பெங்களூரில் கடந்த 2005ம் ஆண்டு பிபிஓ அலுவலக ஊழியை கற்பழித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் டாக்சி டிரைவர் குற்றவாளி என பெங்களூர் விரைவு நீதி்மன்றம் தீர்ப்பளித்துள்ளது.
பெங்களூரைச் சேர்ந்த பிரதீபா ஸ்ரீகாந்தமூர்த்தி (28) என்ற பிபிஓ ஊழியை கடந்த 2005ம் ஆண்டு டிசம்பர் 13ம் தேதி தனது அலுவலக கார் டிரைவரால் கடத்திச் செல்லப்பட்டு கற்பழித்து கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார். நாட்டையே இந்த சம்பவம் பெரும் பரபரப்பில் ஆழ்த்தியது.
தனது திருமணத்திற்குப் பின்னர், எச்பி குளோபல்சாப்ட் நிறுவனத்தில் நிறுவனத்தில் சேர்ந்தார் பிரதீபா. டிசம்பர் 13ம் தேதி இரவு நைட்ஷிப்ட் பணி முடிந்து அவர் வீட்டுக்கு தனது நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த வாடகை வாகனத்தில் கிளம்பினார். ஆனால் வீடு போய்ச் சேரவில்லை.
அடுத்த நாள் அவரது உடல் புறநகர்ப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது. கற்பழித்து அவர் கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.
இதையடுத்து நடந்த விசாரணையில் பிரதீபா வேலை பார்த்து வந்த பிபிஓநிறுவனம் ஏற்பாடு செய்திருந்த வாடகை வாகனத்தை ஓட்டிய டிரைவர் சிவக்குமார்தான் பிரதீபாவை கற்பழித்துக் கொலை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து சிவக்குமார் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கின் விசாரணையின்போது பிரதீபாவின் தாயார் கெளரம்மா தொடர்ந்து கோர்ட்டுக்கு வந்து விசாரணையைக் கவலையுடன் கவனித்து வந்தார். தனியாக இந்த சட்டப் போராட்டத்தில் பங்கெடுத்து வந்தார்.
இந்த வழக்கு நான்கு ஆண்டுகளாக இழுத்தடித்துக் கொண்டிருந்தது.இதுவரை 11 விரைவு நீதி்மன்றங்களுக்கு இது மாற்றப்பட்டு விட்டது. இதனால் பிரதீபாவின் தாயார் கெளரம்மா, நீதி கிடைக்குமா என்ற பெரும் கவலையில் மூழ்கியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்து வந்த நீதிபதிகளும் அடிக்கடி இடமாற்றம் செய்யப்பட்டனர். மொத்தம் 71 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் இன்று இந்த வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டது. சிவக்குமார் குற்றவாளி என நீதிபதி அறிவித்தார். தண்டனை விவரம் இன்னும் அறிவிக்கப்படவில்லை.
பிரதீபாவின் கொலையால் நாடு முழுவதும் பிபிஓ நிறுவனங்களில் பணியாற்றும் பெண் ஊழியர்களின் பாதுகாப்பு குறித்த பெரும் விழிப்புணர்வு ஏற்பட்டது. இரவுப் பயணங்களுக்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.வாடகை வாகனங்களை அமர்த்துவதில் பல புதிய விதிமுறைகள் கொண்டு வரப்பட்டன.
நாஸ்காமும் கூட இதுதொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்து செயல்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி