திரையுலகம் மன்மதன் அம்பு சில சுவாரசியங்கள்…

மன்மதன் அம்பு சில சுவாரசியங்கள்…

ManmadhanAmbu01

தனது ஒவ்வொரு படத்திலும் புதுப்புது கெட்டப், செட்டப் என்று ஏதாவது புதுமைகளை புகுத்துவது கமலின் வழக்கம். அந்தப் பாணியை ‘மன்மதன் அம்பு’ படத்திலும் வெளிப்படுத்தியுள்ளார் கமல். இதில் கே.எஸ்.ரவிக்குமார் வேறு இணைந்துள்ளார். கேட்கவா வேண்டும் சுவாரசியத்திற்கு.

உதய நிதியின் ரெட் ஜெயன்ட் மூவீஸ் இந்தப் படத்தை தயாரிக்கிறது. மன்மதன் அம்புவின் கதை, திரைக்கதையை, காதல், காமெடி கலந்து வடிவமைத்துள்ளார் கமல். டைமிங் காமெடியில் கலக்கும் கிரேசி மோகன், நகைச்சுவை ததும்பும் வசனங்களால் மன்மதன் அம்புக்கு கூர் திட்டியுள்ளார்.

விரைவு, துள்ளியம், அம்சமான இயக்கம் என படத்தை சொன்ன தேதிக்குள் எடுத்துக் கொடுத்துவிட்டார் ரவிக்குமார். இதுதான் அவரின் சிறப்பு. இவரின் இந்தத் திறமைக்காகதான் ‘தசாவதாரம்’ படத்தையே இவரை இயக்கச் சொன்னார் கமல்.

தசாவதாரத்துடன் ஒப்பிடுகையில் மன்மதன் அம்பு எம்மாத்திரம் அவருக்கு என்று சொல்லிவிடலாம். ஆனால் மன்மதன் அம்பிலும் சில சிறப்பம்சங்கள் உள்ளனவாம். ரவிக்குமாரின் இயக்கத்திற்கு சரியான வேலைவாங்கும் வகையில்தான் மன்மதன் அம்பு அமைந்தது என்கிறது படக்குழு.

கமல் இதில் 30 வயது இளைஞனாய் காதல் அம்பு விடுகிறார். (நிஜத்திலேயே கமல் அப்படித்தானே இருக்கிறார்…) மாதவன், திரிஷா, சங்கீதா ஆகியோர்களின் கூட்டணி ரசிகர்களுக்கு சிற(ரி)ப்புக் கொண்டாட்டமாக அமையும்.

இந்தக் கூட்டணியில் சமீபத்தில் இணைந்திருப்பவர் ஓவியா (களவாணி பட நாயகி). படத்தின் கடைசி காட்சியையே ஓவியா தோன்றுவது போலத்தான் எடுத்து முடித்துள்ளாராம் கே.எஸ்.ரவிக்குமார்
மேலும், படத்தில் ஒரு முக்கியமான கெஸ்ட் ரோலில் நடித்து அந்த ரோலையே பெஸ்ட் ரோலாக்கியுள்ளாராம் சூர்யா. அவர், ‘ஏழாம் அறிவு’ படத்தில் ஸ்ருதி கமலஹாசனுடன் நடித்துவரும் வேளையில், இரண்டு நாள் கால்ஷீட்டில் இந்த ரோலை முடித்துக் கொடுத்திருக்கிறார்.

இவர்கள் போக இந்தப் படத்தில் இன்னும் சில முன்னணி நடிகர்கள் கெஸ்ட்ரோலில் நடித்திருப்பதாகவும் கூறப்படுகிறது. அதுபற்றி இப்போது சஸ்பென்ஸாக வைத்துள்ளனர். திரிஷாவின் அம்மா உமாவும்கூட இதில் நடித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

திரிஷா இதில் சொந்தக் குரலில் பேசி நடித்துள்ளார். அவரது இனிமையான குரலில் மயங்கியவர்கள் கமல், மாதவன், ரவிக்குமார் உட்பட படக்குழுவினர் அனைவரும், படம் வெளிவந்தப் பிறகு தமிழ் ரசிகர்களும். இனிமையான குரலுடனும், கமலிடம் கற்றுக்கொண்ட தமிழ் உச்சரிப்புடனும் கலக்கியிருக்கிறார் திரிஷா. அவரின் கூடுதல் கவர்ச்சியும் இதில் அசத்தல்தான்.
மன்மதன் அம்பு படத்தின் முதல் இரு கட்டப் படப்பிடிப்புகள் ஐரோப்பாவிலும், சொகுசு கப்பலிலும் நடந்தன. இறுதிகட்ட படப்பிடிப்பு கொடைக்கானலில் நடந்து முடிந்துள்ளது. ஐரோப்பா, கொடைக்கானல் என குளுகுளு பிரதேசங்களின் அழகினை கண்ணுக்கு விருந்தாக்கவிருக்கிறார் ஒளிபதிவாளர் மனுஷ் நந்தன். கச்சிதமான படத்தொகுப்பு-ஷான் முகமது. இசை-தேவி ஸ்ரீபிரசாத். தசாவதாரத்தில் பின்னணி இசையில் கலக்கிய இவர். இதில் மொத்த இசையிலும் தனிராஜ்யம் அமைத்துள்ளார்.படப்பிடிப்பு அனைத்தும் முடிந்துவிட்ட நிலையில் விரைவில் போஸ்ட் புரெடக்‌ஷன் வேலைகள் தொடங்க உள்ளன.

குறிப்பிட்டத் தேதிக்குள் விரைவாகவும், சிறப்பாகவும் படப்பிடிப்பு முடிந்துவிட்டதை கொண்டாடும் விதத்தில் சைதாப்பேட்டையில் உள்ள தனது வீட்டில் நிறைவு விழா விருந்தை நடந்தினார் ரவிக்குமார். படக்குழுவினர் அனைவரும் இந்த விருந்தில் கலந்துகொண்டு உற்சாகமாக கொண்டாடினர்.

அப்போது படத்தை டிசம்பரில் வெளியிட்டுவிடும் திட்டத்தில் இருப்பதாக தெரிவித்தார் ரவிக்குமார்.

‘மன்மதன் அம்பு’ காதல் பிளஸ் காமெடி விருந்து விரைவில் திரையில்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி