செய்திகள்,பரபரப்பு செய்திகள்,முதன்மை செய்திகள்,விளையாட்டு ஐ.பி.எல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கைமாறியது!…

ஐ.பி.எல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கைமாறியது!…

ஐ.பி.எல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கைமாறியது!… post thumbnail image
சென்னை:-6-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் நடந்த சூதாட்டம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு கடந்த மாதம் அளித்த தீர்ப்பில், ஐ.பி.எல். அமைப்பில் தொடர்புடையவர்கள் இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் தேர்வில் போட்டியிட தடை விதித்தது. இதனால் இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் பதவியில் இருந்து ஒதுங்கி இருக்கும் என்.சீனிவாசன், தான் நிர்வாக இயக்குனராக இருக்கும் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தால் நிர்வகிக்கப்படும் ஐ.பி.எல். அணியான சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாக பொறுப்பில் இருந்து விலகினால் மட்டுமே இந்திய கிரிக்கெட் வாரிய தேர்தலில் போட்டியிட முடியும் என்ற நிலை உருவானது. எனவே என்.சீனிவாசன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகத்தில் தொடருவாரா?… அல்லது இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் பதவிக்கு போட்டியிடுவாரா?… என்ற கேள்விக்குறி எழுந்தது.

இந்நிலையில் இந்திய சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் இயக்குனர்கள் கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது. கூட்டம் முடிந்த பின்னர் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் என்.சீனிவாசன் நிருபர்களிடம் பேசுகையில், ‘இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தால் நிர்வகிக்கப்பட்டு வந்த ஐ.பி.எல். அணியான சென்னை சூப்பர் கிங்ஸ்சின் உரிமத்தை முழுமையாக துணை நிறுவனமான சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் லிமிடெட் நிறுவனத்துக்கு மாற்றி இயக்குனர்கள் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் லிமிடெட் நிறுவனத்துக்கான மாற்றத்துக்கு அங்கீகாரம் கேட்டு இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு திட்டம் அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து இந்திய கிரிக்கெட் வாரியம் பரிசீலனை செய்து வருகிறது.

அணியின் பங்குதாரருக்கான பங்குகள், இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவன பங்கு தாரர்களுக்கு முறையான அனுமதி பெற்று அளிக்கப்படும். சிமெண்ட் உற்பத்தியில் மட்டும் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம் முழு கவனத்தையும் செலுத்துவதற்கான முதல் கட்ட நடவடிக்கை இதுவாகும்’ என்று தெரிவித்தார். சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு மற்றும் இந்திய கிரிக்கெட் வாரியம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளிக்க மறுத்த என்.சீனிவாசன், சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் லிமிடெட் நிறுவனத்தின் அணியை யார் நிர்வகிப்பது என்பது குறித்து அவர்களே பார்த்து கொள்வார்கள் என்று கூறினார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமம் கைமாறி இருப்பதன் மூலம் என்.சீனிவாசன் இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் தேர்தலில் மீண்டும் போட்டியிட முடிவு செய்து இருக்கிறார் என்று தெரிகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி