தை பார்த்துட்டு வெளியே வர்ற அத்தனை பேரும் தன்னுடைய அம்மாவை நினைத்துக் கொள்ளாமல் இருக்கவே முடியாது” என்றார் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கம்பம் செல்வேந்திரன். இவர் திமுகவின் நட்சத்திர பேச்சாளர்.
“எல்லாரும் அவங்கவங்க அம்மாவை நினைச்சுக்கிற அளவுக்கு உருவாக்கப்பட்ட ஒரு கேரக்டர்ல நான் நடிச்சிருக்கேன்னா அது எவ்வளவு பெரிய விஷயம்! இந்த கேரக்டரை எனக்கு கொடுத்த சீனு ராமசாமிக்கு நான் நன்றிக்கடன் பட்டிருக்கேன்” என்றார் சரண்யா.
படத்தில் இவர் ஏர் ஓட்டுகிற மாதிரி காட்சிகள் அமைத்திருக்கிறார் சீனு ராமசாமி. நகரத்திலேயே வளர்ந்த சரண்யாவுக்கு சினிமாதான் கிராமங்களையே காட்டியிருக்கிறது. அவரை போய் ஏர் ஓட்ட சொன்னால்? “நான் ஏர் ஓட்டும்போது அது மாட்டு காலில் ஏறிடும். மிரண்டு போகிற மாடு என் காலை மிதிச்சிரும். அப்படியெல்லாம் கஷ்டப்பட்டுதான் இந்த கேரக்டர்ல நடிச்சிருக்கேன்” என்று சரண்யா சொன்னபோது ஒன்று புரிந்தது.
எல்லா அம்மாக்களும் தியாக திருவுருவங்கள்தான்! அது சினிமா அம்மாவாக இருந்தாலும் கூட!
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி