செய்திகள்,விளையாட்டு 3–வது டெஸ்ட்: ஆஸ்திரேலியா 5 விக்கெட் இழப்புக்கு 259 ரன்கள் குவிப்பு!…

3–வது டெஸ்ட்: ஆஸ்திரேலியா 5 விக்கெட் இழப்புக்கு 259 ரன்கள் குவிப்பு!…

3–வது டெஸ்ட்: ஆஸ்திரேலியா 5 விக்கெட் இழப்புக்கு 259 ரன்கள் குவிப்பு!… post thumbnail image
மெல்போர்ன்:-இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 3–வது டெஸ்ட் போட்டி இன்று மெல்போர்னில் தொடங்கியது. இந்திய அணியில் வருண் ஆரோன், ரோகித்சர்மாவுக்கு பதில் முகமது ஷமி, லோகேஷ்ராகுல் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். லோகேஷ் ராகுல் அறிமுக வீரர் ஆவார். ஆஸ்திரேலிய அணியில் ஸ்டார்க், மிச்சேல் மார்சுக்கு பதிலாக ஹாரிஸ், அறிமுக வீரர் ஜோபர்ன்ஸ் சேர்க்கப்பட்டனர்.

டாஸ் ஜெயித்த ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் சுமித் பேட்டிங்கை தேர்வு செய்தார். தொடக்க வீரர்களாக டேவிட் வார்னர், ரோஜர்ஸ் களம் இறங்கினர். 2–வது ஓவர் கடைசி பந்தில் டேவிட் வார்னர் ரன் எதுவும் எடுக்காமல் அவுட் ஆனார். உமேஷ் யாதவ் பந்தில் தவானிடம் கேட்ச் கொடுத்தார்.
அடுத்து ரோஜர்சுடன் வாட்சன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி பொறுப்புடன் விளையாடியது. இதனால் ஆஸ்திரேலியாவின் ரன் மளமள வென்று உயர்ந்தது. உணவு இடைவேளையின் போது ஒரு விக்கெட்டுக்கு 92 ரன் எடுத்து இருந்தது. இடைவேளைக்கு பின் ஆஸ்திரேலியா 30–வது ஓவரில் 100 ரன்னை தொட்டது. ரோஜர்ஸ், வாட்சன் அரைசதம் அடித்தனர். இந்த ஜோடியை முகமது ஷமி பிரித்தார். அவரது பந்தில் ரோஜர்ஸ் அவுட் ஆனார். அவர் 57 ரன் (126 பந்து, 5 பவுண்டரி) எடுத்தார்.

அதற்கு அடுத்த ஓவரில் வாட்சன் (52 ரன்) ஆட்டமிழந்தார். அவரது விக்கெட் அஸ்வின் கைப்பற்றினார். அப்போது ஆஸ்திரேலியா 3 விக்கெட்டுக்கு 115 ரன்னில் இருந்தது. அதன்பின் ஜோடி சேர்ந்த கேப்டன் ஸ்டீவன் சுமித்– ஷான் மார்ஷ் இருவரும் பொறுமையுடன் விளையாடினர். இதனால் ஆஸ்திரேலியாவின் ரன்னின் வேகம் குறைந்தது. 52–வது ஓவரில் 150 ரன்னை கடந்தது. தேனீர் இடைவேளையின் போது 3 விக்கெட்டுக்கு 174 ரன் எடுத்தது. சுமித் 34 ரன்னும், மார்ஷ் 32 ரன்னும் எடுத்து இருந்தனர்.தேனீர் இடைவேளைக்கு பின் ஷான் மார்ஷ் அவுட் ஆனார். முகமது ஷமி பந்தில் டோனியிடம் கேட்ச் கொடுத்தார். அவர் 32 ரன் எடுத்தார். ஸ்கோர் 4 விக்கெட்டுக்கு 184 ரன் இருந்தது. அடுத்து புதுமுக வீரர் ஜோபர்ன்ஸ் சுமித்துடன் ஜோடி சேர்ந்தார். சுமித் அரை சதம் அடித்தார். 66–வது ஓவரில் ஆஸ்திரேலியா 200 ரன்னை கடந்தது. ஜோபர்ன்ஸ் 13 ரன்னில் அவுட் ஆனார். அவரது விக்கெட்டை உமேஷ் யாதவ் கைப்பற்றினார்.அடுத்து சுமித்துடன் விக்கெட் கீப்பர் ஹாடின் ஜோடி சேர்ந்தார். இருவரும் விக்கெட் விழாமல் இருக்கும் வகையில் பொறுமையுடன் விளையாடினார்கள். இன்றைய ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா 5 விக்கெட் இழப்புக்கு 259 ரன் எடுத்திருந்தது. சுமித் 72 ரன்னிலும், ஹாடின் 23 ரன்னிலும் களத்தில் உள்ளனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி